விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

ரிசாட் பதியுதீனும் புலிகளின் ஆத்ம சாந்தியும்…. நடராஜா குருபரன்-

 

ரிசாட் பதியுதீனும் புலிகளின் ஆத்ம சாந்தியும்…. நடராஜா குருபரன்-

 

வடக்கில்  குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஏற்படுத்தப்படும் தடங்கல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் (27.07.12) எதிர்ப்பு பேரணியொன்று இடம் பெற்றது. சிறீலங்கா முஸ்லிம் கவுன்சில் விடுத்திருந்த அழைப்பின் பேரில் உருவான இந்தப்  பேரணி வேகன்ந்த பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பித்து கொம்பனி வீதி வழியாக, லேக்ஹவூஸ் சுற்றுவட்டத்தின் ஊடாக ஜனாதிபதியின் செயலகத்திற்குச் செல்லமுயன்ற போது பொலீஸார் இரும்பு வேலிகளை இட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டவர்கள் தமது பதாகைகளில் 

கீழ்வரும் வாசகங்களைப் பொறித்திருந்தனர்.

புலிகளின் மறுபிறப்பை நிறுத்து! 

மீண்டும் வடக்கில் பயங்கரவாதம் தோன்றுவதற்கு இடமளிக்காதே!! முஸ்லிம்களை வாழவிடு, 

எமது பூர்வீக மண்ணை மீட்டுத்தாருங்கள், 

மன்னார் முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு புலிக் கூட்டு தமது கரங்களை நீட்டிவிட்டது. 

எமது முஸ்லிம் தலைமைகளைப் பாதுகாக்க ஒன்றுபடுங்கள்,

வடக்கில் எமது வாழ்வுரிமையை ஜனாதிபதி அவர்களே உறுதிப்படுத்துங்கள், 

மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் போது அதற்கெதிரான சாத்வீகப் போராட்டங்கள் மிகமிக அவசியமாகின்றன. பாதிக்கப்படும் மக்கள் அவ்வாறு போராட்டங்களில் ஈடுபடும் போது இத்தகைய போராட்டங்களை  இன அடிப்படையில் பிரித்து நோக்குவது தவறானதாகும்.

ஆனால் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும், காத்தான் குடியிலும் நிகழ்ந்த இந்தப் போராட்டத்தின் பின்னுள்ள அரசியலை நுணுக்கமாக ஆராயவேண்டியது அவசியமாகிறது. ஏனேனில் ஒரு பத்திரிகையாளனாக எனது பார்வையில் முஸ்லீம்கள் வடக்கு கிழக்கில் எதிர் நோக்கும் பிரச்சனைகளை அரசியல் வாதிகள் தமது சொந்த லாபங்களுக்காக பயன்படுத்துவதாகத் தெரிகிறது.  முஸ்லீம் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் உண்மையான விருப்பம் இருக்குமென்றால் இந்தப்போராட்டங்கள் வேறு ஒருதளத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கும்.

தமது பேரினவாத மற்றும் சுயலாப அரசியலுக்காக அரைநூற்றாண்டுக்கு மேல் இனங்களுக்கிடையில் பகையுணர்வை எண்ணை ஊற்றி எரியவிட்டு அதில் குளிர்காயும் பிற்போக்குச் சிங்கள பெரும் தேசிய அரசியல்வாதிகளுடன் ஒட்டிக்கொண்டு, அரசியலில் சுகபோகங்களை அனுபவிக்கும் அமைச்சர் ரிஸாத்பதியுதீனும் அவர் போன்றே அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டு சலுகை காணும் ஏனைய முஸ்லீம் அரசியல்வாதிகளும் முஸ்லீம்களின் உண்மையான பிரச்சனைகளை இட்டு எந்த அக்கறையுமற்றிருக்கிறார்கள்.

மன்னாரில் உண்மையில் என்ன நடக்கிறது என்பது தெளிவற்றிருக்கிறது. இங்கே இந்தப்பிரச்சனையை புறமிருந்து பார்ப்பவர்களுக்கு பின்வரும் கேள்விகள் எழுகின்றன.

மன்னாரில் முஸ்லீம் மக்கள் தமது சொந்த இடங்களில் குடியேறுவதற்கு யார் தடையாக இருக்கிறார்கள்?

எந்த வகையில் தடையாக இருக்கிறார்கள்? 

முஸ்லீம் மக்களை அவர்கள் பூர்வீகமாக வெளியேற்றப்படுவதற்கு முன் கடைசியாக வாழந்த சொந்த இடத்திலா அல்லது  அரசாங்கக் காணிகளிலா அல்லது தமிழ் மக்களின் காணிகளிலா  அமைச்சர் குடியேற்ற முனைகிறார்?

