செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

வாழும் காலத்தின் சித்திரங்கள் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - தமிழ்மாறன்

 

வாழும் காலத்தின் சித்திரங்கள் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - தமிழ்மாறன்

 

ஒரு காலத்தின் பல்வேறுபட்ட சித்திரங்களை இந்தத் தலைமுறையின் பிள்ளைகள் வரைந்திருக்கிறார்கள். எல்லா ஓவியங்களும் பெரு யுத்தத்திற்குப் பின்னர் பெரு அழிவிற்குப் பின்னர் மனங்களில் படிந்து கிடந்த வருணங்களாய் சிதறுண்டு இருக்கின்றன. இந்த ஓவியங்களை நாம் மிகவும் நெருக்கமாக அணுக வேண்டியிருக்கிறது. அப்படி அணுகுவது இந்த ஓவியங்களை வரைந்த இளந் தலைமுறையின் மனச்சித்திரங்களை நெருங்குவதாகதுடன் கொதித்து பிரவாகிக்கும் ஒரு கால கட்டத்தின் பன்முகங்களைக் வாசிக்க முடியும். 
 
படைப்புக்கள் அரசியல் ரீதியான இலக்கை நிலை நிறுத்தி படைக்கப்படுவதில்லை. ஆனால் படைப்புக்கள் முழுவதிலும் துண்டு துண்டுகளாயும் வெளிகளாயும் சிதறல்களாயும் இன்னு மின்னும் பல்வேறு நிலைகளில் அரசியல் படிந்துள்ளது. குழந்தைகளின் வார்த்தைகளில் அரசியலின் பொறித்தனம் இல்லாதிருப்பதைப்போலவே இந்த இளந் தலைமுறையின் ஓவியங்களிலும் அரசியலின் பொறித்தனம் இல்லாமல் இருக்கிறது. இவர்களின் ஓவியங்கள் முழுவதிலும் ஒரு யுகத்தின் கால கட்டத்தின் வாழ்வுச் சித்திரங்கள் மிகவும் இயல்பாய் வரைந்து படைக்கப்பட்டிருக்கின்றன. 
 
அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப்பீடத்தின் சித்திரமும் வடிவமைப்பும் துறையின் இறுதி ஆண்டு மாணவர்கள் தங்கள் சித்திரப்டைப்புக்களை 'முகிழ்' என்ற தலைப்பில் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் காட்சிப்படுத்தியிருந்தார்கள். 
 
மாணவர்கள் வரலாற்று அடிப்படையிலும் நுட்ப அடிப்படையிலும் பாடத்தைப் படிக்கும் வேளையில் மிகவும் அவசியமாக தாம் வாழும் காலத்தை பல்வேறு கோணங்களில் பார்த்துப் படிக்க வேண்டியிருக்கிறது. தமது கல்வியில் பெற்ற நுட்பங்களைப் பயன்படுத்தியும் தமது இயல்புக்கும் விருப்பு வெறுப்புக்கும் ஏற்பவும் பல்வேறு நிறங்களில் பல்வேறு கோடுகளில் பரல்வேறு கோணங்களில் மாணவர்கள் தங்கள் சித்திரங்களை வரைந்துள்ளார்கள். 
 
சித்திரங்களை வரைந்த இந்த மாணவர்கள் தங்கள் ஓவியம் பற்றிக் குறிப்பிட்ட வார்த்தைகள் அவர்களின் சித்திரத்தைப் பற்றிய கதையை முழுமையாக சொல்லிவிடவில்லை. தங்கள் கதைகளை, தங்கள் வாழ்க்கையை தங்கள் காலத்தை சொல்லுவதைவிட மனதின் சித்திரங்களாக வரைவதிலேயே இவர்களின் ஆளுமையும் ஈடுபாடும் வெளிப்படுகிறது. ஒவ்வொரு ஓவியமும் ஒரு பெரும் கதையைச் சித்திரமாகப் பரப்பியிருக்கிறது. காலத்தை துண்டு துண்டுகளாயும் நீளங்களாயும் கொலுவியிருக்கின்றன. 
 
சித்திரவடிவேல் ரவின்சனின் சித்திரம் கொலையின் இரத்தத்தை, வன்முறையின் குரூரத்தை சித்தரிக்கிறது. ஒடுங்கிய முகங்களும் பயம் பெருகிய முகங்களும் இரத்தம் ஊறிய கைகளும் நீலநிறமாகிய கைகளும் பச்சை நிறமான கைகளும் சிதறலாக வரையப்பட்டிருக்கின்றன. ஒரு யுகத்தில் நிகழ்ந்த வன்முறையின் சிதறலான தொகுதியை ரவின்சன் தனது ஓவியத்தில் வரைந்திருக்கிறார்.
 
