இளையராஜா தமிழ் அரிவாள்-வன்முறை சினிமாக்களுக்கு இசை அமைப்பது குறித்த தனது ஈடுபாடின்மையைத் தெரிவித்திருக்கிறார். நடிகை சுஹாசினி தமிழ் சினிமா கதாநாயகர்கள் லுங்கியுடனும் அரிவாளுடனும் திரிவதாகச் சமகாலத் தமிழ் சினிமா குறித்த தனது விமர்சனத்தில் தெரிவித்திருக்கிறார். சென்னையில் நடந்த உலகத் தமிழ்த் திரைப்பட விழாவிலும், தமிழ் சினிமாவிற்கு அதிர்ச்சி தந்த கதை சொல்லலைக் கொண்ட ஆரண்ய காண்டம் அதனது வன்முறைச் சித்தரிப்புக்காக திரையிடப்படவில்லை.
திரைப்படச் சித்தரிப்பில் வன்முறையும் பாலுறவும் தொடர்பாக கீழைத்தேய சமூகங்களின் ஒவ்வாமை அச்சமூகங்களைச் சேர்ந்த நாம் அனைவரும் அறிந்ததுதான். இந்தச் சூழலில், தமித் திரைப் படைப்பாளிகளை நோக்கி, ‘மேற்குலக நாடான நோர்வேயில்’ உலகத்தமிழ் திரைப்பட விழாவை நடத்தும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், வன்முறையையும் பாலுறவுச் சித்தரிப்பையும் தமது படங்களில் சித்தரிப்பதைத் தவிர்க்குமாறு வெளியிட்டிருக்கும் அறிக்கை அதிர்சியளிப்பதாக இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் நோர்வே தமிழ்த் திரைப்பட விழா ஒரு மிக நல்ல முன்னுதாரமான நிகழ்வு. தமிழ் சினிமாவில் மெல்லதாக உருவாகிவரும் ரசனை மாற்றத்தைப் பதிவு செய்வதாக அதனது படத்தேர்வுகள் அமைகின்றன. புகலிட நாடுகளில் ஈழத்தமிழர்களால் உருவாக்கப்படும் முழுநீள மற்றும் குறும்படங்களுக்கான திரையிடல் வாய்ப்புக்களையும் இத்திரைப்பட விழா உருவாக்கித் தருகிறது. இதன்வழியில் உலகத் திரைப்பட விழாக்களின் இயல்பேயான விநியோகம், சந்தைப்படுத்தல் வாய்ப்புக்களையும், பிற உலகத் திரைப்பட விழாக்களில் தமிழக-ஈழ திரைப்படைப்பாளிகளின் ஊடாட்டத்திற்குமான வாய்ப்புக்களையும் இந்தத்திரைப்பட விழா ஏற்படுத்தித் தர முனைகிறது.
நோர்வே திரைப்பட விழாக்குவினரின் கருத்துக்களுக்குப் போவதற்கு முன்பாக உலகெங்கிலும் திரைப்படங்கள் தொடர்பாகக் கடைப்பிடிக்கப்படும் தணிக்கை முறைகள் தொடர்பாகவும், கலைஞர்களுக்கும் அவர்தம் கலைப்படைப்புச் சுதந்திரத்திற்கும் தணிக்கை முறைக்கும் இருக்கும் முறுகல் நிலை தொடர்பாகவும் வரலாற்றுரீதியில் நாம் சில புரிதல்களுக்கு வருவது பொறுத்தமானது என நினைக்கிறேன்.
தணிக்கைக்கும் அரசுக்கும் மதநிறுவனங்களுக்கும் இருக்கும் தொடர்பு என்பது அடிப்படையானது. ஓழுக்கத்தின் பெயரிலும் அறத்தின் பெயரிலும் மதநிறுவனங்களும் அதனைத் தாங்கிப் பிடிக்கும் அரசுகளும் தணிக்கை நெறிகளை உருவாக்குகின்றன. தமது நம்பிக்கைகளுக்கு உகந்தவாறு விஞ்ஞானிகளும் தத்துவாதிகளும் கலைஞர்களும் சிந்திக்க வேண்டும் எனவும் தமது படைப்புக்களை உருவாக்க வேண்டும் எனவும் இந்த அமைப்புக்கள் கோருகின்றன.