மீன்பிடி உள்ளிட்ட அனைத்து தொழில் வாய்ப்புக்களும் பொதுவான வாழ்வாதாரங்களும் வளங்களும் தமிழ் முஸ்லீம் மக்களிடையே உரிய முறையில் பங்கிடப்படுகிறதா? 

போன்ற கேள்விகள் எழுகின்றன.

முஸ்லீம்களின் வாழ்வுரிமையும் அவர்களின் பூர்வீகமான வாழ்விடங்களும் யாராலும் பறிக்கப்படக் கூடாதவை. இது குறித்து விவாதத்திற்கே இடமில்லை.

ஆனால் இலங்கையில் யாருக்கு தும்மல் வந்தாலும் அதற்கு புலிகள் தான் காரணம் எனக்கூறும் அரசியலை புலிகள் இல்லாது போய் மூன்று வருடங்களின் பின் எடுத்து வந்து முஸ்ஸிம் அரசியல்வாதிகளும் கடை விரிப்பதுதான் கவலை தருவது. அதிலும் முஸ்லீம் தமிழ் மக்கள் ஒற்றுமை மிகவும் தேவைப்படுகிற ஒரு கணத்தில் இல்லாத புலிப்பூச்சாண்டி காட்டும் அரசியலை செய்வதன் நோக்கம் தான் என்ன?.

நீதிபதி ஒருவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு மிரட்டித் தீர்ப்பை மாற்றி எழுதச் சொல்லியதால் ஏற்பட்ட விளைவுகளால் தனது தனிப்பட்ட அரசியல் இருப்பிற்கு கேள்வி எழுகிற போது தன்னைப் பாதுகாப்பதற்காக முஸ்லீம் மக்களின் பொதுவான பிரச்சனைகளுடன் அதனை முடிச்சு போடுவதுடன் அதற்குள் புலிகளையும் இழுக்கும் கழிசடை அரசியலை அமைச்சர் ரிட்சட் பதியுதீன் செய்வது ஒன்றும் உலக அதிசயமல்ல.

மக்களை போராட்டத் தூண்ட முதல் புலிகளின் மறுபிறப்பு யார் என்பதை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டிய கடமை அமைச்சருக்குள்ளது.

ரிட்சட் பதியுதீனுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை முற்றிலும் சட்டம் மற்றும் நீதி சார்ந்த பிரச்சனையாகவே உள்ளது. உண்மையிலும் நீதிமன்ற அவமதிப்பு மற்றும் நீதிபதியை எச்சரித்தமை குறித்து இப்போ மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி நேரில் ஆஜராகி அதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே இந்தப்பிரச்சனையைச் சட்டரீதியாகக் கையாள்வதை விடுத்து புலிப்பூச்சாண்டி காட்டுவது மலின அரசியலாக புலப்படவில்லையா?

அமைச்சரின் நடவடிக்கை தவறானது எனத் தெரிவித்தால் தெரிவிப்பவர்கள் புலிகளாகிவிடுவார்கள என்றால்….

நானே ஒரு புலிப்பட்டியலைக் கீழே தயாரித்துத் தருகிறேன்.

நீதிபதியை அச்சுறுத்தியமை தொடர்பாக விஜயதாஸ ராஜபக்ஸ தலைமையிலான சட்டத்தரணிகள் சங்கமும், நீதிபதிகளின் சங்கமும் மற்றும் நாட்டின் சட்டத்துறை, நீதித் துறை சார்ந்த அனைவரும் இணைந்து ஒரு போராட்டத்தை நடத்தியிருந்தனர்… இவர்கள் புலிகள்…

காலியில் உள்ள சட்டத்தரணிகள் சிலரும் கொழும்பில் உள்ள சட்டத்தரணிகள் சிலரும் மன்னாரில் உள்ள சட்டத்தரணிகள் அமைப்பும் இணைந்தே மேன்முறையீட்டு நீதிமன்றில் அமைச்சருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளன…. இவர்கள் புலிகள்.

நீதிமன்றத்தை நீதித்துறையை நீதிபதியை அச்சுறுத்தியமை குறித்து நீதி அமைச்சர் என்ற வகையில் கவலையடைவதாக அமைச்சர் றவூவ் ஹக்கீம் கூறினாரே அவருக்கு முன்பு புலிகளுடன் ஒப்பந்தம் செய்த காலத்தில் புலிகள் நீண்ட காலத்தின் பின் தொழிற்படக்கூடிய வசிய மருந்து எதேனும் கொடுத்திருப்பார்களோ?...

