செய்திகள்

இணைப்புக்கள்

உங்கள் அபிப்பிராயங்கள்

News Articles

நிலமும் போனது நீரும் போனது.. குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா:-

 

நிலமும் போனது நீரும் போனது.. குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா:-

 

ஈழத்தின்  வலிகாமப்பகுதியில்  நிலத்தடி நீரிற் கழிவு எண்ணை  கலந்திருப்பது அண்மைக் காலத்தில் அறியப்பட்டுள்ளதுடன் அது ஒரு  பாரிய  சூழலியல் மற்றும் வாழ்வாதரப் பிரச்சனையாக   பலதரப்பாலும் உணரப்பட்டுள்ளது. ஆனால் உணர்ந்து கொள்ள வேண்டியவர்களால் உணர்ந்து கொள்ளப்படவில்லை.


பெற்றோலிய உற்பத்தியின் வரலாறு 1850 இல் ஆரம்பிக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை மசகு எண்ணையை மூலப்பொருளாகக்கொண்ட உற்பத்திப் பொருட்கள் மனித வாழக்கையில் இருந்து பிரிக்கப்பட முடியாத பலநன்மைகளைத் தருகிற பாகத்தை எடுத்துக்கொண்டுள்ளன. ஆனால் அதே அளவுக்கு எண்ணையானது சூழலியலுக்கும் உலக உயிரினத்துக்கும் பிரச்சனைகளையும் உண்டு பண்ணும் ஒன்றாகவும் மாறி இருக்கிறது. (உலகப்பொருளாதாரமும் அரசியலும் எண்ணையை மையப்படுத்தியதாக இருப்பது வேறொரு பரிமாணம்.)


கடந்த இருநூறு வருடங்களில் சிறிதும் பெரிதுமாக எண்ணை சம்பந்தப்பட்ட விபத்துக்கள் பல நிகழந்துள்ளன. இவற்றைத்தவிர  திட்டமிடப்பட்டு அல்லது  குறைந்த பட்ச சூழலியற் பிரக்ஞை கூட இன்றி மேற்கொள்ளப்பட்ட எண்ணை சம்பந்தமான நாசகார வேலைகளும் நிகழ்ந்துள்ளன.


ஈராக் யுத்தத்தின் போது வேண்டுமென்றே எண்ணைக் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டு  இலட்சக்கணக்கான எண்ணெய் மண்ணின் மேற்பரப்பில் சீறி விழுந்து பரவியது.


உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இன்னுமொரு எண்ணை தொடர்பான நாசகார வேலையை நையீரியாவின் டெல்ரா பிரதேசத்தில் பல்தேசிய எண்ணை நிறுவனமான ஷெல்லும் சில நாசகார உள்ளூற் சக்திகளும் ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக நையீரியாவின் மிக வளமான லெட்ரா பிரதேசம்( யாழ்க்குடா நாட்டை விடவும் பெரியதான அளவு கொண்ட பிரதேசம்)  நாசமாகிப்போயுள்ளது.

இப்பிரச்சனையில் உள்ளூர் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் எனக் கேட்க வேண்டாம். சுண்ணாகச் சம்பவத்தில் எப்படி எங்களுடைய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்  நடந்து கொள்கிறார்களோ அப்படியே தான் அங்கேயும். இவர்கள் அங்கு போனவர்களோ அவர்கள் இங்கு வந்தவர்களோ என வியக்கவேண்டாம். (தமிழர்களின் பூர்வீகம் ஆபிரிக்கா எனவும் ஒரு தகவல் உண்டு)