மாறிவரும் சமூகநிலைமைகளுக்கும் அறிவுத் தேடலுக்கு ஒப்பவும், குறிப்பிட்ட தனித்தனி துறைசார் வளர்ச்சியின் தனித்துவமான தர்க்கங்களுக்கு ஒப்பவும் இதில் மாற்றம் வேண்டுமெனக் கலைஞர்கள் போராடுகிறார்கள்.
அரசியல்-வன்முறை-பாலுறவு போன்றவற்றின் அடிப்படையில்தான் தணிக்கை விதிகள் வரலாறு முழுக்கவும் உருவாகிவந்தன. மதநிறுவனங்களில் இருந்து தம்மை விடுவித்துக்கொண்ட நவீனத்துவ மேற்கத்திய தாராளவாத அரசுகள் பாலுறவுச் சித்தரிப்பு என்பதில் தளர்த்துதலைச் செய்தாலும், வன்முறை மற்றும் அரசியல் என்பன சார்ந்து தமது தணிக்கை முறைகளை இன்று வரையிலும் இறுக்கமாகவே வைத்திருக்கின்றன.
முதலாளித்துவ வளர்ச்சியும் தாராளவாத அரசியலும் அறிமுகமாகாத கீழைத்தேய நாடுகளில், உலகவயமாதலின் பரவலுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமையில் தணிக்கை முறை தொடர்பான ஒரு குழப்பமான மனநிலை நிலவுகிறது. காலனியாதிக்கத்தினால் பாதிப்புற்ற, சமவேளையில் நிலப்பிரபுத்துவ மத அறவியல்-ஒழுக்கம் போன்றவற்றிலிருந்து இன்னும் மீளாத, அரசை மதம்சார் நம்பிக்கைகளிலிருந்து விலத்தி நிற்கவைத்துக்கொள்ள முடியாத நிலைமைகளால் இந்தக் குழப்பத்திற்கு அவர்கள் ஆட்படுகிறார்கள்.
ஐரோப்பியத் திரைப்பட வரலாற்றை எடுத்துக் கொண்டால் நூற்றாண்டை அது கடந்து விட்டது. தமிழ் சினிமா தனது நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது.ஐரோப்பிய தணிக்கை மரபில் மிகமுக்கியமான காலகட்டமாக இருந்தது ரஸ்யப் புரட்சியும், பாசிசத்திற்கு எதிரான அரசியல் காலகட்டமும் எனச் சொல்லலாம். பிரிட்டன் உள்பட அக்டாபர் புரட்சி அரசியல் காரணங்களுக்காக ஐஸன்ஸ்டீனின் பேட்டல்ஷிப் போதம்கின் தடைசெய்யப்பட்டது. பாசிசக் கருத்தியலை முன்வைத்த காரணத்திற்காக லெனீ ரிப்சந்தாலின் தி பேரேட் தடை செய்யப்பட்டது. இது இரண்டாம் உலகப் போர் முடியும் வரையிலான நிலைமை. அதன்பின்பாக ஜப்பானிய இயக்குனரான நகிசா ஒஸிமாவின் அய்னோ கோரா, பசோலனியின் ஸலோ, பெர்ட்டுலூசியின் த லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ் போன்ற படங்கள் அதனது பாலுறவுச் சித்தரிப்புக்காக அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் தடைக்கும் பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்கும் இட்டுச் சென்றது.
இந்த வாதப் பிரதிவாதங்கள் உச்சத்தை அடைந்ததும் அரசுகள் தமது நிலைபாடுகளில் மாற்றம் கொணர்ந்துதம் புதிய காட்சிஊடகப் பரவலால் நேர்ந்தது.
