மனித உரிமை பற்றிப் பேசும் நாங்கள் பெண்களுக்கு...

போர் முடிந்து ஒரு வருடமும் இரண்டு மாதங்களும் நிறைவடைந்து விட்ட போதும் இன்னமும் வெற்றிக் களிப்புகள் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. வெற்றிக் கொண்டாட்டங்களின் ஓசையில் வேளையில் அதனூடாக மனித அவலக்குரல்கள் மறைக்கப்படுகின்றமை யாவரும் அறிந்ததே. இருப்பினும் ஆண் ‐ பெண் இருபாலாரிலும் தற்போது பெண்கள் அதாவது தொழில் புரிகின்ற மற்றும் குடும்பப் பெண்கள் மேலதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டிய பாதுகாப்புப் பிரிவினரால் துன்புறுத்தப்படுகின்றமை அதிகரித்து வருகின்றது. இவற்றில் குறிப்பிட்ட ஓரிரண்டு வழக்குகள் மட்டுமே விசாரணை வரைக்கும் வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு வருகின்ற வழக்குகள் கூட எவ்வளவு தூரம் காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனங்களினால் கவனத்தில் கொள்ளப்படுகின்றன என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். போர் இடம்பெற்ற பிரதேசங்களில் இடம்பெற்ற உயிரழிவுகள் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகள் சொல்ல முடியாத சொத்திழப்புகள் முதல் எம்மவர்கள் இழந்தவை ஏராளாம். அவ்வாறு இழந்த பின்னரும் குடும்ப அங்கத்தவர்களைத் தடுப்பு முகாம்களிலும் அங்கவீனர்களாகவும் கொண்டுள்ள குடும்பங்களில் ஆண்களற்றுத் தனித்துள்ள பெண்கள் ஏராளம் பேர்வரை மீள் குடியேற்றப்பட்ட பகுதிகளில் தனித்து வாழ்கின்றனர். அவ்வாறு வாழ்கின்ற போது கிடைக்கின்ற நிவாரணங்களை மட்டும் நம்பியே பல பெண்கள் தமது குடும்பத்தைப் பிள்ளைகளைப் பராமரிக்கின்றனர். மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பல பகுதிகள் குறிப்பாக மாந்தை மேற்கு உட்பட வன்னிப்பகுதிகளில் கூடார வாழ்க்கையும் தற்காலிக இடங்களுமே பல குடும்பங்களுக்குத் தஞ்சமாக உள்ளன. யுத்தம் முடிந்த பின்னர் அரசு இடம்பெயர்ந்தோர் தொடர்பாகப் பேசும் போது இழந்த உயிர்களைத் தவிர மற்றைய அனைத்தையும் எம்மால் திருப்பி வழங்க முடியும் என்ற கருத்தை வெளியிட்டமை நாம் அறிந்த விடயம். இதனை நம்பி மீண்டும் சொந்த இடங்களுக்கச் சென்ற மக்கள் பெறுவது உலர் உணவு பொருட்கள் மட்டுமே. அதுவும் ஒரு மாதத்திற்கு ஒரு தடவையில் வழங்கப்படும். மீள் கட்டுமானம், புனரமைப்பு என்பன வெறும் வாய் வார்த்தைகளாகிப் போன சந்தர்ப்பத்தில் கூடார வாழ்க்கையும் அவலமுமே வன்னி மக்களுக்கு உரியதாகி விட்டது.
