செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்குப் பலம் சேர்க்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன கூறுகிறார் மகிந்த:-

 

வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்குப் பலம் சேர்க்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன கூறுகிறார் மகிந்த:-

 

பயங்கரவாதம் நிறுத்தப்பட்ட போதும் நமது செயல்பாடுகள் நிறுத்தப்பட முடியாதது. வட்டுக்கோட்டைத் தனிநாடு கோரிக்கைக்குப் பலம் சேர்க்கும் நடவடிக்கைகள் இப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்புக்கும் செயற்பாட்டுக்கும் நாம் செய்ய வேண்டியது பெருமளவு உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி தனி இராச்சியத்துக்குப் பலம் சேர்க்க முயல்வோர் விடயத்தில் படையினர் மட்டுமன்றி முழு நாட்டு மக்களும் தெளிவுடன் செயற்பட வேண்டியுள்ளதெனவும் வலியுறுத்தினார்.

அண்மையில் நடந்த ஈழக் கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் மாநாடு பற்றிக் குறிப்பிட்ட ஜனாதிபதி; அந்த மாநாட்டின் பின்னணி தனியான ஈழ இராச்சியக் கொள்கையே எனவும் சுட்டிக்காட்டினார். இது விடயத்தில் சகலரும் தெளிவுபெற்றிருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

'கெமுனு சேவா' படையணிக்கு வர்ணம் கையளிக்கும் வைபவம் நேற்று இரத்தினபுரி குருவிட்ட படை முகாமில் நடைபெற்றது. அமைச்சர்கள், ராஜதந்திரிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, முப்படைத் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, மனித உயிர்களைப் பாதுகாப்பதையே புத்த சாசனமும் மதமும் வலியுறுத்துகின்றன.

மனிதனின் நல்வாழ்வு, கருணை என்பன இதன் அடிப்படை. அதனால் தான் நாம் எதிர்கொண்ட எதிரிகளின் நல்லவைகளைக் கூட நமது போர் சம்பிரதாய ங்களாக நாம் கொண்டிருந்தோம்.

நாட்டை ஒன்றிணைப்பதற்காக நாம் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கைகளில் ஞாபகங்கள் பல ஆயிரமாண்டுகள் எமது மனங்களில் நிலைத்திருக்கும். எதிரி எம்மீது எத்தகைய குரோதங்களைக் கொண்டிருந்த போதும் எமது உயிர்களைப் பலிகொண்ட போதும் நாம் எதிரிகளையும் அந்த மக்களையும் குரோதமாக நோக்கவில்லை.

அத்தகைய கொள்கையொன்று எம்மிடம் இருந்தது. அன்று துட்டகைமுனு அரசர் எமக்குத் தந்த முன்னுதாரணம் அது. இயல்பாக படை வீரர்கள் யுத்தக் களத்தில் செயற்படுவது போலன்றி எமது படையினர் வித்தியாசமான முறையில் செயற்பட்டதை நாம் குறிப்பிட வேண்டும். ஒரு கையில் துப்பாக்கியையும் மறுகையில் மனித உரிமைக் கொள்கையையும் அவர்கள் ஏந்தி செயற்பட்டனர். மனதில் மனித உரிமையைச் சுமந்து அதனை உணவுப் பொட்டலமாக வடக்கு மக்களுக்கு வழங்கினர்.

ஜயஸ்ரீ மஹா போதி விகாரை, தலதாமாளிகை, மடுதேவாலயம், காத்தான்குடிப் பள்ளி வாசல்கள் இப்போது பாதுகாக்கப்பட்டு பக்தர்கள் சுதந்திரமாக வழிபட சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

21,000 க்கு மேற்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்களும் தற்போது படையினரைப் போல பல்வேறு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இது படையினரின் மனிதாபிமானத்தின் வெளிப்பாடு.

அது மட்டுமன்றி வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் இப்போது பாரிய அபிவிருத்திக்கு உள்ளாக்கப்படுவதும் படையினரின் அளப்பரிய பங்களிப்பால் தான். இன்று வடக்கில் 80 வீத இயல்பு வாழ்க்கை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மக்களின் உயிர்களைப் போன்றே சூழலையும் பாதுகாத்துக் கட்டியெழுப்ப முடிந்துள்ளமைக்குக் காரணம் படையினர் நாட்டின் மீது கொண்ட எதிர்பார்ப்பு தான்.

யுத்தத்தின் போதும் அதற்குப் பின்ன ருமான உங்கள் சேவை மிகவும் கஷ்ட மானது. எனினும் உங்கள் அர்ப்பணிப் பினால் தான் நாட்டைப் பாதுகாக்க முடிந்துள்ளது. பயங்கரவாதம் நிறுத்தப்பட்டுவிட்டது என எமது செயற்பாடுகளை நாம் நிறுத்திவிட முடியாது. நாட்டின் பாதுகாப்புக்கும் நாட்டின் செயற்பாட்டிற்கும் இன்னும் பலதை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

நாற்பது வருடங்களுக்கு முன் வட்டுக்கோட்டையில் தனி நாடு யோசனை முன்வைக்கப்பட்டது. அதேபோன்று கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதற்குத் துணை போகின்ற மாநாடு நடத்தப்பட்டு யோசனைகள் அங்கு முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த யோசனைகளின் பின்னணியில் இருப்பது என்னவென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தனியான இராஜ்ஜியமே அதன் இலக்கு. நாட்டில் அனைவரும் இதனைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

எம்மத்தியில் உள்ள ஒற்றுமையையும் நம்பிக்கையையும் சீர்குலைக்கின்ற செயற்பாடுகள் இடம் பெறுகின்றன. ஈழம் கோருபவர்களின் தந்திரமான செயல்களே அவை. நாட்டின் மீதான எமது உணர்வை அவர்கள் இல்லாதொழிக்க முயற்சிக்கின்றனர். அதனால் பிறந்த தாய்நாட்டை விமர்சிக்க பலர் தம்மைப் பழக்கிக் கொண்டுள்ளனர்.