சினிமாக் கொட்டைகளில் மட்டுமல்ல, தொலைக் காட்சிகளிலும் வீடியோ நாடாக்களாகவும் திரைப்படங்கள் வீடுகளுக்குள் மக்கள் வாழும் தனித்த அறைகளுக்குள் நுழைந்தன. தாம் விரும்புகிற எப்படத்தையும் எவரும் பார்க்கும் தேர்வை இது திறந்துவிட்டது.திரைப்படம் இதன்வழி புதிய சந்தையையும் பொருளாதாரப் பரவலையும் திறந்துவிட்டது. இது திரைப்படம் எனும் தனித்ததொரு துறைசார்ந்த வளர்ச்சியின் மூலமான உருவானது. இதற்கு தாராளவாத சமூகங்கள் எதிர்விணை செய்தே ஆகவேண்டியிருந்தது. நோர்வே,ஜெர்மன், ரஸ்யா-சீனா- கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகள், அமெரிக்கா போன்ற ஒரு சில நாடுகள் தவிர பெரும்பாலுமான மேற்கத்திய நாடுகள் தமது தணிக்கை முறையில் மாற்றம் கொண்டுவந்தன.
ஐன்ஸ்டீனின் படமும், லெனி ரீப்சிந்தால் படமும் தடை செய்யப்பட்ட பாலுறவுப் படங்களும் இப்போது இந்நாடுகளின் திரைப்படக் கல்லூரிகளில் திரைநுட்பமும் வரலாறும் கற்பிக்கும் பாடங்களாக ஆகின.
ரஸ்யா, சீனா, அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா அதனோடு ஜெர்மன் மற்றும் நோர்வே போன்ற நாடுகள் இப்போதும் இந்தப் புதிய யதாரத்தத்துக்கு முகம் கொடுக்கவில்லை. இந்நிலைமையில் நேர்ந்த டிவிடி, இணையம் போன்றவற்றின் தோற்றமும் நிகழ்முறைப் பாலுறவும் வன்முறையும், லைவ் ஷோவாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு ஆகத்துவங்கியதும், ஹார்ட்கோர் போர்னோகிராபி போன்றவற்றை மிகச் சாதாரணமாக உலகெங்கிலும் பார்க்க முடியும் எனும் நிலைமை உருவானபிறகும், அமெரிக்காவில் ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்புக்கு இணையான இலாபம் தருவதாக போர்ன் இன்டஸ்ட்ரி உருவான பிறகும், உலகவாயமாக்கலையும் இலாபத்தையும் மட்டுமே கொண்டியங்கும் அமெரிக்க மேற்கத்திய சமூகங்கள் தமது ஒழுக்கம்-அறம் என்பவற்றை இலாபம் என்பதை முன்னிறுத்தி மறுபரிசீலனை செய்யத் துவங்கின.
அறம்-ஒழுக்கம்,அது சார்ந்த நம்பிக்கைகள் எனும் அடிப்படைகளுக்கு மாற்றாக துறைசார் வளர்ச்சி (professinalism replaces morality and ethics as the cencorship basis), குறிப்பாகத் திரைத்துறைசார் வளர்ச்சிக்கு ஒப்ப, காட்சி ஊடக வளர்ச்சிக்கு ஒப்ப, புதிய நிலைமைகளுக்கு முகம் கொடுக்கும் வகையிலான திரைப்படத் தணிக்கை முறைகளை இப்போது உலகெங்கிலும் கைக்கொள்ளத் துவங்கினார்கள். அரசியல்-வன்முறை-பாலுறவு சார்ந்த விஷயங்களை, அதனைக் குடிமக்கள் புரிந்து கொள்ளும் வயதும், அந்த வயது தரும் முதிர்ச்சியும் மனநிலையும் சார்ந்து, எவரெவர் எப்போது எதனை எங்கு பார்க்கலாம் எனத் தரப்படுத்தவும், வகைப்படுத்தவும் (rating and classification) செய்தார்கள்.
மத அடிப்படைவாதம் கோலோச்சுகிற ஈரான் உள்பட்ட இஸ்லாமிய நாடுகள், கிறித்தவ அடிப்படைவாதம் மேலோங்கியிருக்கும் இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள், பாசிச வன்முறையிலிருந்து இன்னும் விடுபடாத நினைவுகளைக் கொண்ட ஜெர்மனி போன்ற நாடுகள், எதேச்சாதிகார அரசியல் அமைப்புக்களைக் கொண்ட ரஸ்யா,வடகொரியா, சீனா, இலங்கை போன்ற நாடுகள் இன்னும் இத்தகைய தாராளவாத ஜனநாயகத் தணிக்கை முறைக்கு வந்து சேரவில்லை.
