மனித உரிமை நிலைமை குறித்த அறிக்கையை இலங்கை அரசாங்கம், இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பி வைக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜெனீவாவில் அடுத்த மாதம் அகில கால மீளாய்வு அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை இந்த அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.
மனித உரிமையை மேம்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. உறுப்பு நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவையும் அகில கால மீளாய்வு அமர்வுகளின் போது கவனம் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மனித உரிமையை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்த இந்த அமர்வுகளின் போது உறுப்பு நாடுகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படும். 2008ம் ஆண்டு அகில கால மீளாய்வு அமர்வுகளின் போது இலங்கை நிலைமைகள் குறித்து சில நாடுகள் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இம்முறை அறிக்கை தயாரிக்கப்பட்;டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. எவ்வாறெனினும், அறி;க்கையின் உட்கிடக்கை தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, குற்றச்செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்தல் ஆகிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.