ஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமானபாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் படுகொலைச் சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, இதுவரையில் நாடு திரும்பவில்லை என்றும், அவருக்கு இன்றைய தினம் சிங்கப்பூர் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் அவர் சார்பில் மன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன அல்விஸ், பாரத லக்ஷ்மனின் கொலைச் சந்தேகநபரான துமிந்த சில்வாவை கைது செய்யுமாறு தான் ஏற்கனவே விடுத்த உத்தரவு இன்றும் அமுலில் உள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், மன்றில் ஆஜரான இரகசிய காவற்துறையினர், மேற்படி கொலை தொடர்பில் துமிந்த சில்வாவிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தை சட்டமா அதிபருக்கு அனுப்பி ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.
இதேவேளை, பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மகள், நீதிமன்றத்தை அவமதித்தார் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கூறுவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்ட நீதவான், இது தொடர்பில் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்றும் கூறினார்