மதநல்லிணக்கம், சாதிய நல்லிணக்கம், இன நல்லிணக்கம், பெண் புனிதம் போன்றவற்றை முன்வைத்த தணிக்கை கொண்டிருக்கும் இந்திய (தமிழக) அரசியல் அமைப்பு மதம்-இனம்-சாதி-பெண் எனும் எல்லா அடிப்படைகளிலும் மேட்டிமைச் சமூகத்தவர்களால் நிர்வகிக்கப்படுகிற, விளிம்புநிலை மக்களை ஒடுக்குகிற அமைப்பாகத்தான் இருக்கிறது. தமிழகத் திரைப்படத் தணிக்கை அமைப்பும் இந்த இயந்திரத்தின் ஒரு திருகாணிதான்.
40,000 வெகுமக்களைக் கொல்கிற வன்முறை அமைப்பையும், தொகையாகப் பெண்களை வல்லுறவுக்கு உள்ளாக்குகிற அமைப்பையும் கொண்டிருக்கிற இலங்கையும், பழங்குடிமக்களை ஆயிரமாயிரமாக் கொன்றொழிக்கிற, தலித் மக்களைத் துப்பாக்கி முனையில் கொன்றொழிக்கிற, வல்லுறவை வாழ்முறையாக ஆக்கிவைத்திருக்கிற அமைப்பைக் கொண்டிருக்கிற இந்தியாவும், வன்முறையற்ற-பாலுறவுப் பிரச்சினைகள் தவிர்ந்த திரைப்படங்கள் வேண்டும் எனக் கோருவதிலுள்ள அபத்தத்தை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இளையராஜா இசை மேதைதான். அவரது சமூகக்கருத்துக்கள் சனாதனமானவை. சுஹாசினி நல்ல நடிகைதான். அவரது பார்வைகள் பிராமண சமூகத்தின் மனநிலையைப் பிதிநித்துவப்படுத்துபவை.
தனது கண்களுக்குள் முன்னால், பாசிசம்,நிறவாதம்,இனவாதம், சாதியம், பெண்வெறுப்பு என்பதன் பெயரால் படுகொலைகளும், வார்த்தைகளில் சொல்ல முடியாத வன்முறைகளும், பாலியல் வல்லுறவுகளும் நடந்து வருவதைக் காணும் ஒரு கலைஞனிடம், தான் எந்த ஒடுக்கப்பட்ட மனிதரின் பால் நிற்கிறானோ அவர்களுக்குப் பரிந்து பேசும் கலைஞனிடம் வன்முறையையும் பாலுறவையும் சித்திரிக்காதே என்று சொல்வது என்ன நியாயம்? அதுவும் வன்முறையைச் செலுத்துகிறவன் ஒடுக்குமுறையாளனாகவும் வன்முறைக்கு உள்டளாகிறவர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறவர்களாகவும் இருக்கும்போது அவனிடம் அதனைக் கோருவது என்ன நியாயம்?
பாதிக்கப்பட்ட மனிதரின்பால் நின்று இந்தப் போராட்டத்தை திரை வரலாறு முழுதும் நடத்திய கலைஞர்கள் எணணிலடங்காதவர்கள். புனுவல், ஆந்த்ரே வாட்ஜா முதல், கென்லோச், வின்டர்பாட்டம், லார்ஸ் வான் ட்ரையர் ஈராக ஆனந்த பட்வர்த்தன் வரை இந்தக் கலைஞர்கள் இருக்கிறார்கள்.
வன்முறையும்-பாலுறவும் சார்ந்த திரைச் சித்தரிப்புகள் தொடர்பாக நாம் சில புரிதல்களுக்கு வந்து சேர வேண்டும். நுகர்வு வகையிலாள பாலுறவை முன்வைக்கும் ஹார்ட்கோர் போர்னோகிராபியை எதிர்க்காத அமெரிக்க-மேற்கத்திய சமூகங்கள், ஈராக்கிலும் ஆப்கானிலும் வன்முறை வெறியாட்டமாடிய அந்தச் சமூகங்கள், இந்த இடங்களில் இவர்கள் புரிந்த வன்முறைகள், பாலுறவு வல்லுறவுகள் தொடர்பாக தணிக்கையை இறுக்குகின்றனர். இதற்கு எதிராகவும் கலைஞர்கள் போராடி வருகிறார்கள். இவர்கள் அதில் வெற்றிபெற்றும் வருகிறார்கள்.