இவ்வாறு உயிர்கள், உடைமைகள், சொத்துகள் என்பவற்றை இழந்து கேட்க இடமின்றி அங்கவீனத்தோடும் மனஉளச்சலோடும் வாழ்கின்ற பெண்கள் நாளாந்தம் இரவுகளில் வன்முறைகளுக்கம் துன்புறுத்தலுக்கும் இலக்காவது வேதனைக் குறியது. அதிகாரம், பணம் மற்றும் ஆயுத பலம் என்பவற்றின் செல்வாக்கோடு இருப்போரை சாதாரண பெண்கள் எவ்வித அரசியல் பலமுமின்றிய பொது மக்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்? இருந்த போதும் அண்மையில் விஸ்வமடுப் பிரதேசத்தில் இடம்பெற்ற துன்புறுத்தலில் பாதிக்கப்பட்ட பெண்களே நேரடியாக வந்து முறையிட்டு குற்றவாளிகளை அடையாளம் காட்டியுள்ளமை ஆச்சரியப்பட வேண்டியதே. ஏனெனில் தம்மைத் துன்புறுத்தியவர்கள் இராணுவத்தினர் என்று நன்றாகத் தெரிந்திருந்த போதும் பயமின்றிச் சென்று முறையிட்டதோடு மட்டுமன்றி ஆளணிவகுப்பில் கூட அடையாளத்தை உறுதிப்படுத்திய அப்பெண்கள் எவ்வளவு தூரம் உண்மைக்காகப் போராடியுள்ளார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இன்னும் எத்தனை எத்தனை கொடுமைகள் வெளிவராது மறைந்துள்ளதோ அவை வேறு. அதுமட்டுமன்றி இன்று பல பெண்கள் மேலதிகாரிகள் மற்றும் ஆட்சி அதிகாரம் கையில் வைத்துள்ளவர்கள் என்ற தைரியத்திலும் குறிப்பாக பெண்களையே மாறி மாறி துன்புறுத்தலுக்கும் வன்புணர்சிக்கும் ஆளாக்குவதென்பது நாட்டில் பெண்களுக்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மற்றும் கவனிக்கப்படாதுள்ள வன்முறையின் உச்சநிலை என்றே கூறலாம். ஏனெனில் யாழ்ப்பாணம் வேலணைப் பிரதேசத்தில் அமைந்துள்ள வைத்தியசாலை வைத்தியர் மேற்கொண்ட வெறிச் செயல் இன்று மரணத்தில் முடிந்துள்ளது. படித்தவர்கள், உயிர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பான பதவியில் உள்ளவர் தனக்குக் கீழ் தொழில் புரிகின்ற பெண்ணைத் துன்புறுத்தியதால் ஏற்பட்ட உயிரிழப்பு என்பது எவ்வளவு பாரதூரமான செயல் என்பதை ஏனோ பலரும் கண்டும் காணாதது போல இருக்கின்றனர். பொறுப்பான அமைச்சுப் பதவிகளில் உள்ள அமைச்சர்கள் கூட கண்டிக்காது மௌனம் சாதிப்பது இன்னமும் இன்னமும் இவ்வாறான வன்முறைகளைத் தூண்டும் செயலை ஊக்குவிப்பதாகவே கொள்ளலாம். வேலணைப் பிரதேசம் என்பது இற்றைக்கு பல வருடகாலமாக குறிப்பிட்ட தமிழ்க் கட்சியொன்றின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தீவுப்பகுதியாகும். அப்பிரதேச மக்கள் தமது வாக்குகளை அக்குறிப்பிட்ட கட்சிக்கே அளித்து வந்த போதும் இன்று அப்பிரதேசத்தில் ஓர் அநியாயம் இடம்பெற்ற வேளையில் கூட அக்கட்சி பாரமுகமாக இருப்பது குற்றம் செய்யும் தரப்பினருக்கு ஆதரவு வழங்குவதாக அமைவதோடு நம்பி வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வதாக அமைகின்றமை வேதனைக்குரியது.
இவ்வாறு கிராமங்களில் அதாவது மீள் குடியேற்றம் இடம்பெறும் பிரதேசங்களில் நடக்கின்ற துன்புறுத்தல்கள் மற்றம் தொழில் ஸ்தலங்களில், வீதிகளில், வீட்டிற்கே வந்து செய்கின்ற அத்துமீறல்களை ஏன் இன்னமும் தணிக்கைக்குள்ளாகியே உள்ளன. பெண்கள் தொடர்பாக செயற்படும் நிறுவனங்கள், அரச உத்தியோகத்தர்கள், புத்திஜீவிகள், ஊடகங்கள் பாராமுகமாக இருப்பது ஏன்? அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடு செய்கின்ற போது அல்லது விசாரணை என வருகின்ற போது ஏன் சாட்சியாளர்களுக்கும் அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆதரவாகச் செயல்படுவது குறைவாகியுள்ளது. பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தோர் தொடக்கம் சிறுபான்மை இனத்துப் பெண்கள் வரை அனைவரும் கிராமத்துப் பெண்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதில் தயக்கம் மற்றும் பாராமுகம் காட்டுவது அவதானிக்கப்பட்ட உண்மை என்பது வேதனைக்குரியது. உண்மையிலேயே தற்கால கட்டத்து இடப்பெயர்வுகள் மற்றும் புதிய நபர்களின் ஊடாட்டம் என்பன காரணமாக எல்லாவிதமாகவும் சிக்கலுக்கு முகம் கொடுப்பது பெண்களே. மனித உரிமை பற்றிப் பேசும் நாங்கள் பெண்களுக்கு எதிராக பிரயோகிக்கின்ற பாலியல் வல்லுறவு கூட மனித உரிமைமீறல் என்பதை ஏன் பேசமறுக்கின்றோம்? விஸ்வமடுவில் இடம்பெற்ற வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இருக்கும் துணிச்சல் மற்றும் தைரியம் ஏன் எமக்கு இல்லாது போய்விட்டது?