கடந்த காலத்தில் உலகெங்கிலும் நிகழ்ந்த மசகெண்ணை தொடர்பான விபத்துக்கள் பூமியின் மேற்பரப்புகளிலும் கடலின் மேற்பரப்புகளிலுமே அதிகளவு நிகழ்ந்துள்ளன. ஆழியின்  அடியில் நிகழ்ந்த எண்ணைக்கசிவுகளும் நீரின் மேற்பரப்புக்கு வந்து நுண் துகள்களாகிச் சிதறிப் பெரும் சமுத்திரத்தின் துளிகளுடன் கலந்து விடுகின்றன. மண்ணின் மேற்பரப்பிலோ நீரின் மேற்பரப்பிலோ விடப்படும் எண்ணைக்கழிவுகளைத் தற்பொழுது இருக்கும் தொழினுட்ப அறிவுகளைப்பயன்படுத்தி வேறுபடுத்திப்பிரித்து எடுத்துக் கொள்வது ஒப்பீட்டளவில் இலகுவானது. ஆனால் நிலத்தடி நீர் வலையமைப்பில் கலந்துள்ள கழிவு எண்ணையை அகற்றி அதனைச் சுத்தப்படுத்துவது கடினம்.


பூமியின் மேற்பரப்பில் அல்லது நீரின் மேற்பரப்பில் இருக்கும் எண்ணைத்துளிகளின் ஒருபகுதி சூரிய ஒளி உள்ள போது பிரிவடைந்து வாயு ஆகிவிடுகின்றன. பிறிதொரு பகுதி நுண்ணுயிர்த்தாக்கத்தால் பிளவு பட்டு ஆபத்தற்ற துகள்களாகிப் போகின்றன. இந்த மாற்றங்கள் நிகழக் குறைந்தது முப்பது வருடங்களாவது ஆகும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இவ்வளவு நிகழ்ந்தும் அழியாது எஞ்சுகிற பகுதிகள் வீழ்படிவுகளாக  மண்ணீலும் நீரிலும் தங்கி விடுகின்றன. இவை சூழலியலில் ஏற்படுத்தும் தாக்கங்கள் அளப்பரியவை. இவை மனிதரில் மட்டுமல்ல கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விலும் பாரிய பிரச்சனைகளை உண்டாக்கும்.


இந்த நிலையிலும் இவைகுறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இவற்றால் சூழலியல் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என சான்றிதழ் வழங்குவதற்கும் பிரச்சாரப்படுத்துவதற்கும் உலகை அழிக்கும் பல்தேசிய நிறுவனங்கள் ஒரு புறத்தில் நிதி அளித்து வருகின்றன.


வலிகாமத்தின் நிலத்தடி நீர் வலையமைப்பு அப்பிரதேசத்தின்  குருதிச் சுற்றோட்டம் போன்றது, அதற்குள் துளையிட்டு  400,000 லீற்றர் கழிவு எண்ணை உட்செலுத்தப்பட்டிருக்கிறது. துளையிட்டுக் கழிவெண்ணையை உள்விடும் யோசனையை தெரிவித்து நடைமுறைப்படுத்த தொடங்கிய வெண்ணைகள் சூழலியல் பற்றிய எந்தப்புரிதலும் அற்ற தொலை நோக்கற்ற லாபத்தை மட்டுமே  நோக்கமாக கொண்ட நாசகார நிறுவனங்கள். ஆனால் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டும் அங்கீகரித்துக் கொண்டும் இருந்தவர்களை  என்னவென்பது. இது தொடர்பாக  குளோபல் தமிழில் வெளியான கட்டுரைகளை வாசித்த போது கோபமும் கடும் துயரமும்  உண்டானது.


குறிப்பாக இன்று வெளியான கட்டுரையை (தண்ணீர்த் தாகம்! வைத்தியர். க. செந்தூரன்) வாசித்த போது தமிழ் அதிகாரிகள் மீதும் அரசியல்வாதிகள் மீதும் இருந்த கொஞ்ச நம்பிக்கையும் போய்விட்டது. மக்களின் வாழ்வாதாரத்தை மோசமாகப்பாதிக்கிற ஒரு விடையத்தை மூடி மறைப்பதற்கு எவ்வளவு தமிழர்கள் எவ்வளவு முயற்சிகளைச்  செய்திருக்கிறார்கள் இன்னமும் செய்து கொண்டிருக்கிறார்கள்  என்பதை அறிய முடிகிறபோது மனம் உடைந்து போகிறது.