இந்தக் கலைஞர்களின் இடையறாத போராட்டங்களே மேற்கத்திய அரசுகளின் தணிக்கை முறைகளில் மிகப்பெரும் மாற்றங்களைக் கொண்ட வந்திருக்கிறது. 90 ஆண்டுகளாக நோர்வே தணிக்கை முறை தடைசெய்து வைத்திருந்த 200க்கும் மேற்பட்ட படங்கள் 2003 ஆம் ஆண்டு, அவர்களது தணிக்கை முறையில் கொணர்ந்த மாற்றத்தினையடுத்து, தடைநீக்கம் செய்யப்பட்டன. அப்படித் தடை நீக்கம் செய்யப்பட்ட படங்களில் ஒன்று பெண்ணின் அதீதப் பாலுறவு வேட்கையைச் சித்திரித்த நகிஸா ஒஸிமாவின் அய்னோ கோரா திரைப்படம்.
இவ்வாறு நேர்ந்த மாற்றங்களின் அடிப்படையில்தான், அனைவரும் பார்க்கத் தக்க படங்கள், பெற்றோர் துணையுடன் பார்க்கத் தக்க படங்கள், வயது வந்தோர் பார்க்கத் தக்க படங்கள், இதுவன்றி குறிப்பிடத்தக்க இடங்களில் மட்டுமே பார்க்கத் தக்க படங்கள் எனத் திரைப்படங்களை உலக அரசுகள் வகைப்படுத்துகின்றன. இதில் நாட்டுக்கு நாடு சிறிய-பெரிய வித்தியாசங்கள் உண்டு. அமெரிக்காவில் வயது வந்தோர் என்பவர் 17 வயதுக்கு மேற்பட்டோர். பிரித்தானியாவில் அது 18 வயதாக இருக்கிறது. இந்நாடுகளில் போர்னோகிராபிப் படங்களைப் பார்க்கவும் விற்கவும் எனவே தனித்த கடைகளும் திரைப்படக் கொட்டகைகளும் இருக்கின்றன. இந்தத் தரப்படுத்தலையும் வகைப்படுத்தலையும் ஒட்டிய திரைப்படப் பார்வையாளர் கலாச்சாரம் அமெரி;க்க-மேற்கத்திய நாடுகளில் நடைமுறைக்கு வந்துவிட்டது.
துரதிருஷ்டவசமாக திரைப்படத் தணிக்கை முறையில் நேர்ந்த இந்த மாற்றமும், திரைப்படப் பார்வையாளர் கலாச்சாரமும் இந்தியாவில்-தமிகத்தில்-இலங்கையில் இல்லை. இந்த அமைப்பினுள் வாழ்ந்து, மேற்குக்குப் புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்தினுள்ளும் இல்லை. இந்தியா-இலங்கை போன்ற நாடுகளின் தணிக்கை முறை இன்னும் காலனியர்களால் உருவாக்கப்பட்ட நெறிமுறைகளையே கொண்ட இயங்குகிறது. இந்த முறை மத-சாதிய-இன-பெண்வெறுப்பு மேலான்மை கொண்டவர்களுக்குப் பொறுத்தமானதாகவும் இருக்கிறது.