நீதித்துறையை அவமதித்தமை குறித்து அமைச்சரவையில் உள்ள அமைச்சரின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமை குறித்து கவலை கொள்வதாக  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கூறியிருக்கிறாரே அவருக்கு முள்ளிவாய்க்காலில் கோரமாகக் கொல்லப்பட்ட புலிகளின் ஆவியால் சிலவேளையால் புத்தி பேதலித்து விட்டதோ…

மன்னார் நீதிபதி புலிகளின் மறுபிறப்பாக உருவெடுத்து பொய் சொல்கிறார் என்றால், மன்னார் நீதிமன்றத்தைத் தாக்கி அதனை சேதப்படுத்தியமை தொடர்பான வீடியோக் காட்சிகளை செய்தியாக ஒளிப்படங்களாக, வெளியிட்ட முஸ்லீம் ஊடகவியலாளர்களை புலிகளின் முன்னாள்த் தளபதிகளென்பதா?

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சமூகமளித்து உங்களிடமுள்ள ஆதாரங்களைச் சமர்ப்பித்து மன்னார் நீதிபதியினதும் அவர் சார்ந்தவர்களினதும் குற்றச்சாட்டுகள் பிழையானவை என்றும் அவர்கள் புலிகளே என்றும் நிரூபியுங்கள் மறுகணமே மன்னார் நீதிபதியை பூசாவுக்கு அனுப்பி அதன்பின் சமயம் வரும் போது அவரும் நிமலரூபனிடம் அனுப்பப்படுவார்... 

அரை நூற்றாண்டுக்கு மேலாக கொழுந்து விட்டு எரிந்த சிங்கள, தமிழ் முஸ்லீம் இனவாதங்கள் குறித்தும் பிற்போக்கான குறுகிய தேசியவாதங்கள் மற்றும் இவற்றிடையே நிலவிய முரண்பாடுகள் குறித்தும் எல்லாத்தரப்பிலும் உள்ள முற்போக்குசக்திகள் இப்போது மீளாய்வு செய்யத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் ஒவ்வொருவரும் சுயவிமர்சனங்கள் குறித்தும் வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும் ஆரோக்கியமான முறையில் சிந்திக்கத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் புலிப்பூச்சாண்டி காட்டி குட்டையை இன்னமும் குழப்பும் மூன்றாம் தர அரசியலை செய்ய வேண்டாம் . 

உங்களது சொந்த அரசியல் இருப்புக்கு ஆபத்து ஏற்படுகின்ற போது? சுகபோகங்களுக்குப் பாதிப்பு ஏற்படுகின்ற போது? தேர்தல்கள் வரும் போது வாக்கு வங்கிகளை உருவாக்குவதற்காக இனங்களுக்கிடையே மோதல்களை ஏற்படுத்தும் நாச அரசியலைச் செய்ய வேண்டாம்.

உண்மையிலும் உங்களுக்கு முஸ்லீம்களின் நலன்கள் முக்கியமென்றால்  வடக்கு கிழக்கில் முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் அடிப்படையான பிரச்சனைகளை ஆராய்ந்து அவற்றை தீர்ப்பதற்கான பரிந்துரைகளைச் செய்யக்கூடிய ஒரு சுயாதீனமான அரச மற்றும் கட்சி சார்பற்ற குழுவை உருவாக்கவும் அதற்கு தங்குதடையற்ற விசாரிப்பு மற்றும் அறிதல் சுதந்திரத்தை வழங்கவுமான ஒரு ஆக்க பூர்வமான முனைப்பை எடுங்கள்

 வடக்கு கிழக்கைப் பிடித்திருக்கும் எல்லாப்பேய்களையும் பிசாசுகளையும் இவர்கள் இனம்கண்டு பகிரங்கப்படுத்தட்டும். ஒரு ஊடகவியலாளன் என்ற வகையிலும் உங்களிடமும் பல செவ்விகளை சூரியன் எஃப் எம் இன் விழுதுகள் நிகழ்ச்சிக்காக எடுத்திருக்கிறேன் என்ற வகையிலும் நேரிலும் உங்களுடன் பேசியிருக்கிறேன் என்ற வகையிலும் இந்தச் சவாலை  நான் உங்களிடம் விடுக்கிறேன்.

முஸ்லீகளின் இருப்புக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் சிங்களப் பேரினவாதிகள் சவால் விடுக்கும்போது பெட்டிப்பாம்பாக அடங்கிக்கிடக்கிறீர்கள். உங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை இழக்கத் துணிவில்லாமல் அடங்கிப்போகிறீர்களே அதற்கான விளக்கத்தை உங்கள் உண்மை முகம் தெரியாமல் அந்தரிக்கும் என் சகோதர முஸ்லீம் சமூகத்திற்கு வழங்கத் துணியுங்கள் நான் உங்களுக்கு சல்யூட் அடிக்கிறேன் . 

