திருகோணமலையையும் தமிழர்கள் இழக்கும் ஓர் ஆபத்தான நிலைமை உள்ளதாகவும் நீர் கொழும்பு ஒரு காலத்தில் தமிழ்ப் பிரதேசமாக இருந்தது. ஆனால் தற்போது எப்படி நிலை மாறியுள்ளது எனவும் காலம் செல்லச்செல்ல இவ்வாறான நிலைமையே திருகோண மலைக்கும் ஏற்படலாம் எனவும் இதற்கு நாம் அனுமதிக்க முடியாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோண மலை மாவட்ட முதன்மை வேட்பாளர் சிங்காரவேல் தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நடை பெற்ற மாகாணசபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரை யாற்றுகையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
அபிவிருத்தியே தேவை, உரிமை தேவை இல்லை என்ற சாரப்பட சிலர் தற்போது பேசத் தொடங்கியுள்ளனர். அபிவிருத்தியின் உண்மையான கருத்து மக்கள் அதனை சுதந்திரமாக அனுபவிக்க வேண்டும் என்பதே. எனவே அபிவிருத்தியைக் காட்டி உரிமையைப் பறித்துவிட இடம் கொடுக்கமுடியாது.
மாகாணசபை அதிகாரப் பரவலாக்கத்தின் ஓர் அலகு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மாகாணசபை முறைமை தமிழ் இளைஞர்களின் போராட்டத்தால் விளைந்த ஒன்று. எந்த அரசும் இதனை இலேசாகத் தந்து விடவில்லை. மாகாண சபைக்கு அதிகாரம் போதாது என்பது ஒரு விடயம். ஆனால் அங்கு அதிகாரம் ஏதும் இல்லை என்று கூறி விடமுடியாது.
சம்பூர் மக்கள் இன்னும் சொந்த இடத்துக்குப் போக முடியாதவர்களாக இப்போதும் உள்ளனர். அவர்களது நிவாரணத்தை நிறுத்தி அந்த மக்களின் பசியை இந்த அரசு அரசியலாக்கப் பார்க்கின்றது.
எமது போராட்டம் இப்போது வேறு ஒரு வடிவத்தை எடுத்துள்ளது. அது இராஐ தந்திரப் போராட்டமாக, அறிவுசார்ந்த போராட்டமாக, சர்வதேச மேசைகளில் அலசப்படும் விடயமாக இப்போது மாறியுள்ளது.
இறுதிக்கட்டப் போரின் போது தமிழ் மக்கள் பட்ட அவலங்களை அப்போது சர்வதேசம் கவனத்தில் கொள்ள வில்லை. ஐ.நா.சபையும்கூட கவனிக் கவில்லை. ஆனால், இன்று ஜெனிவாவில் எங்கள் பிரச்சினையை அமெரிக்கா பேசும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தண்டாயுபாணி கூறியுள்ளார்.