பார்வையாளர் கலாச்சாரம் என எடுத்துக் கொண்டால் நமது திரைப்படக் கலாச்சாரம் என்பது, திரைப்படங்கள் அனைத்தும் முழுக் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக் கண்டுகளிப்பதற்கானதாக, தாத்தா-பாட்டி முதல் பேரன்-பேத்தி வரை ஒரே இடத்தில் அமர்ந்து பார்க்கத்தக்கதாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம். இந்தக் கலாச்சாரத்திலிருந்து நாம் வெளியேற வேண்டும். குறைந்தபட்சம் மேற்கு நாடுகளில் வாழ்கிற தமிழ்ச் சமூகமாவது இதிலிருந்து வெளியேறியே ஆக வேண்டும். அப்போது தணிக்கை விதிகள் பற்றிய நமது பார்வைகளும் மாற்றம் பெறும். பாலுறுவு மற்றும் வன்முறை தொடர்பாகவும் நுகர்வுப் பண்புகொண்ட வன்முறை-பாலுறுவுக்கும், விடுதலைப் பண்பும் கலைமாண்பும் சமூகச் செய்தியும் கொண்ட பாலுறவு மற்றும் வன்முறைச் சித்தரிப்புக்களுக்கும் இருக்கும் வித்தியாசங்களை எம்மால் இனம் காணமுடியும். இன்னும் உலக அளவிலான திரைப்பட விழாக்களை முன்னெடுக்கிற எமது சமூகம் சாரந்தவர்கள் இப்பார்வையைச் சுவீகரித்துக் கொள்வது எம்மை முன்னகர்த்திச் செல்லும்.
இப்போது நோர்வே திரைப்பட விழா தொடர்பான, பாலுறவு மற்றும் வன்முறை தொடர்பான, தமிழகத் திரைப்படக் கலைஞர்களுக்கான அவர்தம் கோரிக்கையைப் பார்ப்போம். அவர்கள் சொல்கிறார்கள் :
உங்கள் படைப்புகள் ரசிகர்களின் சுகமான இளைப்பாறல்கள். இன்றைக்கு தமிழர்கள் இல்லாத நாடில்லை. அங்கெல்லாம் தமிழ் சினிமாவை கொண்டுசெல்வதும், கலை ரீதியாக மட்டுமல்ல, வர்த்தக ரீதியாகவும் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் முயற்சியில் நார்வே தமிழ் திரைப்பட விழா குழு இறங்கியுள்ளது. நார்வே தமிழ் திரைப்பட விழா தவிர மற்ற நாடுகளில் நடக்கும் திரைப்பட விழாக்களிலும் தமிழ்ப் படங்களை எடுத்துச் செல்லும் முயற்சியையும் நாங்கள் முன்னெடுத்துள்ளோம். இது தவிர, தமிழ் சினிமாவுக்கென்று புதிய சந்தையை உலக நாடுகளில் உருவாக்குவதிலும் ஓரளவு வெற்றி கண்டு வருகிறோம். எங்களது இந்த முயற்சிக்கு தமிழ்ப் படைப்பாளிகளின் ஒத்துழைப்பு மிகவும் தேவைப்படுகிறது.
சர்வதேச அரங்கில் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு கலாச்சாரம், சமூகக் கட்டுப்பாடுகள் நிலவுகின்றன. அவற்றை மனதில் கொண்டு படமெடுக்கும்போது, மிக எளிதாக அந்த நாடுகளில் படங்களை திரையிட முடியும். எந்த தடையும் வராது. உதாரணத்துக்கு வன்முறைக் காட்சிகள், மிகவும் உறுத்தலான சண்டை காட்சிகளுக்கு நார்வே போன்ற நாடுகளில் அனுமதியில்லை. அங்கு இந்த வயதுக்கு இந்த மாதிரி படங்கள், காட்சிகள்தான் பார்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. எனவே வன்முறை மற்றும் பாலுணர்வு காட்சிகள் அதிகமிருந்தால் அங்கே அதனை வயதில்லா படம் என்று முத்திரை குத்திவிடுவார்கள். அதாவது எந்த வயதுக்காரர்களும் பார்க்க முடியாத படமாகிவிடும். இதுபோன்ற கட்டுப்பாடுகள் ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நிறைய உள்ளது. இந்த முறை நமது திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்ய நினைத்த சில படங்களை இம்மாதிரி காட்சிகள் காரணமாக தேர்வு செய்ய முடியாமல் போனது.