தம்புள்ளவில் அரை நுற்றாண்டாக முஸ்லீம்கள் ஐந்து நேரத் தொழுகையைச் செய்து வந்த பள்ளி வாசலை தம்புள்ளவில் உள்ள அரசாங்கசார்பு அரசியல்வாதிகளும் அரசாங்கசார்பு பௌத்த பிக்குகளும் தாக்கி அழிக்க முற்பட்டபோது நீங்கள் ஊர்வலம் போனமாதிரித் தெரியவில்லையே? (நான் அரசுடன் இணைந்து நின்று மக்களைத்தின்னும் முஸ்லீம் அரசியல்வாதிகளைக் கேட்கிறேன்) இன்றுவரையும் அப்பள்ளிவாசலைத் திறப்பது குறித்து உரிய தீர்வுகள் வழங்கப்படாமை குறித்து நாடு தழுவிய மக்கள் போராட்டங்களை முஸ்லிம் அமைச்சர்களோ உள்ளுராட்சி மாகாண சபைகளின் உறுப்பினர்களோ  தொடர்ச்சியாக முன்னெடுத்ததாக தெரியவில்லையே.

அரசாங்கத்தின் பங்காளிகளாக உள்ள ஹெல உறுமய மற்றும் கடும் போக்கு பௌத்த பேரினவாதக் கட்சிகள் முஸ்லீம்களுக்கு எதிராக வெளிப்படையாக விடுகின்ற அறிக்கைகளைக் கண்டிக்கவோ முஸ்லீம்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்க்கவோ திராணியற்று நிற்கிறீர்களே.

தீகவாபி பிரதேசம் உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்தின் முஸ்லீம்களின்  வாழ்விடங்கள் மற்றும் வயல்நிலங்கள் பலவற்றை கையகப்படுத்தும் நடவடிக்கையில் சுற்றாடல் சூழல் அமைச்சராகவிருந்த  சம்பிக்க றணவக்க வெளிப்படையாக ஈடுபட்டபோது ஏன்  ஊர்வலம் போகவில்லை நீங்கள்!. 

அராபிய தேசங்களில் இருந்து வந்த வந்தேறு குடிகள் என உங்களைக் கூறிய ஹெல உறுமைய பங்கெடுக்கும் அரசாங்கத்தில் நீங்கள் வீற்றிருக்கும் கொலுவென்ன?

நீங்கள் உண்மையிலும் முஸ்லீம் மக்களின் நலனுக்காகப் போராடுகிறீர்கள் என்றால் இங்கே ஆரம்பிக்கவேண்டும் உங்கள் போராட்டத்தை.

முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர், எம்.ஆர்.எம். பைசால்  அண்மையில் அதன் சார்பில் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். 

அதன் சாரம் இதுதான்:

தொடர்ந்தும் முஸ்லிம் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து இருப்பது முஸ்லிம் மக்களுக்கு செய்யும் துரோகமாகும். தம்புள்ளையில் நடந்தது போலவே தாம்பகாம பிரதேசத்திலும் நடந்து உள்ளது. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொலிசார் தமது கடமையை செய்யாது பேரினவாதத்திற்கு துணைபோனதுடன் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி உள்ளனர். இந்த நாட்டில் தற்போது முஸ்லிம் மக்கள் மற்றும் தமிழ் மக்கள்மீது தாக்குதல் நடத்துவது அவர்களது மதச் சுதந்திரத்தை பறிப்பதும் பேரனவாத நிகழ்ச்சி நிரலில் கட்டாயமானது ஒன்றாகவே காணப்படுகிறது. இந்த நாட்டில் ஜனநாயக சுதந்திரத்தை மதச் சுதந்திரத்தை மதிக்கின்ற அனைவரும் ஓரணியில் திரண்டு மிலேச்சத்தனமான பேரினவாத சக்திகளுக்கு எதிராக செயற்பட முன்வரவேண்டும.; நாம் பிரிந்து நிற்பதால் பேரினவாதிகளே பலம் பெறுவார்கள். 

முஸ்லிம்களது புனித நாளாக கருதப்படும் இந் நோன்பு காலத்தில் மதத் தலத்திற்கு பிரவேசித்து வேறொரு மத அனுஸ்டானங்கள் நடத்தி இருப்பது மன்னிக்கமுடியாத குற்றமாகும். இப்பாவச் செயலை புரிந்தவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும். 

உலகத்தில் இதுபோன்ற நிந்தமான செயற்பாடுகளை வேறு எங்காவது நடந்து இருப்பதை நாம் அறியவில்லை. எனவே மத சுதந்திரத்திற்கு எதிரான இத்தகைய மோசமான செயற்பாட்டிற்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரளுமாறு அறைகூவல் விடுக்கிறோம்

சரி என்னுடைய வேண்டுகோளை விடுங்கள். திரு பைசல் அவர்களின் அறைகூவலுக்காவது செவி கொடுங்களேன்.

