தமிழ்த் தேசியம் பற்றி பேசி தமிழ் மக்களின் உணர்வுகளை தூண்டிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மக்களுக்காக எதனை சாதித்துள்ளது. என்ன உரிமைகளை பெற்றுக்கொடுத்துள்ளது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் நேற்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இனவாதத்தை பேசி மேடை நாடகம் போடுவோரிடம் ஏமாந்து வாக்குகளை வீணாக்காமல் தமிழ் மக்கள் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும் எனவும் மக்களின் நலன், பிள்ளைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு அரசுடன் இணைந்து போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்குகளை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் உள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரபா கணேசன் இதணை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த தேர்தலில் பங்கு கொள்ளவில்லை. ஆனால் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றது.இதற்கான சந்தர்ப்பத்தையும், சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்தவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள்.
யுத்தம் முடிவுக்கு வந்து மூன்று வரு டங்கள் கடந்துள்ள நிலையில் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படாத போதிலும் முன்னரை விட தமிழ் மக்கள் தற்பொழுது நிம்மதியுடனும் சந்தோசத்துடனும் வாழ்கின்றனர். 2010ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது தமிழ் மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம்.
இனவாதத்தை பேசி வாக்குகளை பெற்றுக் கொண்டார்களே தவிர இந்த மக்களுக்காக எதனை சாதிக்கவோ எந்த அபிவிருத்தி பணிகளை ஏற்படுத்தியோ கொடுக்கவில்லை.இது அரசாங்கத்தை, ஆட்சியை ஏற் படுத்தும் ஒரு பொதுத் தேர்தல் அல்ல மாகாண அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் ஒரு தேர்தலாகும்.
மாகாண சபை என்றாலே அங்கு பிரதான இடத்தை பிடிக்கின்றமை கல் வித்துறையாகும். எனவே கல்வித்துறை யில் எமது பிள்ளைகளுக்கு சிறந்த ஒரு எதிர்காலத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு அரசுடன் இணைந்து போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்து அனுப்ப வேண்டும்.எனவே, தமிழ் மக்கள் விழிப்புடனும், பொறுப்புடனும் செயற்பட்டு தமது வாக்குகளை பிரயோசனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் பிரபா கணேசன் கூறியுள்ளார்.