செய்திகள்

இணைப்புக்கள்

உங்கள் அபிப்பிராயங்கள்

News Articles

அரசுசாரா நிறுவன அரசியல் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்

 

அரசுசாரா நிறுவன அரசியல் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்

 

சரியான காரணங்களின் பொருட்டு தனது சொந்த நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் தான் செயல்படுகிறோம் என நினைப்பவர், நீங்கள் விரும்புகிற திசைவழியில் நகர்கிற தன்னிலையாக இருக்கிறாரெனில,; அவரை அதே திசைவழியில் கொண்டு செல்ல நீங்கள் ஆவன செய்ய வேண்டும். அதுவே பிரச்சார யுக்தி.

அமெரிக்க தேசியப் பாதுகாப்பு வழிகாட்டு நெறி

10 July 1950

அரசுசாரா நிறுவன அரசியலுக்குக் கடந்த கால அரசியலும் நிகழ்கால அரசியலும் இருக்கின்றன. எகிப்திய ராணுவ அரசு அரசுசாரா மனித உரிமை மற்றும் ஜனநாயக அமைப்புக்களின் அனைத்து நடவடிக்கைகளையும் முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்த அமைப்புக்களின் கணணிகள் அனைத்தையும் எகிப்திய அரசு கையகப்படுத்தி இருக்கிறது.

இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அனைத்து அரசுசாரா அமைப்புக்களையும் வெளியேற்றி சாட்சியமற்ற யுத்தத்தை நடத்தி முடித்தது. இலங்கை அரசு, அரசு சாரா அமைப்புக்களின் செயல்பாடுகளை திட்டமிட்ட வகையில் தொடர்ந்து முடக்கி வருகிறது.

தமிழகத்தில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடி வரும் சூழலியல் இயக்கத்தவர்களை அரசுசாரா நிதி நிறுவன உதவியுடன் இந்திய அரசை எதிர்த்துப் போராடும் அந்நிய சக்திகள் என இந்திய அரசு குற்றம் சுமத்தி வருகிறது.

மரபான மார்க்சிய இடதுசாரிகள் பொத்தாம் பொதுவாக அரசுசாரா நிறுவனங்கள் அல்லது இயக்கங்களின் அனைத்துச் செயல்பாடுகளையும் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் அங்கமான நடவடிக்கைகள் எனச் சொல்லி வருகிறார்கள்.

அரசு சாரா அமைப்புக்களை ‘இன்று’ எவ்வாறுதான் மதிப்பீடு செய்வது?

எகிப்திய ராணுவ அரசு அரசு, சாரா அமைப்புக்களில் இயங்கும்  ஐந்து அமெரிக்கர்களுக்கு பயணத்தடை விதித்திருக்கிறது. இவர்கள் அமெரிக்காவின் நேசனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெமாக்ரஸி மற்றும் ரிபப்ளிகள் இன்ஸ்டிட்யூட் போன்றவற்றிலிருந்து நிதிபெறுபவர்கள். இவர்கள் எகிப்தில் இயங்கும் சில அரசு சாரா நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பது எகிப்திய அரசு சொல்லும் காரணம். இந்தச் சிக்கலால் எகிப்திய ராணுவத்திற்கு அமெரிக்க அரசு ஆண்டுதோறும் வழங்கிவரும 1.3 பில்லியன் டாலர்கள் அன்பளிப்பு பிரச்சினைக்கு உள்ளாகி இருக்கிறது.

எகிப்திய அரசு இதனை எவ்வாறு அணுகுகிறது என்று பாருங்கள்.

முழுமையாக ஜனநாயகத்திற்காக இயங்கும் அனைத்துக் குழுக்களையும் தனது கட்டுபபாட்டுக்குள் கொண்டு வர முனைகிறது எகிப்திய அரசு. அமெரிக்கக் குழுக்கள் தொடர்பாக மட்டும் பேச்சுவார்த்தை நடத்த எகிப்திய தூதுக்குழு அமெரிக்கா போகிறது. ராணுவத்துக்குத் தொடர்ந்து அமெரிக்க உதவியையும் பெற்றுக் கொண்டு, எகிப்தில் அமெரிக்க நலன்களையும் பாதுகாத்துக் கொள்கிற மாதிரி ஒரு ஏற்பாட்டினை ஏற்படுத்திக் கொண்டால், அமெரிக்காவின் ஜனநாயக அபிலாஷைகள் அத்துடன் முற்றுப்பெற்றுவிடும்.