இலங்கையைப் பொறுத்த வரையில் பெண்களது உரிமை தொடர்பான நகர்வுகள் 1930 கள் தொடக்கம் பெண்களால் தீவிரப்பட்டிருந்தது. ஊதாரணமாக 1931 இல் இலங்கைப் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. இது தென்னாசிய நாடுகளில் பெண்கள் வாக்குரிமை பெறுவதற்கு அடித்தளமாக அமைந்தது. ஆனால் இன்று பெண்கள் விவகார அமைச்சராக ஆணொருவர் இருப்பது பெண்கள் தொடர்பான உரிமைகள் எவ்வளவு தூரம் மறுக்கப்பட்டுள்ளது என்பதை தெட்டத் தெளிவாக்கின்றது.
பெண்கள் பிரதிநிதித்துவம் குறைகின்ற போது பெண்கள் தொடர்பான அமைச்சிற்கு ஆணொருவரைத் தெரிந்தமை எவ்வளவிற்குப் பாதிப்பானது என்பது யாவரும் அறிந்ததே. இருப்பினும் நாம் மௌனமாக இருப்பது எமக்கே ஆபத்தானது. ஏனெனில் அண்மையில் இடம்பெற்ற பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பாக பெண்கள் விவகார அமைச்சரின் எவ்வித கருத்தும் இடம்பெறவில்லை. ஆவர் பெரும்பாலும் சிறுவர்கள் தொடர்பாகவே கருத்துகளை முன் வைப்பதில் இருந்து அவர் பெண்கள் உரிமைகள் தொடர்பாக எவ்வளவு தூரம் ஆர்வமாக செயற்படுகிறார் என்பது வெளிப்படை.
இவ்வாறு பெண்களுக்காக செயற்பட்டு முடிவெடுக்கும் பதவிகளில் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்? போர் முடிவடைந்த நாட்டில் முடிவெடுக்கக் கூடிய பதவிகளில் 50 வீதம் பெண்கள் இருக்க வேண்டியது அவசியம். இதனையே ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் 1325 சமவாயத்தில் கூட யுத்தத்தின் பின்னர் தீர்மானம் எடுக்கும் பொறுப்பில் பெண்களை உள்வாங்குவதன் அவசியத்தை உணர்த்தி நிற்கின்றது. ஏனெனில் போரினால் அதிகளவில் பாதிப்படைவது பெண்களே என்பது நாம் அறிந்த உண்மை. கணவனை இழந்து, பிள்ளைகளை இழந்து ஊனமான மனத்தோடு பெரும் சவால்களை பெண்களே அதிகம் எதிர்கொள்கின்றனர். ஆகவே பெண்களது பிரச்சினைகள் மற்றும் அவர்கள் கேட்கின்ற கேள்விகள் போன்றவற்றிற்கு யார் பதில் சொல்வது? கொள்கையளவில் மாத்திரம் வேலை செய்வோர் என்ன செய்கின்றனர்? அவர்களது கொள்கைகள் பாதிக்கப்பட்ட பெண்கள் பிரதேசங்களில் இன்னமும் எழுத்து வடிவில் மாத்திரமே உள்ளன. அதிகாரத்தைக் கையில் வைத்திருப்போர் இழைக்கும் தவறுகளை சட்டத்தின் பிடியில் நிறுத்துவதற்கு அதிகாரத்தில் பெண்கள் சார்பாகப் பேசுவதற்கு யார் முன்வருகின்றார்கள்? சட்டத்தில் மற்றும் கொள்கையளவில் என்ன உள்ளது என கிராமிய மட்டத்தில் வாழ்கின்ற பலர் அறிவதில்லை. ஆகவே போரினால் பாதிக்கப்பட்டதோடு அனைத்தையும் இழந்த எம்பெண்களுக்கு வன்முறைகளில் இருந்து விடுவிப்பதற்கு எவ்வாறான வழியினை மேற்கொள்ளப் போகின்றோம்?