சர்வதேச சமூகச் சூழலைப் புரிந்து காட்சியமைப்பில் படைப்பாளிகள் கவனம் செலுத்தினால் அவர்களின் படங்களை உலகின் எந்த மூலையிலும் கொண்டுபோக முடியும். படைப்பாளிகளின் சுதந்திரத்தில் தலையிடுவதாகக் கருதாமல் தங்கள் படைப்புக்கள் ஆங்கிலம், இந்திப் படங்கள் மாதிரி அனைத்து தரப்பினரையும் போய்ச் சேர ஒரு டிப்ஸ் ஆக இந்த யோசனையை செவிமடுக்குமாறு கோருகிறோம். நார்வே தமிழ் திரைப்பட விழாக் குழு என்றென்றும் தமிழ்ப் படைப்புகள் மேம்பட்டு நிற்கவும் உலகளாவிய சந்தையில் முன்னணி வகிக்கவும் துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த மேற்கோள் பல மயக்கமான கருத்தாக்கங்களையும் புரிதல்களையும் முன்வைக்கிறது :
--- திரைப்படம் ரசிகர்களின் சுகமான இளைப்பாறல்கள்
--- திரைப்படவிழா சந்தையை உருவாக்கித் தருகிறது
--- வன்முறை பாலுறவு சார்ந்த படங்கள் வயதில்லா படம் - எந்த வயதுக்காரர்களும் பார்க்க முடியாத படம் ஆகிவிடும் ஆபத்து இருக்கிறது
--- ரஸ்யா, ஜெர்மனி போன்ற நாடுகளில் கட்டுப்பாடு இருக்கிறது
மேற்கத்திய நாடுகளில் தமிழ் சினிமா சந்நைக் கட்டமைப்புக்கும் திரைப்பட விழாக் கட்டமைப்புக்கும் இருக்கும் வித்தியாசங்களை முதலில் நாம் வகைப்படுத்திக் கொள்வோம். மேற்கத்திய நாடுகளில் தமிழ் சினிமா விநியோகத்துக்கென நிலைபெற்றுவிட்ட கட்டமைப்பு ஒன்று ஏற்கனவே உள்ளது. நோர்வே திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் திரைப்படங்களில் பல படங்கள் இந்தச் சந்தை விநியோகக் கட்டமைப்பினால் திரையிடப்படமுடியும் என நினைக்கு முடியாத படங்கள். குறிப்பாகப் புகலிடத்தில் ஈழத் தமிழ் இளைஞர்களால் உருவாக்கப்படும் முழுநீளத் திரைப்படங்களை நிலவும் சந்தை விநியோகக் கட்டமைப்பு ஏற்பதில்லை. இவைகளைத் திரையிடுவதுதான் திரைப்பட விழாவின் தனித்துவம்.
இத்தகைய படங்களுக்கான சந்தை என்பது ஐரோப்பியத் திரைப்பட விழாக்கள்தான். சந்தை விநியோகத்தினைத் தாண்டியதாகவே இந்தத் திரைப்படங்கள் இயங்க முடியும். இத்திரைப்படங்கள் பாலுறவையும் வன்முறையையும் சித்திரிக்கலாம். இவைகளைத் திரையிடுவதற்கான உரிமையை நாம் மேற்கத்திய நாடுகளிடம் அவர்களது திரைப்பட வகைப்படுத்தல்களுக்குள் போராடிப் பெறமுடியும். நாம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அல்லவெனில் இலங்கை அரசின் வன்முறை, பாலியல் வல்லுறவு மற்றும் சித்திரவதைகள் தொடர்பான ஒரு புகலிடப் படத்தையோ அல்லது ஆரண்ய காண்டம் போன்ற டிரென்ட் செட்டிங் படங்களையோ, தமிழக மீனவர்கள் பற்றிய செங்கடல் படத்ததையோ திரைப்பட விழாவில் திரையிட முடியாத சூழலே உருவாகும். இது திரைப்பட விழாக்கள் தமிழ் சினிமாவுக்குச் செய்யத்தக்கப் பங்களிப்பைச் செய்ய இயலாததாக ஆக்கிவிடும்.