பிற்பாடாக அமெரி;க்கா எகிப்திய ஜனநாயகம் பற்றிப் பேசாது. அமெரிக்கச் சார்பு அல்லாத மற்ற அனைத்து ஜனநாயகத்திற்கான எகிப்திய அரசு சாரா அமைப்புக்களும் அழித்தொழிக்கப்படும்.

இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விடயம் இருக்கிறது. அனைத்து அரசு சாரா அமைப்புக்களும் 'ஏகாதிபத்திய கைக்கூலி அமைப்புக்கள்' என்று புரிந்துகொள்ளப்படக் கூடாது என்பதுதான் அந்தச் செய்தி.

இன்று அரசு சாரா அமைப்புக்களாக அரசியல் கட்சிகளில் விரக்தியுற்று சுயாதீனமாக எழுந்துவரும் குடிமைச் சமூகக் குழுக்களையும் எடுத்துக் கொண்டுதான் ‘இன்று’ இப்பிரச்சினையைப் பாரக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கம். இதனை இந்திய அரசு அந்நிய நிதிபெறும் நிறுவனம் என்று சொல்லிவருகிறது. ஆகவே இந்தப் போராட்டம் இந்தியா வளர்ச்சிக்கு எதிரான அந்நிய சதி! ஆனால் ரஸ்யாவின் தூதரக அதிகாரி தமிழகத்துக்கு வந்து அணு உலைக்கு ஆதரவாகப் பேசலாம். அவர் அணுஉலைக்கு எதிராகப் போராடுகிறவர்களை வன்முறை கொண்டு அடக்குமாறு இந்திய அரசைக் கோரலாம். ஏனென்றால் இந்த ரஸ்ய ‘அந்நியன்’ இந்தியக் குடிமகன்!

அது போலவே ‘அந்நியனான’ அமெரிக்கனோடு இந்திய அரசு அணுசக்தி ஒப்பந்தம் போடலாம். அவன் இந்திய தேசசபக்தன்! ஆனால் தனது வாழ்வாதாரத்துக்குப் போராடுகிறவன் ‘அந்நிய’ சக்திகளின் ஆதரவுடன் செயல்படுகிற தேசவிரோதி!. இதுதான் மேற்கத்திய-அமெரிக்கா-ரஸ்யா தொடர்பான எகிப்திய-இந்திய- இலங்கை அரசுகளின் கொள்கை.

இலங்கையில் என்ன நடக்கிறது? இலங்கை அரசாங்கத்தைச் சீர்குலைக்கிற வேலைகளை அரசு சாரா நிறுவனங்கள் செய்கிறது என்கிறது இலங்கை அரசு. ஆகவே அரசு சாரா நிறுவனங்களை நாட்டை விட்டு வெளியேற்றுகிறது.

இலங்கை நிலைமையில் எவையெவை அரசு சாரா நிறுவனங்கள்? அது என்னென்ன செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன? ஐநா அமைப்புக்கள், செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புக்கள் அரசு சாரா அமைப்புக்கள் எனக் கொண்டாலும் அவை அரசுகளின் நிதி ஆதாரங்களைப் பெற்றெ நடைபெறுகின்றன. இந்த நிறுவனங்களை அமெரிக்கா-ஐரோப்பிய நாடுகள் ஒரு புறமும் ரஸ்யா-சீனா-.இந்தியா போன்ற நாடுகள் பிறிதொருபுறமும் கட்டுப்படுத்த முனைகின்றன.

நேரடியிலாக அமெரிக்க-மேற்கத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படும் நிறுவனங்களும் உண்டு. யு.எஸ் எய்ட் மற்றும் அமெரிக்கன் என்டோவ்மென்ட பர் டெமாக்ரஸி போன்றன இத்தகைய அமைப்புக்கள். இதுவன்றி தூதரகங்களின் வழி அனைத்து நாடுகளும் கலாச்சாரம் எனும் பெயரில் அனைத்து நாடுகளும் உள்ளுர் அமைப்புக்களுக்கு நிதி வழங்குகின்றன. இவை அனைத்தையுமே நாம் அரசு சாரா நிறுவனங்கள் என்கிறோம்.

