இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்த 37 சீன மீனவர்கள் அந்நாட்டு தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சீன அதிகாரிகளிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதை இலங்கை கடற்படையின் பேச்சாளர் கோசல வர்னகுலசூரிய பிபிசியின் சந்தேஷ்யவிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஞாயிறன்று இரவு மட்டக்களப்பு கடற்பிராந்தியத்தை அண்மித்த பகுதியில் இரண்டு இழுவைப் படகுகள் மூலம் சட்டவிரோதமான முறையில் மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 37 சீனமீனவர்கள் மற்றும் இரண்டு இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் திருகோணமலை துறைமுகப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டனர்.
இந்தப் படகுகளுக்கு இலங்கை மீன்பிடித்துறை அமைச்சால் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாலும் கூட இலங்கைக் கடற்பரப்பில் 200 கடல்மைல்களுக்கு அப்பால் இவாகள் மீன்பிடிப்பதற்கே அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எனினும் இவர்களோ வழங்கப்பட்ட அனுமதியையும் மீறி பத்து அல்லது பதினைந்து கடல் மைல் பிரதேசத்துக்குள்ளேயே மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டனர். முன்னதாக இவர்களை விடுவிக்குமாறு இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் கோரிக்கை விடுத்தது.
நன்றி BBC
சீன மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை – இலங்கை
07-08-2012 -01:36
கைது செய்யப்பட்ட சீன மீனவர்கள் விடுதலைசெய்யப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என இலங்கை அரசாங்கம்குறிப்பிட்டுள்ளது.
அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 37மீனவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், இவர்களை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதாகவும்கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சீன மீனவர்கள் திருகோணமலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கோசல வர்னகுலசூரிய தெரிவித்துள்ளார். குறித்த சீன மீனவர்கள் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 37 சீன மீனவர்களையும் இலங்கை அரசாங்கம் விடுதலை செய்துள்ளதாக சீன அரச ஊடகம் முன்னர் தகவல் வெளியிட்டிருந்தது.
சீன மீனவர்களை விடுதலை செய்யுமாறு அந்நாட்டுஅரசாங்கம், இலங்கையிடம் தூதரகம் ஊடாக கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட சீன மீனவர்கள் விடுதலை.
06-08-2012 -17:07
கைது செய்யப்பட்ட சீன மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக் கடற்படையினர், நேற்றைய தினம் இரவு சீன மீனவர்கள் கைது செய்திருந்தனர்.
இரண்டு மீன்பிடிப் படகுகளின் மூலம் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இந்த சீன மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறும், கூடிய விரைவில் சீன மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கைக்கான சீனத் தூதரகம் அரசாங்கத்திடம் கோரியிருந்தது.
இதன்படி குறித்த சீன மீனவர்களை இலங்கை அதிகாரிகள் இன்றைய தினம் விடுதலை செய்துள்ளனர்.