முக்கியமாகத் திரைப்படங்கள் ரசிகர்களுக்கான சுகமான இளைப்பாறுதல்கள் என்பதிலிருந்து மேற்சென்று, திரைப்படங்கள் என்பது நம்மைத் தொந்தரவு செய்யும், அறிவுறுத்தும், புதிய பிரக்ஞைசார் அனுபவத்தைத் தரும் சாதனம் எனும் புரிதலை நோக்கி நாம் செல்ல வேண்டும்.
வயதில்லா படம், எந்த வயதினரும் பார்க்க முடியாத படம் எனும் மயக்கமான சொற்கள், ‘குடும்பத்தினருடன் இருந்து பார்க்க முடியாத’ படமாகி விடும் எனும் அர்த்தத்தில் கையாளப்படுகிறது என நினைக்கிறேன். திரைப்பட விழா படங்களும் வயதுசார்ந்த வகைப்படுத்தலுக்கும் தரப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டு, அத்தகைய பார்வையாளர்களுக்கு எனத் திரையிடப்படுதலே திரைப்பட விழாவின் நோக்கங்களைப் பூர்த்தி செய்வதாக, காத்திரமான புதிய கருப்பொருள்கொண்ட படங்களை உற்சாகப்படுத்துவதாக இருக்கும்.
ரஸ்யா இன்னும் தனது எதேச்சாதிகார மற்றும் இரும்புத் திரை அரசியலில் இருந்து இன்னும் மீளவில்லை என்றாலும், தற்போது அவர்களும் தரப்படுத்தல் மற்றும் வகைப்படுத்தல் நெறிமுறைகளை ஏற்றுக்கொள்ளத் துவங்கியிருக்கிறார்கள். பாசிச வன்முறை எனும் மானுட விரோத வன்முறையின் நினைவுச்சுமைகளில் இருந்து, யூத இனக்கொலை நினைவுகளில் இருந்து இன்னும் ஜெர்மானியர் மீளவில்லை. இந்த மனநிலை இன்னும் அவர்களது தணிக்கை விதிகளில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. என்றாலும் அறுபதுகளின் அரசியல் வன்முறை, கட்டுதளையற்ற சுதந்திரப் பாலுறவு போன்றவற்றைச் சித்திரித்த பாதார் மெயின்காப் காம்ப்ளக்ஸ் போன்ற படங்களோடு, இட்லரது வாழ்வைச் சித்திரித்த டவுன்பால் போன்ற படங்களும் ஜெர்மனியில் இருந்து வரவே செய்கின்றன.
மேற்குறிப்பிட்ட வரலாற்றுச் சான்றுகளில் இருந்தும், அவதானங்களில் இருந்தும் தமிழ்த் திரைப்படங்களில் பாலுறவுச் சித்தரிப்பும்-வன்முறையும் திரைப்பட விழா நெறிமுறைகளும் என்பது தொடர்பாக நாம் சில புரிந்துணர்வுகளுக்கு வரமுடியும்.
சமூக நோக்கும், வரலாற்று இருப்பும், படைப்பு நோக்கும் கொண்ட வன்முறை-பாலுறவு சார் திரைப்படங்களை நாம் நிராகரிக்கக் கூடாது. அது எமது துன்புற்ற மக்களுக்கு நாம் செய்யும் அநீதியாகக் கூட ஆகிவிடும். இதற்காக நாம் மேற்கு நாடுகளின் திரைப்படத்தரம் மற்றும் வகைப்படுத்தல் நெறிகளுக்குள் நின்று அந்தத் திரைப்படங்களைத் திரையிடப் போராடமுடியும். நம்மளவில் குடும்பத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படப் பார்வையாளர் கலாச்சாரம் என்பதிலிருந்து நாம்மீள வேண்டும். வகைப்படுத்தலுக்கு ஒப்ப, அவரவர் பார்க்குமாறான, கலவையான திரைப்படங்களை நாம் தேர்வு செய்து, திரைப்பட விழாவை அனைவரும் பார்க்கும் வாய்ப்பை வழங்க முடியும். நோர்வே திரைப்பட விழா இந்த வகைகளில் நிஜமாகவே உலகத்தரமானத் தமிழ்-ஈழத் திரைப்படங்களைத் திரையிடும் முக்கியமான உலகத் திரைப்பட விழாவாக நிரந்தரமாகச் செயல்பட முடியும்.