இன்று அரசு சாரா அமைப்புக்கள் நிறையத் தோன்றியிருக்கின்றன. எந்த அரசினதும் உதவியின்றி உள்ளுர் வெகுமக்கள் நிதியுதவியுடன் செயல்படும் குடிமைச் சமூகக்குழுக்கள் இவை. இவை தன்னெழுச்சியாக உருவான இயக்கங்கள். இத்தகைய குழுக்கள் அரசியல் கட்சிகளுக்கு அப்பாலான குழுக்கள். இத்தகைய குழுக்கள் இன்று அதிக அளவில் இடதுசாரி-வலதுசாரி எனும் நிறவப்பட்ட அரசியல் இயக்கங்களுக்கு அப்பால் உருவாகி வருகின்றன.

இக்குழுக்களையும் இடது-வலது போக்குகள் எனும் வகையில் நாம் அடையாளம் காணமுடியும்.

எகிப்து-இலங்கை-இந்தியா என அனைத்து நெருக்கடி கொண்ட நாடுகளிலும் இத்தகைய குழக்கள் தோன்றுகின்றன. தமிழகத்தில் மே 17 இயக்கம் மற்றும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கம் போன்றவற்றை இவ்வாறு நாம் அடையாளம் காணலாம்;;.

இக்குழுக்கள் அரசியல்-சமூக நீதி போன்ற விடயங்களில் இடதுசாரிக் கண்ணோட்டம் கொண்ட குழுக்கள் எனலாம்.

இலங்கையின் உள்ளும் புறமும் வேறுவேறு பண்புகள் கொண்ட இவ்வாறான குழக்கள் இருக்கின்றன. புகலிட யதார்த்தத்தை மட்டும் நாம் எடுத்துக் கொண்டால், இலங்கை நல்லிணக்திற்கென இயங்கும் சில குழுக்கள் மேற்கத்திய நிதி நிறுவன உதவிகளுடன் செயல்படுகின்றன. இதனோடு எந்தவித நிதிப்பின்புலமும் இன்றி தன்னார்வலர்களால் செயல்படுத்தப்படும் ஜனநாயகம்-தலித்தியம்-இலக்கியம் எனவும் குழுக்கள் செயல்படுகின்றன.

வேறு வேறு குழுக்களில் செயல்பட்டாலும் இத்தகைய குழுக்களில் செயல்படுவர்கள் அனைவருமே சில குறிப்பிட்ட தனிநபர்களே என்பதனை அவதானிக்க முடியும். இத்தகைய குழுக்களை முழுமையாக அரசு சாரா நிறுவனங்கள், மேற்கத்திய நிதிபெறும் நிறுவனங்கள் என நிர்ணயிக்க முடியாது.  இக்குழுக்கள் இடதுசாரி விரோத மனோபாவமும், இலங்கை அரசு ஆதரவுக் கண்ணோட்டமும் கொண்ட குழுக்கள் என வரையறுக்க முடியும்.

இன்று அரசு சாரா நிறுவனங்கள் என்று பேசுகிறபோது அதனை அமெரி;க்க-மேற்கத்திய நிறுவன உதவிபெறும் அமைப்புக்கள் எனவும், இவ்வாறான நிதி உதவி பெறாத குடிமைச் சமூக அமைப்புக்கள் எனவும் பிரித்துப் பாரக்க வேண்டும்.

நிதி பெறாத குடிமைச் சமூக அமைப்புக்களிலும் இடது-வலது குழுக்கள் இருக்கின்றன என்பதனை அவதானிததுக் கொண்டு, இத்தகைய குழுக்களில் அரசு சார்பாளர்களுடன் உறவு கொண்ட, இறுதிப் பகுப்பாய்வில் அரசின் திட்டங்களுக்கு உடன்போகிற குழுக்கள் இருக்கின்றன என அவதானிப்பதும் முக்கியமாகும்.

அரசின் திட்டங்களுக்கு உடன்போகிற குழுக்களை அடையாளம் காண்பது என்பதும், அத்தகைய குழக்களில் செயல்படுகிறவர்கள் குறித்து மதிப்பீடுகள் மேற்கொள்வது என்பதும் ‘இன்று’ மிகப்பெரும் சவால்.

