கிழக்கு மாகாணசபை திருகோணமலை மாவட்டத்திற்கான தமது வேட்பு மனுக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று தாக்கல் செய்துள்ளது.
கிழக்கு மாகாணசபைக்கான வேட்பாளர் தெரிவு, உட்பட பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்திருந்த நிலையில் இன்று திருகோணமலை மாவட்டத்திற்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 9 பேர் இலங்கை தமிழரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் எனவும், ஏனையவர்கள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் விபரம் வருமாறு:
இலங்கை தமிழரசுகட்சி சார்பில்
சி.தண்டாயுதபாணி முதன்மை வேட்பாளர் - கல்வி நிபுணத்துவ ஆலோசகர்.
க.கோணேஸ்வரன் - தபால் அதிபர்
இந்திராணி தர்மராஜா - சுதேச மருத்துவர்
எஸ்.அந்தோனிப்பிள்ளை - சமாதான நீதவான்
எம்.எஸ்.பளீல் - புல்மோட்டை
க.நாகேஸ்வரன் - மூதூர்
எஸ்.விஜயகாந்த் - பிரதேச சபைத் தலைவர் வெருகல்
க.வியஜரெட்ணம் - பதிவாளர் தம்பலகாமம்
க.ஜனார்த்தனன் - பல்கலைக்கழக மாணவர் ஒன்றிம்
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சட்சி சார்பில்
வெ.சுரேஷ் - தமிழர் விடுதலைக் கூட்டணி
பு.யுகநாதன் - ஈ.பி.ஆர.எல்.எப்
ந.குமணன் - புளொட்
க.நித்தியானந்தம் - ரெலோ
தமிழ், முஸ்லிம் ஆகிய தமிழ்பேசும் மக்களின் விருப்பங்களுக்கு அமைய கிழக்கு மாகாண நிர்வாகம் எதிர்காலத்தில் அமையவேண்டும் என்பதன் அடையாளமாகவே தமது வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு எல்லையில் அமைந்துள்ள புல்மோட்டை கிராமத்திலிருந்து முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமொன்றிலிருந்து இந்த வேட்பாளர் போட்டியிடுவதாக சம்பந்தன் கூறினார்.
வடக்கு கிழக்கு பிரதேசங்கள் இரண்டு மாகாணங்களாக பிரிக்கப்பட்ட நடவடிக்கையை கண்டிக்கும் முகமாகத்தான் கடந்த தடவை கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால், கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னர் பொறுப்பேற்ற நிர்வாகம் தமிழ்ப் பேசும் மக்களின் தேவைகளை அடையக்கூடிய விதத்தில் அமையாதபடியால்தான் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூறினார்.
அதிகாரப்பகிர்வு முறையாக அமையவேண்டும், மாகாணசபைகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்ற அடிப்படையில் அதனை அடைவதற்காக தாம் முயற்சித்துவருவதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.
தொடர்ந்தும் தேர்தலைப் புறக்கணிக்கமுடியாது என்ற அடிப்படையில்தான் இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டியேற்பட்டதாகவும் அவர் கூறினார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்கள் இன்று திங்கட்கிழமை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் வேட்புமனுக்களை கையளித்தபோதே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தக் கருத்துக்களை தமிழோசையிடம் கூறினார்.