நீங்கள் முஸ்லீம் மக்களின் உண்மையான பிரசனைகளுக்குக்காகப் போராடும் போது வடக்கு கிழக்கில் முஸ்லிம்களின் வாழ்வுரிமையையும் அவர்களின் சட்ட பூர்வமான பூர்வீக நிலங்களையும் யாராவது ஒரு தமிழர் அல்லது தமிழ் மக்களின் பிரதிநிதிகள்  மறுப்பார்களாக இருந்தால்  அவரை அவர்களை, ஒரு பத்திரிகையாளனாக நான் அம்பலப்படுத்தத்தயாராக இருக்கிறேன்.

மற்றப்படிக்கு புலிகளின் ஆன்மாவைச் சாந்தியடைய விட்டுவிடுங்கள்.  

 

இந்த விமர்சனம் எமது ஆங்கல பகுதிக்குள் அனுப்பப்பட்டு இருந்தது. அதனை இங்கே தருகிறேன்.

Comment(s)
(1) Comment(s)
28/07/2012, 10:13 AM
 - Posted by Anonymous
நேற்றைய தினம் யாழில் நடைபெற்ற றிசாட் பதுதீனுக்கு ஆதரவான ஆர்பாட்டத்தின் போதுஆர்பாட்டத்தில் கலந்தகொண்ட சிலா; இந்தப்பிரச்சனையை ஒரு இனவாத சிந்தனையோடு பார்ப்பதை அவதானிக்ககூடியதாக இருந்தது. இதிலும் மன்னார் ஆயர்; மீதும் தமிழ் அரசியல் வாதிகளின் பெயர்களை அவர்கள் நேரடியாக கூறி அவர்களுக்கெதிராக கொசங்களை எழுப்பியவாறு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனா;.
அத்துடன் புலிகளுக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பியிருந்தனர். அப்போது நான்குறிப்பிட்டேன் ஏன் அவர்களை இழுக்கின்றீர்கள் உங்களின் பிரச்சனை எதுவோ அதைப் பற்றி குரல் கொடுங்கள் என்று அப்போது அங்கிருந்த ஒருவர் என்னைப் பார்த்து நீ புலியின்ர ஆளா? மிகவும் ஆவேசமாகக் கேட்டதை அவதானிக்ககூடியதாக இருந்தது.

 

தொடர்புடைய கட்டுரை

 

நீட்டப்படும் நேசக்கரங்களும் முஸ்லீம் தலமைகளின் சலுகை அரசியலும் - நடராசா குருபரன்.

 24 ஜூலை 12 01:56 (GMT)

 

 
 

 

அனுப்புக Home, Srilankan News, Articles, Muslims
அபிப்பிராயங்கள்
(9) அபிப்பிராயங்கள்
28-07-2012, 01:34
 - Posted by Anonymous
அருமையான பதிவு ..அண்ணா,முஸ்லிம் பிற்போக்கு வாதிகள் என்றைக்குமே தமிழ் முஸ்லிம் உறவை விரும்பமாட்டார்கள் ..சின்ஹல அரசும் இதற்க்கு அனுமதிக்காது ....
28-07-2012, 04:23
 - Posted by Anonymous
தங்கள் கட்டுரைகள் தெளிவான விளக்கங்களை அளிக்கின்றன. சுயநல அரசியல் நடத்தும் நம்மவா; மத்தியில் ஒரு நடுநிலையான ஊடகவியலாளன் கருத்து அமனசாட்சியை உறுத்தும் என்ற நம்பிக்கை உண்டு.
28-07-2012, 05:47
 - Posted by தமிழன்
குருபரன் அவர்களே நீங்கள் எப்படிச்சொன்னாலும் இந்த மரமட்டை களுக்கு ஏறாது. இவர்கள் நேரத்துக்கு நேரம் மாறுபவர்கள்... சிங்களவரை தட்டிக்கெக்க திரானியற்றவர்கள். அவர்க்ள போடும் அற்பசொற்ப சலுகைகளுக்காக கநைநீட்டி தவம் கிடப்பவர்கள்தான் இவர்கள்.முஸ்லிம் பிற்போக்கு வாதிகள் என்றைக்குமே தமிழ் முஸ்லிம் உறவை விரும்பமாட்டார்கள் சின்ஹல அரசும் இதற்க்கு அனுமதிக்காது ....இவர்கள் எப்போதும் ஆளும்கட்சி பக்கம்தான் இருப்பார்கள். உலகத்திலே கொடுரமான வர்கள் .. ... பிரிவினையை ஏற்படுத்துபவர்கள். புலிகளை தமிழ்மக்கள் ஆகிய நாங்கள் மறந்தாலும் இவர்கள் மறக்கமாட்டார்கள்.
28-07-2012, 10:45
 - Posted by கல்கி
நல்ல ஆக்கம்.