இதனை நாம் வரலாற்று அனுபவங்களில் இருந்து விளக்க முடியும்.

இரண்டாம் உலக் போரின் பின்னான - எண்பதுகளின் இறுதி வரையிலுமான காலகட்டத்தை கெடுபிடிப் போர்க்காலம் அல்லது கோல்ட் வார் எனக் குறிப்பிடுவார்கள். யார் அரசியல்-பொருளியல்-கருத்தியல் மேலாண்மை பெறுவது என்பதில் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்குமான பனிப்போர் உச்சம் பெற்ற காலம் இது.

சோவியத் யூனியனுக்குச் சவாலாக யுகோஸ்லாவிய-ஹங்கேரி-போலந்து போன்ற நாடுகளில் எழுந்த கலகங்களையடுத்து சோவியத் கம்யூனிசம் பற்றிய விவாதங்கள் ஐரோப்பிய நாடுகளில் உக்கிரம் பெற்றன. இந்த விவாதங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெயர் ஆர்தர் கோஸ்ட்லர்.

ஹங்கேரியரான கோஸ்ட்லர் எழுதிய டார்க்னஸ் அட் நூன் எனும் நூல் கம்யூனிச எதிர்ப்புக் கருத்தியலின் வேதநூலானது. கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளிருந்தவர்கள், மார்க்சியத்தை ஆதரித்தவர்கள் என மேற்கத்திய அறிவுஜீகள் என சோவியத் கம்யூனிசத்தைக் கடுமையாக விமர்சித்த ஒரு அறிவிஜீவித் தலைமுறை 50 களில் ஐரொப்பாவில் தோன்றியது. இவர்கள் சோவியத் கம்யூனிசத்தை விமர்சித்தார்களேயொழிய, இவர்கள் அனைவரும் அமெரிக்கச் சார்பாளர்கள் எனச் சொல்லமுடியாது.

சோவியத் யூனியனைச் சகல தளங்களிலும் ஒழிக்க நினைத்த அமெரிக்க உலக அளவிலான தனது கம்யூனிச எதிர்ப்புக் கருத்தியல் மேலாண்மையைச் சாதிப்பதற்காக இவர்களைப் பாவிக்க நினைத்தது.

கமிட்டி பர் கலச்சுரல் பிரீடம் எனும் ஒரு அமைப்பை இதற்கென நிதிவழங்கி அமெரிக்க உளவுநிறுவனமான சிஐஏ ஆரம்பித்தது. இதனோடு உலகெங்கிலும் இத்திட்டத்திற்கென காலச்சாரச் சஞ்சிகைகளை சிஐஏ நிதியுடன் அமெரிக்கா துவங்கியது. இலண்டனில் என்கவுன்டர் எனும் சஞ்சிகையும் இந்தியாவில் குவஸ்ட் எனும் சஞ்சிகையும் துவங்கப்பட்டன. என்கவுண்ட்டர் சஞ்சிகையின் ஆசிரியர் குழவில் புகழ்பெற்ற இடதுசாரி எழுத்தாளர் ஸ்டீபன் ஸ்பென்டர் இடம்பெற்றார். ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறிய ஆர்தர் கோஸ்ட்லர், லூயி பிஷர், பிரிட்டிஸ் கம்யூனிஸ்ட் கட்சியில் நம்பிக்கையிழந்த ஸ்டீபன் ஸ்பென்டர் போன்றோர் எழுதிய கட்டுரைகளைக் கொண்ட த காட் தட் பெயில்ட் நூலும் வெளியாகி இருந்தது.

குறிப்பிட்ட அறிவுஜீகள் உண்மையில் சிஐஏவினால் நிதி வழங்கப்படும் சஞ்சிகையில் தாம் எழுதுகிறோம் என்பதனை அறியவில்லை. தமது மனமார்ந்த கருத்துக்களையே எழுதி வந்தார்கள். கம்யூனிசக் கனவில் பெருநம்பிக்கை கொண்டு சோவியத் யூனியனின் நடவடிக்கைகளால் விரக்தியற்ற தலைமுறையினர்தான் இவ்வாறு எழுதவந்தவர்கள். இவ்வாறு இவர்கள் விரக்தி கொள்வதற்கு காரணங்கள் இருந்தன என்பது எண்பதுகளின் இறுதியில் சோவியத் யூனியன் வீழ்ந்தபோது உலகின் மனசாட்சியுள்ள மார்க்சியர் வெளிப்படையாக அறிந்தனர்.

