கால்வாய்களை சுத்தப்படுத்தவும், புற்களை வெட்டுவதற்காகவும் இராணுவத்தினருக்கு பயிற்சிகள் வழங்கப்படவில்லை எனவும் தனது முறைகளுக்கு ஏற்றவகையிலேயே தான் யுத்தத்தை செய்ததாகவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சிலர் புத்தகங்களில் உள்ள போர் முறைகளை பின்பற்றி யுத்தம் செய்தனர். எனினும் எனது முறைமைக்கு அமையவே நான் யுத்தம் செய்தேன். எதிரியின் பலம் குன்றிய இடத்தில் நான் தாக்குதல் நடத்தவில்லை. பலமாக இருக்கும் இடத்திலேயே தாக்குதல் நடத்தினேன். இவ்வாறான நான் உலக போர் முறையில் மாற்றங்களை செய்தேன். இவ்வாறு செய்த எனக்கு, எனது முறைமைக்கு ஏற்ப அரசியல் கலாசாரத்தையும் மாற்றமுடியும். போரில் வெற்றிப்பெற்றது போன்று ஒரு நாள் நாட்டையும் வெற்றிக்கொள்வேன்.
தேசிய பாதுகாப்பு வழங்கவே நான் இராணுவத்தினருக்கு பயிற்சியளித்தேனே அன்றி, கால்வாய்களை சுத்தம் செய்யவும் புற்களை வெட்டவும் அல்ல. கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டுமானால் அதற்கான ஊழியர்களை இணைத்து கொள்ள முடியும். இது குறித்து நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். இன்று மக்கள் மத்தியில் இராணுவத்தினருக்கு இருந்த மதிப்பும், மரியாதையும் இல்லாமல் போயுள்ளது. சாதாரண சிப்பாய், தொழிலாளி அடையும் துன்பத்தை விட அதிக துன்பங்களை அனுபவித்து வருகிறார் எனவும் சரத் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார்.