யாருக்காகப் போராடினார்கள்.. - கல்கி அருணா-
பொழுது விடிந்து நெடு நேரமாகியும் மலரினால் படுக்கையை விட்டு எழும்ப முடியாதபடி மனம்மிக சோர்வாக இருந்தது. சூரியக்கதிர்கள் பூமியைச் சூடாக்க ஆரம்பித்த வேளையது. அறையின் ஒரு மூலையில் சுருண்டு படுத்திருந்தவள் மெல்ல பார்வைத் திருப்பி தனதருகில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை பார்வையால் வருடினாள். தம்மை மறந்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவர்களை பார்க்கையில் கணவன் நினைவு எழுந்து கண்களில் நீர் படலமிட்டது.
மனம் விரும்பி வாழ்ந்தவனை இழந்து, வன்னியிலிருந்து தப்பிப் பிழைத்து பிள்ளைகளுடன் வந்தவளை ஊர் மட்டுமல்ல உறவுகளே ஒதுக்கித்தான் வைத்தன. பெற்றோரை மீறி தன் வாழ்வைத் தீர்மானித்தவள் என்ற காரணம் மட்டுமல்லாது, அவளுடன் கதைத்தாலே தமக்கு ஆபத்து என்ற காரணமும் கற்பித்து அவளை ஒதுக்கியே வைத்தனர். பெற்ற தாயால் மட்டும் அவளை அப்படியே விட முடியாமல் அவளைச் சேர்த்துக் கொண்டபோது உறவுகள் அவர்களை விட்டு ஒதுங்கி போனார்கள்.
வலிகளை வலிமையாக்கி மெல்ல வாழப் பழகிக் கொண்டிருந்த வேளையில் தான் வெளிநாடு ஒன்றிலிருந்து உதவி ஒன்று தேடி வந்தது. மலரின் கணவனை நன்கு அறிந்த ஒருவன், தான் அவனின் நண்பன் என தன் அறிமுகத்தை தொடங்கினான். தாங்கள் நன்றாக இருந்த காலங்களில் வலிந்து உறவை வளர்த்தவர்கள், நாதியற்றுப் போனதும் ஒதுக்கி வைப்பது இன்று ஈழத்தில் சாதாரணமாகிப் போன நேரத்தில், துயரின் சிறு ஒத்தடமாக அவனின் உதவிகளை ஏற்க மனம் சம்மதித்தது. சொந்தமாக சிறு தொழில் தொடங்க தான் உதவுகிறேன் என்றான். அதில் சிறு உற்சாகம் தொற்றிக் கொள்ள பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைக்கு சிறு இடைவெளி கிடைத்தது மலருக்கு
சசி உங்கடை ஆசைப்பட்ட படியே பிள்ளைகளை நல்லாப் படிப்பிச்சு முன்னுக்குக் கொண்டு வருவன்.." மானசீகமாக கணவனுடன் கதைத்துக் கொண்டிருந்தவளை யாரோ கதவு தட்டும் ஓசை இடைநிறுத்தியது. எழுந்து கதவைத் திறந்தவளின் எதிரே முன் வீட்டு கவிதா நின்றுகொண்டிருந்தாள்.
" என்ன கவிதா"
"அக்கா உங்களிற்கு போன் வந்திருக்கு.."
அது அந்த அண்ணனாகத் தான் இருக்கும். சுயதொழில் ஆரம்பிக்க உதவி செய்வதாகச் சொல்லியிருக்கிறார். அதைப் பற்றிக் கதைக்கத்தான் கூப்பிடுகிறார் போல.." என எண்ணியவள் கதவை பூட்டியபடி கவிதாவை பின் தொடர்ந்தாள்.
" ஹெலோ அண்ணை.." என ஆரம்பித்தவள் அவனின் சுக விசாரிப்பில் நெகிழ்ந்து போனவள்." நீங்கள் செய்யப்போற உதவிக்கு மிக்க நன்றியண்ணை.. என்ரை பிள்ளையளைப் பற்றிய கவலை இப்பத்தான் சிறிது ஓய்ஞ்சிருக்கு.."
அவளின் உரையாடலை இடைவெட்டியவன் கேட்டான், " உம்மால ஒருக்கா கொழும்புக்கு வர ஏலுமே.. நான் இப்ப அங்கை தான் நிற்கிறான்.. ஹோட்டலில .."
மலருக்கு எதுவோ புரிந்தது. அவளது மௌனத்தை சதகமாக்கியவன் தொடர்ந்தான்.." உமக்கு வயசிருக்கு , என்னட்டை பணமிருக்கு.. என்ன சொல்லுறீர்.. "
அவனது ஒவ்வொரு வார்த்தைகளும் தீக் கங்குகளாய் அவளைத் தகிக்க தொலைபேசியை அப்படியே வைத்துவிட்டு வீட்டுக்கு வந்தவள், சசியின் படத்தின் முன்னாள் துவண்டு போனவளாய் சரிந்தாள்.
" வாழ வழி கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை ... பழி வாராமல் பார்த்து நடந்து கொள்.."
இது கடைசி நாளில் சசி அவளிடம் சொல்லிச் சென்ற வார்த்தைகள் .
"உங்ககளுக்கு அப்பவே இது தான் என்னைப் போன்ற பெண்களுக்கு வரப் போகும் சோதனை என்று தெரிஞ்சிருக்கு.."
இரக்கப்படுவது போல நடிக்கிறதும், உதவி செய்கிறேன் என்று எதையாவது எதிர்பார்ப்பதும், போராட்டத்தில் வாழ்வைத் தொலைத்த குடும்பக்களிற்கு உதவுகிறேன் என பணத்தைச் சுருட்டுவதும், போராட்டம் மௌனித்துப் போன காலத்திலிருந்து ஆரம்பித்து விட்டது. இது தொடர் கதையாக தொடரத்தான் போகின்றதா?
கலாசாரப் பிறழ்வுகள் நிகழ என்ன காரணம்? பயந்தெளிந்து பாவ வழியில் பயணிக்க ஆரம்பித்து விட்ட மக்கள் என்று விழிக்கப் போகிறார்கள்.?
நாட்டுக்கு நாட்டுக்கு என்று பணம் சேர்த்த முதலைகள் எந்த ஆழ் கடலில் ஒழித்திருக்கிறார்கள்? அதிலிருந்து சிறு துளியை தெளித்தாலே வறுமை ஓடி விடுமே.
எண்ணங்கள் கோர்வையாக மலர் மனதை சூழ்ந்தது. " யாருக்காகப் போராடினார்கள்.. எதற்காகப் போராடினார்கள்..இப்படியான மனிதருக்கும் தானா தம்முயிரை மாய்த்தார்கள். ..
எண்ணங்களின் வீரியம் தாங்க முடியாதவளாக பெருங் குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். தாயின் அழுகையின் காரணம் தெரியாத பிள்ளைகள் இரண்டும் மலரை அணைத்தபடி அழ ஆரம்பிக்க ... வெளியே சூரியனின் கதிர்களினூடாக வெம்மை இன்னும் உக்கிரமாய் பூமியைத் தாக்கத் தொடங்கியிருந்தது...
-கல்கி அருணா-