இந்த இடத்தில் முக்கியமாக நாம் படித்தறிய வேண்டிய விஷயம், தமது மனசாட்சியுடன் செயல்படுகிறோம் என நினைத்தவர்களை, அமெரிக்கா தனது திட்டத்தின் பகுதியாக எப்படிப் பயன்படுத்தியது என்பதும், அமெரிக்கத் திட்டத்தின் பகுதியாக எவ்வாறு இத்தகைய அறிவுஜீவிகளின் அரசியல் ஆக நேர்ந்தது என்பதும்தான்.

இதனை அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் திட்டமிட்டபடி செய்தார்கள்.

இதுதான் அவர்களது கொள்கை : சரியான காரணங்களின் பொருட்டு தனது சொந்த நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் தான் செயல்படுகிறோம் என நினைப்பவர், நீங்கள் விரும்புகிற திசைவழியில் நகர்கிற தன்னிலையாக இருக்கிறாரெனில், அவரை அதே திசைவழியில் கொண்டு செல்ல நீங்கள் ஆவன செய்ய வேண்டும். அதுவே பிரச்சார யுக்தி.

இந்தப் பிரச்சார யுக்தியை இரண்டு தசாப்தங்களாக அறிந்திராத நிலையில் என்கவுண்டர் பத்திரிக்கை ஆசிரியர் குழவில் செயல்பட்ட ஸ்டீபன் ஸ்பென்டர் அறுபதுகளின் மத்தியில், இதனை அறிவந்தபோது என்கவுண்டர் பத்திரிக்கையில் இருந்து வெளியேறினார்.

இந்தியாவில் இதே சிஐஏவினால் நிதி வழங்கப்பெற்ற கமிட்டி பர் கலச்சுரல் பிரீடம் அமைப்பில் பொறுப்பேற்றுச் செயலாற்றினார் இந்தியாவின் அதி அற்புதமான கவிஞர்களில் ஒருவரான நிஸிம் எஸக்கியல். அந்த அமைப்புடனும், சிஐஏ தோற்றுவித்த குவஸ்ட் இதழுடனும் தொடர்பு கொண்ட இந்திய அரசியல் ஆளுமை ஜெயப்பிரகாஷ் நாராயணன். தமிழக இலக்கிய ஆளுமைகள், சில காலம் தில்லியில் வாழ்ந்த வெங்கட் சாமிநாதன் மற்றும் கா.நா.சு போன்றவர்கள்.

இவ்வாறு சொல்வதன் மூலம் இவர்களைச் சிஐஏ உளவாளிகள் என்று சொல்வதாக நினைப்பது அபத்தம். கம்யூனிசம் குறித்து விமர்சனம் கொண்ட, தமது உளச்சுத்தியடன் செயல்படுகிறொம் என நினைத்த அளுமைகளும் கூட எவ்வாறு அமெரிக்க அரசியல் திட்டத்துடன் உடன்படும் ஆளுமைகளாக ஆக நேர்ந்தது என அறிவதுதான் இங்கு முக்கியம்.

இது கெடுபிடிக்கால நிலைமை என்றால், இதே கலாச்சார சுதந்திரம் எனும் விடயத்தை ‘ஜனநாயகம்’ எனும் பிரச்சினையில் அமெரிக்கா பாவித்த நிறுவனம்தான் அமெரிக்கன் என்டோவ்மென்ட பர் டெமாக்ரசி எனும் அமைப்பு.