மகிந்தவும் கோத்தபாயவும் அதிகாரத்தில் இருந்து அகன்று விட்டதாக நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் அவர்கள் தமிழ் அரசியல் வாதிகளின் வடிவிலும் அதிகாரிகள் வடிவிலும் இன்னமும் உயிர்வாழ்கிறார்கள்.


ஏன் இதனைச் சொல்கிறேனென்றால் இலங்கையின் அரசியல் வரலாற்றில்  எந்த மானுட உணர்வும் இன்றிச் சூழலியல் நாசங்களைப் புரியக்கூடிய திட்டங்களை இலங்கையில் நடைமுறைப் படுத்தியவர்களுள்  மகிந்த அரசைச் சேர்ந்தவர்கள் முக்கியமானவர்கள். தென்னிலங்கையில் மழைக்காடுகளை அழித்து வீதி அமைக்க முயன்றவர்கள்; வன்னியில் காடுகளை அழித்தவர்கள்;  தென்பகுதியில் தொழிற்சாலைக் கழிவுகளால் நீர்மாசுபடுதலுக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியவர்கள் எனப் போன அரசாங்கம் நிறையப் புண்ணியவான்களால் நிரம்பியிருந்தது. சுண்ணாக மின்னிலையத்திற்கான அனுமதியை தற்போதைய  எரிசக்தி அமைச்சரே வழங்கியிருந்தார்.  சுன்ணாகம் மின்நிலையத்தின்  பங்குதாரராகக் கோத்தபாய அவர்கள் இருக்கிறார்கள் எனபதையும் இங்கு நினைவு கூர வேண்டும்.


வளர்ச்சியடைந்த நாடுகளில் சமையற் கழிவு எண்ணையை வெளியே ஊற்றினாலே குற்றமாகக் கருதப்படும்.  பெற்றோலிய விற்பனை நிலையங்களின் கீழே தகுந்த பாதுகாப்புக்களைச் செய்து சிதறும் எண்ணைத்துளிகள் மண்ணுட் செல்லாதவாறு பாதுகாகிறார்கள். இந்நாடுகளின் பல பிரதேசங்கள் தூய நிலத்தடி நீரைக்கொண்டிருப்பதால் அவற்றைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாகப் பிரகடனம் செய்திருக்கிறார்கள்.


ஆனால் நாங்கள் என்ன செய்கிறோம். இயற்கை தந்த வரத்துள் எண்ணையைக் கழிசடைகள் விடுமட்டும்  “மோட்டைப்பாத்துக் கொண்டிருந்து விட்டு” இப்பொழுது தெரிய வந்ததும் அதற்கெதிராகப்போராடுபவர்களை அமுக்கப்பார்க்கிறோம்.


தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனம் தேடும் கூட்டமைப்போ (த.தே.கூ- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனப்பிழையாக வாசிப்பவர்கள் வாயுள் கழிவெண்ணை போக!) மக்களின் எதிர்ப்புணர்வை நீர்த்துப்போகச் செய்யப் பாடுபடுகிறது.


இறுதியாக இனி நிகழ்ப்போகும் ஒரு காட்சியை உங்கள் முன் விரித்து வைக்கிறேன். இதனை நாடகமாக யாரும் அளிக்கை யாக்கினால் அதற்கு நான் பொறுப்பல்ல.