எனக்கென்னவோ இது நம்மட சொலமன்க்காக வரையப்பட்ட ஆக்கமாக படுகின்றது.....
28-07-2012, 11:19
 - Posted by ரஜீ
இந்த கட்டுரை எந்த விடயத்தை உணர்த்த முனைகின்றது என்பதனை புரிந்து கொள்ளாமல் சில முஸ்லிம் சகோதரர்கள் உங்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளதை காண முடிகின்றது.

பின்வரும் கருத்துக்களை அவர்கள் பார்க்குமிடத்து கட்டுரையின் நடுநிலைத் தன்மை புலப்படும்.


///...பாதிக்கப்படும் மக்கள் அவ்வாறு போராட்டங்களில் ஈடுபடும் போது இத்தகைய போராட்டங்களை இன அடிப்படையில் பிரித்து நோக்குவது தவறானதாகும்.////


///...ஆனால் இலங்கையில் யாருக்கு தும்மல் வந்தாலும் அதற்கு புலிகள் தான் காரணம் எனக்கூறும் அரசியலை புலிகள் இல்லாது போய் மூன்று வருடங்களின் பின் எடுத்து வந்து முஸ்ஸிம் அரசியல்வாதிகளும் கடை விரிப்பதுதான் கவலை தருவது. அதிலும் முஸ்லீம் தமிழ் மக்கள் ஒற்றுமை மிகவும் தேவைப்படுகிற ஒரு கணத்தில் இல்லாத புலிப்பூச்சாண்டி காட்டும் அரசியலை செய்வதன் நோக்கம் தான் என்ன?.////

///...என் சகோதர முஸ்லீம் சமூகத்திற்கு வழங்கத் துணியுங்கள் நான் உங்களுக்கு சல்யூட் அடிக்கிறேன் . ////

///..(நான் அரசுடன் இணைந்து நின்று மக்களைத்தின்னும் முஸ்லீம் அரசியல்வாதிகளைக் கேட்கிறேன்)..///

மிக அண்மையில், குருணாகல் வெல்லவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தம்பகம ௭ன்ற இடத்தில் அமைந்துள்ள அல்– அக்ரம் ஜும்ஆ பள்ளிவாசல் புத்த பிக்குமாரின் ௭திர்ப்பினால் மூடப்பட்ட விடயமும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
28-07-2012, 12:10
 - Posted by Nimmi
சில ... வகையறாக்கள் "பிச்சைகாரன் புண்ணை ஆற விடாது கிளறிக் கொண்டு பிழைப்பு நடத்துவதை போல" இந்த மாதிரி பிரச்சினைகளை ஆற விடாது பிழைப்பு நடத்துவதில் வின்னர்கள். ஊர் ரெண்டு பட்டால் இவர்களுக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம். எங்கே தமிழர்களும் சிங்களவர்களும் சேர்ந்து வாழ ஆரம்பித்தால் தமக்கு பிழைப்பு நடாத்த முடியாமல் போய் விடுமோ என்று தான் அன்றில் இருந்து இன்று வரை இரண்டு சமூகங்களுக்கு இடையில் அத்தனை வேலைகளையும் செய்து வருகின்றார்கள். இன்று திருப்பியும் "புலி" பெயரில் நாடகம் ஆட ஆரம்பித்து விட்டனர்.இவர்கள் மீது சிங்களவர்கள் என்றுமே மதிப்பு வைத்ததில்லை. அவர்களுக்கு இவர்கள் மீது வெறுப்பு மட்டுமே உள்ளது. தன் நிலைமை புரிந்து தான் இவர்கள் அவர்களின் வாலை பிடித்துக் கொண்டு வாழ முற்படுகிறார்கள். பார்க்கப் போனால் இவர்கள் தான் ஒட்டு மொத்த பிரச்சனைகளுக்கு காரணம் என எண்ணத் தோன்றுகிறது.
28-07-2012, 12:31
 - Posted by Nadarajah Kuruparan
அன்பான பொறுப்பு வாய்ந்த வாசகர்களே
அண்மையின் நான் எழுதிய இரண்டு கட்டுரைகளும் தமிழ்பேசும் இரண்டு சமூகங்களுக்கிடையேயான புரிதல்களை ஆரோக்கியமான விவாதங்களை உரையாடலை தெற்கான வெளிகளை உருவாக்குவதனை அடிப்படையாக கொண்டவை. தயவு செய்து ஆரோக்கியமற்ற, விமர்சனங்களையோ, நாகரீகமற்ற வார்த்தைப் பிரயோகங்களையோ, சொல்லாடல்களையோ தயவு செய்து தவிருங்கள். உங்கள் விவாதங்கள் ஆராக்கியமானதாக, சிறந்த கருத்துக்களை வெளிக்கொண்டு வருவனவாக அமையட்டும். பல விமர்சனங்களை வெட்டிக் கொட்டியே பிரசுரிக்கிறேன்.
நன்றி
குருபரன்.
28-07-2012, 13:57
 - Posted by Siva.
ரிசாத் பதியுதீன் இஸ்லாமிய மக்கள் மீது அக்கறை கொண்டு, இது போன்ற அடாவடிகளைச் செய்யவில்லை என்பதை, முதலில் கொடி பிடித்து ஊர்வலம் நடத்தும் அடி மட்ட இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்! நக்குகிற நாய்க்குச் செக்கும் சிவலிங்கமும் ஒன்றுதான் , என்பது பழமொழி! இவரது நடவடிக்கைகளின் பிரதான நோக்கமே, மகிந்த சகோதரர்களைக் குளிர்விப்பதுதான்! அவர்களுக்கு எதுவெல்லாம் பிடிக்குமோ, அவற்றை எல்லாம் கேட்பதற்கு முன் செய்வதையே தலையாய கடமையாகக் கொண்டுள்ளார்! இப்படிச் செய்வதன் மூலம், தன்னையும் ஒரு அதிகார மையமாகக் காட்டுவதில், இவருக்குப் பரம திருப்தி! இல்லாது போனால், புனித ஆண்டகையும், நீதிபதியும் பொய்யர்கள் என்று சொல்லும் துணிவு இவருக்கு எங்கிருந்து வந்தது? மீள் குடியேற்ற நடவடிக்கைகள் இன பேதமின்றி மேற் கொள்ளப்படுமானால், எவ்வளவோ விரும்பத்தகாத சம்பவங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்! ஆனால் சுருட்டுவதில் கொஞ்சம் தளர்வு ஏற்பட்டிருக்குமோ என்னவோ? <<<அரசுடன் இணைந்து நின்று மக்களைத் தின்னும் முஸ்லீம் அரசியல்வாதிகள்>>> இக் கட்டுரையில் காணப்படும் ஒருகருத்தாளம் மிக்க சொல்லாடல்! ஆளும் அதிகார மையங்கள் இது போன்ற புல்லுருவிகளைக் காலத்துக்குக் காலம், தமது ஆட்சியைச் சுலபமாக்கும் பொருட்டு எல்லா இனக் குழுமங்கள் மத்தியிலிருந்தும் பிரசவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்! இது, மானிடப் பிறப்புக்கே உரிய ஒரு சாபக்கேடாகும்!
04-08-2012, 08:26
 - Posted by Anonymous User
திரு குருபரன் அவர்களுக்கு ,