அமெரிக்க அரசினால் நிதி வழங்கி நடத்தப்படும் அமைப்பு இது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் செயல்பட்ட ஓப்டர், அதனது உதவியுடன் செயல்பட்ட சில எகிப்திய ஜனநாயக ஆர்ப்பாட்ட அமைப்புக்கள், ஈராக்கில் செயல்படும் பல அமைப்புக்கள் இதனது நிதியைப் பெற்ற அமைப்புக்கள். இந்த நாடுகளில் அந்தந்த ஆட்சியாளர்களுக்கு எதிரான எதிர்ப்பு வெகுமக்களிடம் திரண்டபோது தனது ஆளுகையின் கீழ் அதனைக் கொண்டுவரும் அமெரிக்கத் திட்டத்தின் பகுதிதான் இத்தகைய செயல்பாடுகள்.

இதனது அர்த்தம் இவ்வாறான போரட்டங்கள் அனைத்தும் அமெரிக்கச் சார்பானது என்பது இல்லை.

எவ்வாறு சோவியத் யூனியனின் அதிகாரத்திற்கு எதிராகக் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் எழுச்சி தோன்றியதோ அவ்வாறுதான் எகிப்து போன்ற அரபு நாடுகளிலும் அந்நாடுகளின் சர்வாதிகாரிகளுக்கு எதிராகக் எழுச்சி தோன்றியது. இந்த எழுச்சிகளை தனது மேலாதிக்கத்திற்கு அமெரிக்க-மேற்கத்திய அரசுகள் பாவிக்க நினைக்கின்றன.

இப்போது நாம் இலங்கை நிலைமைக்குள் வருகிறோம்.

இலங்கையில் 30 ஆண்டுகால விடுதலைப் போராட்டத்தை ஆயுதபலம் கொண்டு அழித்திருக்கிறது இலங்கை அரசு. இந்த அழிவுயுத்தத்தை சாட்சியமற்று நடத்திமுடிக்க அனைத்து அரசுசாரா அமைப்பக்களையும் வெளியேற்றியது அரசு, இப்போதும் தானொரு ஏகாதிபத்திய எதிர்ப்பாளன் எனும் முகத்தைக் காப்பதற்கு அரசுசாரா அமைப்புக்களின் அனைத்துச் செயல்பாடுகள் மீதும் தாக்குதல் தொடுக்கிறது.

எகிப்து போலவே அமெரிக்க-மேற்கத்திய நிதிபெறும் அரசுசாரா அமைப்புக்கள் இலங்கையில் இருக்கவே செய்யும். இவைகள் மனித உரிமை, ஜனநாயகம் எனப் பேசவும் செய்கிறது. இவை மட்டுமல்ல பல்வேறு குடிமைச் சமூக அரசு சாரா குழுக்களும் இந்த உரிமைகளுக்காகப் பேசுவது மட்டுமல்ல செயல்படவும் செய்கின்றன.

இலங்கை அரசு எகிப்திய அரசு போலவே அரசுசாரா ‘அந்திய’ அமைப்புக்களின் செயல்பாடுகளை நிறுத்துகிறோம் எனும் பெயரில் அனைத்துக் குடிமைச் சமூக அரசு சாரா அமைப்புக்களையும் அழிக்க நினைக்கின்றது. இத்தகைய குடிமைச் சமூக அமைப்புக்கள் பத்திரிக்கைச் சுதந்திரம் அடிப்படை மனித உரிமைகளுக்குப் போராடும் போது அவை இலங்கை அரசினால் சகிக்கப்பட முடியாததாகவும் ஆகின்றன.

இலங்கையின் இன்னொரு யதார்த்தம் தமிழ் அரசியல் சூழமைவு.

விடுதலைப்புலிகள் தமிழ் சமூகத்தின் அகமுரண்பாடுகளை கையாண்டவிதத்தினால் தமிழ் அரசியலிலும் குடிமைச் சமூகத்தினுள்ளும் விடுதலைப்புலிகள் மீதான விரோதம் என்பது புரையோடிப்போயுள்ளது. இக்காரணத்திலேயே புகலிடத்தில் தமிழ் அரசியலில் ஜனநாயகம்-தலித்தியம் போன்ற பிரச்சினைகள் குறித்த அழுத்தம் பெறவேண்டும் எனும் காரணம் கருதி அத்தகைய குழுக்கள் தோன்றின.