இன்னும் சில காலத்தில் சுண்ணாகம் மின்னிலையம் இன்னும் நிறையத் துளைகளை இட்டு வெற்றிகரமாக இயங்குகிறது. நிலத்தடி நீரில் எண்ணை கலக்கும் பிரச்சனையைப் பெரிதாகாமல் பார்த்து வெற்றிகரமாகக் கையாண்ட அரசியல் வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் காவல் துறைக்கும் சுன்ணாகம் மின்னிலையத்திற்குப் பொறுப்பான நிறுவனம் பாராட்டு விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்கிறது. விவசாய அமைச்சர் அந்த விழாவில் யாரும் கொக்கா கோலா பானம் அருந்தக்கூடாது என உத்தரவிட்டு விடுகிறார். நிறுவனமும் சத்தம் போடாமல் எண்ணை கலந்த நீரில் செய்யப்பட்ட பானங்களைக் குடிக்கக்கொடுத்து விடுகிறது. அதனைக் குடிந்தவர்கள் நோய்வாய்ப் படுகிறார்கள். சுகாதார அமைச்சரிடம் செல்கிறார்கள். அவரோ இதொரு பிரச்சனையா எனக் கேட்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும்  அவர்களது நாளங்களில் துளை போட்டு 5மில்லி லீற்றர் கழிவெண்ணையை ஏற்றி விட்டு எல்லாம் சரிவருமென்கிறார். பின்னர்  எண்ணை என்ற சொல்லை சுகாதார அமைச்சில் தடை செய்கிறார்.


சில நாட்களின் பின் ரூபவாகினியில் இலங்கையின் எரிபொருட்துறை அமைச்சரான சம்பிக்க வலிகாமம் பகுதியில் நிகழும் குழாயடிச் சண்டைகளின் பின்னணியில் விடுதலைப்புலிகள் இருக்கின்றனர் எனக்குற்றம் சாட்டுகிறார்.


சில முற்போக்கான இளைஞர்கள் கே.பாலசந்தர் அவர்களின் தண்ணீர் தண்ணீரை எங்கே பார்க்கலாம் என youtube இனைத் துளாவத் தொடங்குகின்றனர்.


தனம் தேடும் கூட்டமைப்போ அடுத்த தேர்தலுக்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் படத்தை எடுத்துச் தூசு துடைக்கத் தொடங்குகின்றது.


இனிப்பேசி என்ன  பிரயோசனம்?  நிலமும் போனது நீரும் போனது.


தேவ அபிரா
3-2-2015
நன்றி:
 

https://milieudefensie.nl/publicaties/factsheets/oilspills-in-the-niger-delta

http://www.alletop10lijstjes.nl/top-10-grootste-olierampen/

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/116159/language/ta-IN/article.aspx

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115578/categoryId/2/language/en-US/------.aspx

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/116122/categoryId/2/language/ta-IN/-----.aspx

 

 

அனுப்புக Home, Srilankan News, Articles
அபிப்பிராயங்கள்
(1) அபிப்பிராயங்கள்
03-02-2015, 23:55
 - Posted by Anonymous
Another Bodo, Niger delta in JAFFNA,delta, CEYLON by genocidal state of SRI LANKA!!!!.
http://weblogs.amnesty.nl/…/500-x-220-136227_Oily_mud_Bodo_…


இலங்கையின் வரலாற்றில் எந்த மானுட உணர்வும் இன்றிச் சூழலியல் நாசங்களைப் புரியக்கூடிய திட்டங்களை இலங்கையில் நடைமுறைப் படுத்தியவர்களுள் மகிந்த அரசைச் சேர்ந்தவர்கள் முக்கியமானவர்கள். வன்னியில் காடுகளை அழித்தவர்கள்; சுன்னாக மின்னிலையத்திற்கான அனுமதியை தற்போதைய எரிசக்தி அமைச்சரே வழங்கியிருந்தார். சுன்னாகம் மின்நிலையத்தின் பங்குதாரராகக் கோத்தபாய அவர்கள் இருக்கிறார்கள் எனபதையும் இங்கு நினைவு கூர வேண்டும்.
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 

 

 

 

 
.