சிதறிய வீட்டில் மறைந்து தெரியும் பழைய வீட்டின் நிழலை பசியநாதன் ஜெயபாலன் வரைந்திருந்தார். யுத்தமும் வன்முறையும் வீடுகளை சிதைத்து இருப்பைக் கலைத்திருக்கின்றன. ஒவ்வொருவருக்குள்ளும் வீடுகள் பற்றிய கதைகள் படிந்திருக்கின்றன. சிதைந்த வீடுகளின் தடிகளுக்குள் சுவர்களுக்குள் ஒரு பழம் வீடு மறைந்து நிழலாய் இருக்கிறது. இக்காலத்தில் வீடுகள் பற்றிப் பலருக்குள் இருக்கும் சிதைந்த நினைவுகளையும் கனவையும் ஜெயபாலன் தனது சித்திரத்தில் வரைந்திருககிறார். 
 
ஒரு குடும்பத்தின் சிதைவை விஜநாதன் விஜயசாந்தினி வரைந்திருந்தார். தனது தந்தை இறந்த பொழுது தனது குடும்பம் தொடர்ந்து நகர்ந்து செல்ல எதிர்கொண்ட சமூகப் போராட்டத்தை ஒரு வளரும் கொடி எதிர் கொள்ளும் நெருக்கடிகளாய் உடைவுகளாய் தனது சித்திரத்தை அவர் வரைந்துள்ளார். 
 
தந்தை இல்லாமல் போன பொழுது அவரது குடும்பம் என்ற கொடி வெடித்துச் சிதறியதையும் கணவன் இல்லாத மனைவியும் தந்தை இல்லாத பிள்ளைகளும் தண்ணீர் இல்லாமல் தரையில் எழும்பித் துடிக்கும் மீன்களாக வரைந்துள்ளார். விஜயசாந்தினியின் ஓவியம் படரத் துடிக்கும் காயங்கள் கொண்ட கொடியின் உணர்வாக வரையப்பட்டிருந்தது. 
 
நிலம் இழந்த கூறுகளைப் பற்றிய, இழக்கப்பட்ட தடயங்களைப் பற்றிய கதையை இருண்ட பக்கத்திற்குள் அழைத்துச் சென்று தர்மரத்தினம் அருளழகனின் ஓவியம் காண்பிக்கிறது. நிலத்தில் இருக்க வேண்டியவை பிடுங்கி கறுப்பான ஒடுக்கமான பகுதியில் வைக்கபட்டிருக்கின்றன. நிலம் பற்றிய இவரது சித்திரமும் நிலம் இழந்த கூறுகளை காட்டும் இருண்ட பக்கமும் நமது காலத்தை அப்படியே சித்திரிக்கிறது. 
 
அருளழகனின் சித்திரத்தில் துண்டு துண்டுகளாய் இருண்ட நிறங்களுக்குள் இழக்கப்பட்டவைகள் மறைந்திருக்கின்றன. மிகவும் பெரிதாய் நிலத்தை மூடியிருக்கும் அகலப் பாதம், ஈஈழப்போராளிகளின் காட்சி, காணாமல் போன பிள்ளையை கேடகும் தாய், வீழந்த போராளிகளின் கல்லறையை தழுவியழும் தாய் முதலிய உறவுகள், ஏக்கம் கொண்ட முகங்கள் போன்ற புகைப்படத் துண்டுகளை சித்திரத்தில் ஒட்டியுள்ளார். இந்தச் சித்திரம் இன்றைய காலத்தை தெளிவாய் பதிவு செய்திருககிறது. 
 
ஒரு பெண்ணின் தனிமையின் சித்திரத்தை மயூரன் ஆரணி வரைந்திருந்தார். ஒடுக்கமான அறைக்குள்ளும் சற்று வெளியையும் பெரும் சுவர்களையும் கொண்ட அறைக்குள்ளும் இருக்கும் இருவேறு விதமான பெண்ணின் தினிமையை இரு வேறு விதமான தவிப்பை இரண்டு சித்திரங்களில் வரைந்திருந்தார். பெண்ணின் இருதயத்தின் வேகம் துடிப்பதையும் அதை ஒரு கடிகாரமாக சூழல்வாதையும் தெளிவாக வரைந்துள்ளார்.
 
தனது துணையின் வரவுக்காக பெண்ணுக்குள் தவித்துக் கொண்டிருக்கும் உணர்ச்சியைச் செறிவை காட்டும் ஆரணி பெண்ணின் அந்த காத்திருப்பும் எதிர்பார்ப்பும் உடையும் கண்ணாடிவாக உறைந்திருக்கும் உடைவையும் தனது சித்திரத்தில் வரைந்துள்ளார். பெண்ணின் இருப்பையும் உடைவையும் ஆரணி வரைந்திருக்கிறார். 
 