இத்தகைய குழுக்களுக்கு விடுதலைப் புலிகள் விரோதக்குடையமைப்பின் கீழ் அனைத்துப் பிரச்சினைகளையும் அடக்கிவிடுவது எனும் புரிதல்தான் இருந்ததேயொழிய, இலங்கைத் தீவின் அரசியலில் பரந்துபட்ட ஜனநாயகம் மனித உரிமைகள் என்பதில் இவர்களுக்கு எப்போதுமே அக்கறை இருக்கவில்லை. விடுதலைப் புலிகள் இருந்தவரை ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் முன்னிறுத்திப்பேசிக் கொண்டிருந்த இந்த அமைப்புகள் விடுதலைப்புலிகள் தோல்வியுற்ற நிலையில் இதுபற்றி பேசுவதிலிருந்து இவர்கள் மௌனமாகிவிட்டார்கள்.

இன்றைய நிலைமையில் இலங்கை தொடர்பான அரசு சாரா அமைப்புக்கள், குடிமைச் சமூக அமைப்புக்கள் என்பனவற்றையும் நாம் அரசுக்கு எதிரான விமர்சனபூர்வமான அமைப்புக்கள் எனவும், அரசு சார்பான அரசியல் கொண்ட அமைப்புக்கள் எனவும் வரையறை செய்ய முடியும். இத்தகைய அரசு சார்பு அமைப்புக்களில் சில மேற்கத்திய அரசுகளின் ‘மோதல் தவிர்ப்புன் கொள்கை’ அடிப்படையிலான நிதியுதவி பெறும் அமைப்புக்கள். இந்த அமைப்புக்கள் இலங்கை அரசுக்கும் குடிமைச் சமூக அமைப்புக்களுக்கும், இலங்கை அரசு கடைப்பிடிக்கும் அரசியலுக்கு உள்ளேயே ஒரு இணக்கத்தை உருவாக்கச் செயல்படுகின்றன.

சில அமைப்புக்கள் ஜனநாயகம்-தலித்தியம்-இலக்கியம் எனப் பெயரளவில் கோரிக்கொண்டாலும் இவை அனைத்தும் அரசு ஆதரவாளர்களுடன் தொடர்பு கொண்டு அரசு ஆதரவு அரசியலையே முன்னெடுத்து வருகின்றன.

எவ்வாறு சோவியத் கம்யூனிசத்தின் மீது விமர்சனம் கொண்டவர்களை அமெரிக்க அரசு பாவித்ததோ, எவ்வாறு அரபு எழுச்சியில் சில ‘ஜனநாயக’ இயக்கங்களை அமெரிக்கா பாவித்ததோ, அவ்வாறுதான் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ‘ ‘ஜனநாயக’த்தை வலியுறுத்தும் குழுக்களின் செயல்பாடும் இலங்கை அரசு பாவிக்கத்தக்கதாக, அவர்களது நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இருப்பதால்தான் இந்தக் குடிமைச் சமூகக் குழக்களின் அரசு சாரா செயல்பாடுகள் இலங்கை அரசினால் அனுமதிக்கப்பட்டதாக இருக்கிறது.

 

இறுதியாக எஞ்சியிருக்கும் கேள்வி இது : கம்யூனிசம், தேசிய சோசலிசம், தமிழ் தேசியம் போன்றன விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாகவா இருக்கிறது? இல்லை. பற்பல வரலாற்றுத் தவறுகளையும் ஒடுக்குமுறைத்தன்மைகளையும் இவை கொண்டிருந்தன. ஓடுக்குமுறையையும் இவை நடைமுறையில் தனது சொந்த மக்கள் மீதே பிரயோகித்தன. எனில் என்ன செய்யலாம்? இவற்றைக் குறித்த விமர்சனத்தினோடு, இன்னும் மேலான ஜனநாயகமும் மனித உரிமையும் சமத்துவமும் கொண்ட சமூகம் நோக்கிச் சிந்திக்கலாம். நிச்சயமாக அமெரிக்கச் சார்பாளர்களாக, எகிப்திய ராணுவச் சார்பரளர்களாக, இலங்கை அரசு சார்பாளர்களாக ஆக முடியாது. அப்படிப்பட்ட ஜனநாயகம் என்பது வெறும் கானல்நீர்.

அனுப்புக Home, Srilankan News, Articles
அபிப்பிராயங்கள்
(1) அபிப்பிராயங்கள்
30-01-2012, 21:24
 - Posted by Anonymous User
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 

 

 

 

 
.