செய்திகள்

இணைப்புக்கள்

உங்கள் அபிப்பிராயங்கள்

News Articles

இலங்கையில் காணாமல் போன ஊடகவியலாளர் குறித்த திரைப்படம் ஒன்று வெளியிடப்படவுள்ளது:

 

 

 
இலங்கையில் காணாமல் போன ஊடகவியலாளர் குறித்த திரைப்படம் ஒன்றை வெளியிடத் தயாராக உள்ளார் இலங்கையின் புகழ்பெற்ற சிங்கள நாடக மற்றும் திரைப்பட நடிகரும், நெறியாளருமான லின்டன் சேமகே.
 
'ஜேடு' எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம் இலங்கையில் காணாமல் போன ஊடகவியலாளர் ஒருவருடைய உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது எனத் தெரிய வருகிறது. 
 
கடந்த பல வருடங்களாக  அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலில் வசித்து வரும் லின்டன் சேமகே அண்மையில் சில மாதங்களாக இத்திரைப்பட வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.
 
இத்திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதி நெறியாள்கை செய்திருக்கிறார் லிண்டன் சேமகே. இதனைத் தயாரித்திருக்கிறார் அனுர கிரிபத்கல.
 
இலங்கை அமெரிக்க கூட்டுத் தயாரிப்பாக இது வெளிவரவிருக்கிறது. 2012 ஆம் ஆண்டு  ஆரம்பத்தில் இத்திரைப்படம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உட்பட பல நாடுகளில் திரையிடப்பட இருக்கிறது. 
 
நாடக நடிகராக தனது வாழ்வை ஆரம்பித்த லிண்டன் சேமகே மேடை நாடகங்கள் பலவற்றை நெறியாள்கை செய்திருக்கிறார். 
 
1993இல் மீஹரக்கா எனும் படத்தில் நடித்ததனூடாக திரைக்குள் பிரவேசித்தார் லிண்டன். பின்னர் 1998இல் பாததய, புரவந்தகளுவர, 200இல் மே மகே சந்தாய், 2002இல் சுழங்கிரில்லி, பிக்பொக்கட், சுது செவனாலி, 2006இல் மாட் கௌ கேர்ள் ஆகிய திரைப்படங்களில்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் இவர். 
 
இதில் பாததய, பிக்பொக்கட் ஆகிய இரு படங்களும் லிண்டனே நெறியாள்கை செய்த திரைப்படங்கள்.
 
தற்போது வெளிவரவுள்ள  'ஜேடு' அவர் நெறியாள்கை செய்துள்ள மூன்றாவது படம்.  
 
கடந்த 10 வருடங்களுள் ஏறத்தாழ ஐம்பதுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டுள்ளமையும், பல ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நூற்றுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் உயிரச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி அஞ்ஞாதவாசம் புரிகிறார்கள்.  
 
கடத்தப்பட்டு காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொடவை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபேய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் தாங்கள் கொலை செய்து கடலில் கொண்டு போய் போட்டதாக துமிந்த செல்வாவின் குண்டர் படையைச் சேர்ந்த ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 

 

 

 

 
.