தடுப்பு முகாம்களில் வாழ்கின்ற பெண்கள், முன்னால் பெண்போராளிகள், இடம்பெயர்ந்து வந்தபோது சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டோர்கள் போன்றோர் பற்றி உள்நாட்டில் மற்றும் அயல்நாட்டிலுள்ளோர் கருத்துகளை முன்வைக்கின்றனர். தடுப்பு முகாம்களில் உள்ளோரது பாதுகாப்பு மற்றும் உரிமைகள் என எல்லாவிதமான விடயங்களும் அலசப்படுகின்றன. அவ்வாறு கூறும்போது பலரும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டமை பற்றியும், கர்ப்பமான கதைகளையுமே அதிகம் பேசுகின்றனர். அவ்வாறு கூறுவதனால் அங்கிருந்து வெளியே வருகின்ற போது அந்தப் பெண்களின் எதிர்காலம் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. தற்போது முகாம்களில் மட்டும் அல்ல தொழில் புரிகின்ற இடங்களில் மற்றும் அவரவர்களது வீடுகளிலேயே வைத்து பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்ட வல்லுறவிற்கு உட்படுத்தப்படுகின்றனர். ஆகவே பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பாக பேசும் ஒவ்வொருவரும் என்ன செய்கின்றோம்? தடுப்பு முகாம்களில் உள்ள பெண்கள் வெளிவருகின்ற போது அவர்களுக்கு குடும்ப வாழ்க்கை என்பது கேள்விக்குறியாக ஆகிவிடும் நிலை உள்ளது.
அதுமட்டுமன்றி கடந்தகாலத்தில் போராட்டத்தில் இருந்து பிரிந்து வந்து இன்று அரசியல் நீரோட்டத்தில் தம்மை இரண்டறக் கலந்து கொண்டதாகக் கூறுகின்றவர்கள் பலரும் சமூகத்தில் வாழ்கின்ற பெண்கள், சிறுவர்கள் பற்றி சிறிதும் கவலைப்படாது தமது எதிர்கால அரசியல் வாழ்க்கை பற்றியே அதிகம் அக்கறை கொள்கின்றனர். யுத்தத்தை முன்னெடுத்தோர் மற்றும் அதற்குப் பெருமளவில் ஆதரவு வழங்கி முன்னணியில்;; செயற்பட்டோர்கள் இன்று எவ்வித தடையுமின்றி பொது மன்னிப்பின் அடிப்படையில் சுதந்திரமா நடமாடும் போது, யுத்தத்தில் பங்கு கொண்டோர் மற்றும் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டோர், சந்தேகத்திற்குரியோர் என ஆண்கள், பெண்கள் இருபாலாரும் தடுப்பில் தமது வாழ்வை எவ்வித முடிவுமின்றி இருப்பது பக்கச்சார்பான நிலமையை தெட்டத் தெளிவாக்குகின்றது. இதுமட்டுமன்றி பேராட்ட காலத்தில் யுத்தத்திற்கும் மற்றும் ஆயுதக் கொள்வனவிற்கும் நிதி திரட்டிய புலம்பெயர் தமிழ் சமூகம் இன்று அதே யுத்தத்தால் பாதிக்கப்பட்டதோடு விரும்பி போராட்டத்திற்கு சென்றவர்களைப் பற்றியோ அல்லது கட்டாயப்படுத்தப்பட்டு உள்வாங்கப்பட்டு தடுப்பில் இருக்கும் இளைய சமூகம் பற்றியோ அவர்களின் மேம்பாடு மற்றும் புனர்வாழ்வு தொடர்பாக என்ன செய்துள்ளது? இன்னமும் தங்களுக்குள் ஒற்றமையின்மை மற்றும் பதவிப் போட்டிகளுள் அப்பாவிகள் பலரது துயரத்தை அரசியல்மயப்படுத்துகின்றது. ஆகவே பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிப் பேசும் போது அவதானமாக நாம் செயற்பட வேண்டியது அவசியமாகின்றது. அதுமட்டுமன்றி கணவன் தடுப்பு முகாம்களில் உள்ள எத்தனையோ பெண்கள் இன்று பிள்ளைகளுக்கு ஒருவேளை உணவிற்குப்படும் துன்பம் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. அவர்களது வருவாய் தொடர்பாக கருத்துகளை முன் வைக்கின்ற ஆண்கள் என்ன செய்ய முன்வந்துள்ளனர்? பேச்சாளர்களாக மட்டுமே பலர் இருப்பது வெளிப்படையான உண்மை. பாதிக்கப்பட்ட பெண்களின் வேதனையை அரசியல் பொருளாக்கி மேடைகளில் பேசி கைதட்டல்கள் வாங்குவதை மட்டுமே அவர்களால் செய்ய முடிகின்றது.
வடக்குக் கிழக்கு பெண்கள் அமைப்பு