கடந்த காலங்களில் ஈழத்தை ஆதரிக்கும் இத்தகைய மாநாடுகளுக்குப் போன ஒரு கட்சித் தலைவரும் கூட இந்தியாவை விமர்சித்தார். இலங்கையில் ஈழம் அமைக்க நினைத்த அவர்கள் அத்தோடு அந்தப் பேச்சை நிறுத்திக் கொண்டனர். இது தான் உலகின் இன்றைய நிலை என்பதை நாம் உணர வேண்டும்.

வேறு நாடுகளில் ஈழம் உருவாக்கப் பட்டால் பரவாயில்லை. தமது நாட்டில் ஈழம் உருவாவதை எவரும் விரும்பவில்லை என்பதே இதன் மூலம் தெரியவருகிறது.

அதேபோன்று நாட்டின் மீது அன்பு செலுத்துபவர்கள் தமது நாட்டைப் பற்றி பிற நாடுகளில் விமர்சிப்பதற்கு எவருக்கும் இடமளிக்கக் கூடாது. ஈழம் கோருபவர்கள் எம்மிடம் எதிர்பார்ப்பதை நாமே செய்து கொடுக்கக் கூடாது. படையினரைப் போலவே முழு நாட்டு மக்களும் இதனை உணர்ந்து செயற்பட வேண்டும்.

எம்மிடம் உலகின் கவனத்தைத் திருப்பிய படையினர் உள்ளனர். பயிற்சிகளைப் போன்றே அறிவிலும் முதிர்ந்தவர்கள். எதிர்காலத்திலும் அவர்களுக்குத் தேவையான சகலதும் அரசினால் பெற்றுக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(2) அபிப்பிராயங்கள்
16-08-2012, 10:32
 - Posted by Siva.
முப் பெரும் தலைவர்களின் கருவில் உருவான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றப் பாடுபட்ட தந்தை செல்வாதான், ஒரு கட்டத்தில், சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து சாத்வீகமாகப் போராடி எதையும் பெற முடியாது!, என்பதைப் பகிரங்கமாக அறிவித்து, ஈழக் கனவை விதைத்தார்! அன்றும் இன்றும், அதில் இருக்கும் நியாயப்பாட்டை எவரும் மறுக்கவோ எதிர்க்கவோ இல்லை! அப்படியான ஒரு தீர்மானத்துக்கு வலு சேர்க்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்! இன்று தெற்கில் இருந்து ஒரு தலைவன் அத் தீர்மானத்துக்கு வலு சேர்க்கப் புறப்பட்டது போல், நாளை பலர் புறப்படுவார்கள்!, என்பது நிட்சயம். போராட்ட காலத்தில், அரசு தந்திரமாக பொருளாதாரத் தடை,போக்கு வரத்துத் தடை, மின் விநியோகத் தடை போன்ற மக்கள் வயிற்றில் அடிக்கும் இன்னோரன்ன, போராட்டமுடன் எவ்வித தொடர்புமற்ற, பல தடைகளைப் போட்டு வதைத்துவிட்டு, காலமறிந்து இப்போது அவற்றை வழங்குவதை, மக்கள் வரவேற்பது உண்மையே! ஆனால், அதைப் போய் அபிவிருத்தி என்று கூக்குரலிடும் மகிந்த, மக்கள் உணர்வுகளையும் சுதந்திர வேட்கையையும் அவ்வளவு எளிதில், நசுக்கிவிட முடியாது!, என்பதை நன்றாகவே உணர்ந்திருக்கிறார், என்பது புரிகிறது! ஒற்றை ஆட்சியில், சுய நிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு கௌரவமான, நீதியான தீர்வு கொடுக்கப் படாதவிடத்து, ஈழம் மலர்வதற்கான போராட்டம் தொடரவே செய்யும்! வெற்றுக் கோஷமெழுப்பிக் காலத்தைக் கடத்தலாம்! ஆனால், உணர்வுகளை மழுங்கடித்துவிட முடியாது!
16-08-2012, 11:49
 - Posted by Anonymous User
பயங்கரவாதியின் ஆட்சியில் எப்படி பயங்கரவாதம் நிறுத்தப்பட முடியும், மனித உயிர்களைப் பாதுகாப்பதையே புத்தசாசனமும் மதமும் வலியுறுத்துகின்றதாம், அப்படியாயின் முதல் மனைவியின் கொலையிலிருந்து முள்ளிவாய்க்கால் கொலைவரை எந்த சாசனம் வலியுறுத்தியது, கொலையாளி பெரிய குசும்பன் ஒருகையில் துப்பாக்கியும் மறுகையில் மனிதாபிமானத்துடனும் தனது கொலைகாரப்படை நடந்து கொன்டதாம், அப்படியாயின் முள்ளிவாய்க்கால் கொலையை செய்தவர் யார்?? எம்மிடம் உலகின் கவனத்தை திருப்பிய படையினர் உள்ளனராம், கையை கட்டி கண்ணை கட்டி சுட்டு கொலைசெய்தது, இறந்து போன பெண்கள் மீது வன்புணர்வு நடத்தியது, இறந்து கிடந்தவர்களின் உடல்களை நிவாணமாக்கி கைத்தொலை பேசி மூலம் படபிடித்து வைத்திருந்தன் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தது உண்மை தான், ஈழம் என்பது தமிழர்களின் தாயகம் அதை உன்னுடன் இரந்து கேட்டு பெற் வேன்டிய அவசியம் தமிழர்களுக்கு இல்லை, ராஜன்.
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.