நேற்று நான் ஒரு போராளியாக இருந்தேன்.
அவ்வாறுதான் நான் என்னை நீண்டநாள் நம்பியிருந்தேன்.
நம்பிக்கைதானே வாழ்க்கை!
தலைவர் கடைக்கண்ணாற் கேட்டவற்றை
நான் கைத்துப்பாக்கியாற் செய்துமுடித்தேன்.
எதிரி யார் என்பதைத் தலைவரே சொன்னார்.
நம்பிக்கை தானே வாழ்க்கை.!!
தலைவருக்குப் பிடிக்காதவர்கள்
எனக்கு எதிரிகளாக இருந்தார்கள்.
தலைவர் அருகில் இருந்தபோது
என்னிடமும் ஒரு அதிகாரம் இருந்தது.
அது சுகம் தருவதாக இருந்தது.
அச்சுகத்தில் தலைவர் செய்தவைகள் குறித்து
நான் ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை.
அதிகாரத்தின் ஒரு பகுதியாகவோ
அதன் நிழலிற் குளிர் காயும்போதோ
வாழ்வுதான் எவ்வளவு அழகானது.
அதிகாரத்துடன் இசைந்து செல்லும் கலையை
நான் கற்றுத் தேர்ந்தேன்.
அன்றைக்குத் தலைவர் சாகாவரம் பெற்றவர்
என்றே எண்ணியிருந்தேன்.
மரணத்தின் மேகங்கள் சூழ்ந்தபோது
அவை தலைவரை மட்டுமல்ல
என்னையும் சூழ்வதைக் கண்டுகொண்டேன்.
தலைவரின் மந்திர உச்சாடனங்கள் ஓசையிழந்து போயின.
தலைவரின் தம்பிகள் என் பிள்ளைகளைக் களவாடத் தொடங்கினர்.
நான் திடுக்கிட்டுப் போனேன்.
நான் குளிர்காய்ந்த நெடுமரமோ இது?
கடந்த காலம் ஒரு கெட்ட கனவாக இருந்துவிடக்கூடாதா என்று ஏங்கினேன்.
எதிரியும் கடலும் மட்டுமே சூழ்ந்திருந்த அந்த நகரத்தில் இருந்து
தப்பிச்செல்ல வஸ்கொடகாமா அல்லது கொலம்பஸ் உதவக்கூடும் என்று நினைத்திருந்தேன்.
தலைவரை இதயத்தில் தாங்கியவர்கள் தங்களையும்
தங்கள் பிள்ளைகளையும் காவுகொடுத்து ஒவ்வொருவராகக்
கனரக வாகனங்களின் கீழே நசிந்துகொண்டிருந்தார்கள்.
“அவர்களோ” மக்களையும்
செங்களம் மீது எங்களோடோடாத தோழர்களையும்
இன நல்லிணக்க ரொட்டி சுடுவதற்காகப்
பிசைந்துகொண்டிருந்தார்கள்.
“அவர்கள்” யாரென்று கேட்கிறீர்கள்.
அவர்கள் முன்பு எதிரிகளாக இருந்தார்கள்.
தலைவரின் கடைக்கண்வீச்சு என்னுள் இருந்து மறைந்த போது
என்னுள் ஒரு ஒளியும் பிறந்தது.
அவர்கள் உண்மையிலும் எதிரிகள் தானா என்று எனக்குச் சந்தேகமே வந்து விட்டது.
செஞ்சோற்றுக் கடன் கழிக்கச் சேர்ந்து மடிவதா
இல்லை அவர்களுடன் சேர்வதா என்ற கேள்வி என்னுள் எழுந்தது.
தலைவரின் கண்ணிவெடிக்குத் தப்பிய கூட்டம் ஒன்றும்
அவர்களுடன் இணைந்து கடிநாயாகியிருந்தது.
கர்ணன் ஆவதா கடிநாய் ஆவதா என்ற கேள்வி எழுந்தபோது……..
நீங்கள் என்றால் என்ன செய்வீர்கள்?
அவர்களை ஏன் எதிரிகள் என்று அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கள் எசமானர்கள் என்றே அர்த்தப்படுத்திக் கொள்ளலாமே?
ஒரு தலைமை இல்லாதபோது இன்னொரு தலைமையை ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு?
எது முக்கியம்? கொண்ட கொள்கை தவறாமை .
கொள்கை என்ன?
தலைவருக்குப் பிடிக்காதவற்றைக் கடுமையாக விமர்சிக்க வேண்டும்.
தலைவருக்குப் பிடிக்காதவற்றைச் செய்யக்கூடாது. எழுதக்கூடாது.
தலைவர்கள் மாறினாலும் இந்தக் கொள்கை மாறாது.
அவர்கள் ஒன்றும் அவ்வளவு மோசமானவர்கள் இல்லை.
எங்கும் நீக்கமற நிறைந்திருந்து
சந்து பொந்துகளில் எல்லாம் கட்டிய விகாரைகளில் வைத்து
முன்பு “சுட்ட” இன நல்லிணக்க ரொட்டிகளை வழங்குகிறார்கள்.
நாங்கள் சுற்றுலாப் போகலாம்
திருவிழாச் செய்யலாம்
தேர் இழுக்கலாம்.
ஆயிரம் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்யலாம்
ஆடிக் கூழும் காய்ச்சலாம்.
இந்த அதிகாரம் அந்த அதிகாரம் போலில்லை.
ஆனால் அதிகாரங்களுடன் பழகியவன் என்ற முறையிற் சொல்கிறேன்
காணாமல் போனவர்கள் எங்கே என்று கேட்க வேண்டாம்
கைது செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்று கேட்க வேண்டாம்.
நாதியற்றவர்கள் நீதி விசாரணை என்று வெளிகிடவேண்டாம்.
ஆதி நிலம் காணி நிலம் என்று கதை அளக்க வேண்டாம்.
ஓன்றுமறியாச் சிங்கள மக்களைப் பிரித்து ஓதி
கெடுப்பதையும் கேட்கவேண்டாம்
வெள்ளை வானைப்பேசவேண்டாம்
கொள்ளை அடித்தால் குளறவேண்டாம்
சரியாசனம் கேட்க வேண்டாம்
சமபந்தி போசனமும் கேட்க வேண்டாம்.
எதனையும் பகிரக் கேட்க வேண்டாம்.
ஏதாவது செய்ய வேண்டும் என்று தினவெடுத்தால்
இறந்து போன புலியை இழுத்து வந்து
ஒவ்வொரு மயிராகச் சிரையுங்கள்.
இங்கே வாழலாம்.
நறுமுகை ஞானம்
(நான் இந்தியன் இல்லை)