செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

சுய உடைவு - கிஸ்வர் நகீத் - தமிழில் : யமுனா ராஜேந்திரன்

 

சுய உடைவு - கிஸ்வர் நகீத் - தமிழில் : யமுனா ராஜேந்திரன்

 சுய உடைவு

 

கிஸ்வர் நகீத்

தமிழில் : யமுனா ராஜேந்திரன்

 

கடைசிச் சேவலின் கடைசிக் கூவல் கேட்கும்போது

கடைசி இரவின் இறுதியை

விடிகாலை நட்சத்திரங்கள் அறிவிக்கும்போது

கடைசி தினத்தின் சூரியன்

இரத்தம் உமிழும் காலைநேரச் செய்தியைக் கொணரும்போது

தலையணையினின்று நான் முகம் நிமிர்வேன்

எனது கடைசி மூச்சுப்பற்றி அப்போது நான்

கவனம் கொள்வேன்

 

கடைசி மனிதனையும் கடைசி அரசியல்வாதி

கொன்ற பின்னால்

கடைசிப் படுக்கையையும் துளாவி முடித்த பின்னால்

கடைசிக் குழந்தையும் இறந்தபின்னால்

தாய்நாட்டுக்காக கடைசிச் சொட்டு இரத்தமும்

சிந்தப்பட்ட பின்னால்

பிரார்த்தனையின் கடைசி வார்த்தையும் தீர்ந்தபின்

கடைசித் துப்பாக்கி ரவையும் மார்பைத் துளைத்தபின்

தலையணையினின்று நான் முகம் நிமிர்வேன்

எனது கடைசி மூச்சுப்பற்றி அப்போது நான்

கவனம் கொள்வேன்

 

கடைசிப் பிணத்தின் வெற்று மார்புகளிலிருந்து

கடைசிக் குழந்தை சப்பிக் கொண்டிருக்கும்போது

அதிகாரத்திலிருப்போனை சபிப்பதற்காக

அனாதைக் குழந்தை தன் அன்னையை அழைக்கும்போது

கடைசி நிலாவில் கடைசித் தடவையாக

மனிதன் கால் பதிக்கும்போது

எனது தலையணையினின்று நான் முகம் நிமிர்வேன்

எனது கடைசி மூச்சுப்பற்றி

அப்போது கவனம் கொள்வேன்

 

கடைசி முத்தம் வாழ்வை நினைவுறுத்தும்போது

அடுத்த தலைமுறையினர்

பயத்தை எதிர்கொள்ள அறிந்து கொள்ளும்போது

சந்தோஷமாக

வெற்றிடம் கூட போலித்தனத்தின்

சித்திரம்தான் என்று அறிந்து கொள்ளும்போது

எனது தலையணையினின்று நான்

அப்போது முகம் நிமிர்வேன்

எனது கடைசி மூச்சுப்பற்றி

அப்போதே நான் கவனம் கொள்வேன்.

 

அனுப்புக Home, Literature
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.