நீங்கள் ஒரு நடுநிலைவாதி , முஸ்லிம்கள் மீதும் , கிழக்கு மக்கள் மீதும் பேரன்பு உடையவர் என்பதுவும் நான் பலர் மூலமாக மட்டுமல்ல உங்கள் கட்டுரைகள் மூலமாகவும் அறிவேன்.
அண்மைய காலமாக முஸ்லிம் அரசியல் வாதிகள் மீது நீங்கள் காடும் "காட்டத்தனமான' அறைகூவல்கள் (ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும் என்ற நல்ல உள்நோக்கத்துடன்தான் என்பதையும் உணர்கின்றேன்)
கொஞ்சம் பக்க சார்பாகவே இருக்கின்றன. இப்போது நான் இலங்கையில் இருப்பதால் என்னுடைய ஊர் , நண்பர்களிடம் அறிந்தவைகளின் அடிப்படையில் பின் வருவன வற்றை கூறுகிறேன். (என்னுடைய நெருக்கிய உறவினர் பல முஸ்லிம் காங்கிரசில் கிழக்கு தேறுதலில் நிற்பவர்கள்)

முன்னைய "சலுகை " அடிப்படையில் முஸ்லிம் காங்கிரசு அரசியல் செய்வதை பற்றி எழுதி இருந்தீர்கள். இங்கும் //<<<அரசுடன் இணைந்து நின்று மக்களைத் தின்னும் முஸ்லீம் அரசியல்வாதிகள்>>> // என் ஊர் காரர்களிடம் இது குறித்து கேட்டேன். அவர்கள் கேட்ட ஒரே கேள்வி ' முஸ்லிம் காங்கிரசு ஹக்கீமின் கைக்கு வந்த பின் எத்தனை தேறுதல்கள் நடந்தன? , எத்தனை தடைவைகள் ராஜ பக்சையை எதிர்த்து ஹகீம் போட்டியிட்டார் என்று அவரிடம் கேளுங்கள் !. " என்றார்கள். அத்துடன் "தமிழ் கட்சிகளோடு கைச்செர்த்து புலிகளின் தலைவருடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டதுவும் , தமிழ் தலைவர்களுடன் சேர்ந்து சரத் போன்செகாவுக்காக தேறுதலில் பேசிதிரிந்ததையும் குருபரன் மறந்துவுடாரா ? ஹக்கீமின் அரசியல் வருடங்களில் அவர் அதிகம் செலவு செய்தது தமிழ் அரசியல் வாதிகளுடனும் எதிர் கட்சிகளுடனுமே. திருமதி பேரியல் அஷ்ரப் பிரிந்து மஹிந்த அரசுடன் சேர்ந்தாலும் ஹகீம் தனித்து எதிர் கட்சியில் தமிழ் அரசியல் வாதிகளின் பக்கத்தில் தான் நின்றார். குருபரன் எப்படி இப்படி ஹகீமை கேவேலமாக "நக்கு அரசியல்" செய்பவர் போன்று பேசலாம் ?. அரசுடன் சேர வண்டும் என்று முஸ்லிம் மக்கள் கதறிய போதும் எதிர் கட்சியில் இருந்தவர் தான் ஹகீம். ஹகீம் அரசுடன் சேர்ந்தது கடந்த சில வருடங்கள் மட்டுமே. " என்று விசனமாக கூறினார்கள்.