ஜெகாயினி ரவீந்திரன் வன்முறையின் கோரத்தை தனது சித்திரத்தில் சித்திரிக்கிறார். வன்முறை ஒரு சதுரங்கமாக முடிவற்றுத் தொடர்வதை சித்திரத்தில் அவர் பொருத்திய சதுரங்கப் பெட்டி உணர்த்துகிறது. கொடிய வன்முறைக் கருவியான சைக்கிள் செயினையும் இணைத்திருக்கிறார். ஏக்கத்துடன் விழித்திருக்கும் கண்களையும் அச்சமூட்டும் கண்களும் பற்களும் கொண்ட முகத்தையும் உருவாக்கியுள்ளார். 
 
ஏங்கும் கண்கள் வரிசையாக விழித்திருக்க அதன் ஒரு பக்கத்தில் இரத்தத்துளிகளும் மறுபக்கத்தில் மஞ்சளும் சிவப்புமான மனிதர்களும் காணப்படுகின்றனர். வன்முறையின் பயங்கரத்தை சித்திரிக்கும் மிகவும் முக்கியமானதொரு சித்திரமாக ஆரணியின் சித்திரம் முக்கியம் பெறுகிறது. 
 
பழைய நினைவுகளின் ஒரு தொகுதியாக சேகரிக்கப்பட்ட பொருட்களுடன் உணர்வு சார்ந்த வௌ;வேறு நிறங்களைப் பயன்படுத்தி பிரசாந்த் நினைவு பற்றிய சித்திரம் ஒன்றை வரைந்து படைத்துள்ளார். இன்றைய காலத்தில் நாம் நிறைய பொருட்களை இழக்கும் நமது துயரை இந்த சித்திரம் சித்திரிக்கிறது. பிரசாந்த் தனது பழைய புகைப்படம் முதல் படித்த பள்ளிப் புத்தகத்தின் பாகம், படித்த கதைப்புத்தகத்தின் பாகம், பாவித்த காப்பு, பழைய அயன்பெட்டியின் பாகம் என்று தனக்குப் பிடித்த தான் வாழ்ந்த காலத்தில் பயன்படுத்திய பல்வேறு பொருட்களை நினைவுத் தொகுதியாக இணைத்திருந்தார். 
 
ஒவ்வொருக்கும் பிடிக்கும் பொருட்களை மறுக்கப்பட முடியாத பொருட்களை பிரசாந் இணைத்துப் படைத்துள்ளார். ஒரு மனிதரின் வாழ்வில் வௌ;வேறு பருவங்களில் ஒட்டியிருக்கும் இத்தகைய பொருட்களில் பசுமையான மறகக முடியாத நினைவுகளும் கதைகளும் ஒட்டியும் படிந்தும் இருக்கின்றன. அவற்றை இழக்கும் பொழுது அவை காலத்தை இழந்த பருவத்தை இழந்த நினைவின் சித்திரமாக மீள மீள நினைவுகளில் வந்து மிதந்து கொண்டிருக்கின்றன.
 
இவை தவிரவும் பல முக்கியமான நல்ல சித்திரங்களை மாணவர்கள் வரைந்திருக்கிறார்கள். விளிம்புநிலை உணர்வுகள் சார்ந்தும் மனதின் வௌ;வேறு விதமான கோணங்களையுடைய சித்திரங்களையும் நேர்த்தியாகப் படைத்துள்ளார்கள். மாணவர்கள் வரைந்துள்ள எல்லா சித்திரங்களும் முக்கியான படைப்பாகியுள்ளன.
 
இந்த சித்திரங்கள் உணர்வின் சித்திரங்கள், காலத்தின் சித்திரங்கள். இவை முடிவற்ற கதையை சொல்லிக் கொண்டிருக்கின்றன. இவை அளவற்ற வெளிக்கு அழைத்துச் செல்லுகின்றன. பெரும் யுகத்தின் துண்டங்களாய் காட்சியாகியிருக்கின்றன. இன்றைய இளந்தலைமுறையின் மனத்தின் சித்திரங்களாக வரையப்பட்ட இந்தச் சித்திரங்கள் வாழும் காலத்தின் சித்திரங்களாகி சித்திரக்கலை ரீதியாக வரலாறு ரீதியாக பண்பாடு ரீதியாக உளவியல் ரீதியாக மிகவும் முக்கியமான பதிவுகளாகியுள்ளன. 
 
குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - தமிழ்மாறன்
 
அனுப்புக Home, Srilankan News, Literature
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.