அடுத்து தமிழ் அரசியல் வாதிகளோ , மத தலைமைகளோ முஸ்லிம்களை எதிர்த்து நடவடிக்கை அல்லது குரல் கொடுக்கும் பொது மீண்டும் புலிகள் வந்து விடுவார்களோ என்ற எண்ணம் பயமாக வருவது தவிரக்முடயாததட்க்கு காரணங்கள் நிறையவே உண்டு. அரசாங்கம் புலிகள் முடிந்துவிடார்கள் என்று கூறினாலும். "தலைவர் மீண்டும் வருவார்", "பொடியன்கள் பதுங்கி இருக்கிறார்கள்" , அரசாங்கம் "நாலாம் கட்ட யுத்தம் மீண்டும் வரும் ", "முள்ளி வாக்கால் ஒரு முடிவல்ல அது ஒரு ஆரம்பம்" என்பது முதல் வெளி நாட்டு தமிழ் வானொலிகள் , தமிழ் பத்திரிகைகளில் வரும் புலிகளின் கொடியுடன் கூடிய ஆர்பாடங்களும் நடவடிக்கைகளும் "அவர்கள்" இன்னமும் இருக்கிறார்கள் என்ற பயத்தை உருவாகுகின்றன. வடக்கு முஸ்லிகளின் வெளிய்ட்ட்ரம் , பல பள்ளிவாசல் கொலைகள் என்று மிக பெரிய அழிவுகளை ஏற்படுத்திய புலிகளின் பயம் எளிதில் அகன்று போகாது. சிங்கள மதவாதிகள் மூலம் நடக்கும் ஒரு சில அசம்பாவிதங்கள் குறித்து அரசுடன் செய்தது உரிய முறையில் பேசி அந்த உரிமை மீறல்கள் கையாலபடுகின்றன.
முஸ்லிம்களிடத்தில். குறிப்பாக மன்னார் ஆயர் வெளிநாட்டு தமிழ் வானொலிகளில் கொடுக்கும் பேட்டிகளும் அவர் வெளிநாட்டு தமிழகளின் மூலம் கிடைக்கும் பொருளாதார உதவிகளை இழக்க கூடாது என்பதால் தான் இப்படி எல்லாம் பேசுகிறார் என்ற எண்ணமும் இலங்கையில் முச்ளிகளிடம் இருக்கின்றது என்பதனை இங்கு நான் இலங்கையில் இருக்கும் பொது உணர்ந்தேன்.

ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள் மீதும் அரசியல் வாதிகள் மீதும் கொட்டி தீர்ப்பது முறையாகாது.

உங்கள் செய்தி தளம் தவிர வேறு எந்த தளத்தில் முஸ்லிம்களின் குரலுக்கு இடம் தருகிறார்கள் ?. இப்படி இருக்கும் பொது தமிழ் அரசியல் வாதிகளுடன் திடீர் என்று கைகோர்த்து "உரிமைகள்" பற்றி போராடுவது இன்றைய காலகட்டத்தில் நடப்பது சாத்தியமாகாது.

ஒரு ஐரோப்பிய தமிழ் வானொலியில் "தமிழர்களே தங்கள் இடங்களுக்கு திரும்ப முடியாமல் அவதிப்படும் பொது , முஸ்லிம்கள் என் அவசரப்படுகிறார்கள்" என்று அந்த நிகழ்ச்சி நடாத்திய அறிவிப்பலரே எரியும் தீயில் என்னை உற்றி 'துவேச யாகம்" வளர்ப்பது இனைய வலயம் மூலமாக இவற்ற்றை கேட்கும் முஸ்லிம்களின் எந்த நல் என்னத்தை உருவாக்கும் என்று எண்ணுகிறீர்கள் ?

குருபரன் போல் பலர் இருந்தால் நீங்கள் எதிபார்ப்பது நடக்கலாம் ஆனால் எத்தனைபேர் குருபரனாக மாற தங்களை அனுமதிப்பார்கள் .?

அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.