யாழ். நல்லூர் முருகன் கோயில் திருவிழாவில் பாதுகாப்புக் கடமையிலிருந்த காவற்துறை சிப்பாய் ஒருவர் வாகனச் சாரதியை தாக்கிக் காயப்படுத்தியுள்ளார். இதனையடுத்து திருவிழாவிற்கு சென்ற மக்கள் காவற்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கந்தர்மடம் சந்தியில் 'வடி' ரக வாகனம் ஒன்றை மறித்த காவற்துறையினரில் ஒருவர், அவ் வாகனத்தை ஓட்டிச் சென்ற சாரதியை தாக்கியுள்ளார். அத்துடன் குறித்த சாரதி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியும் காவற்துறையினரால் அறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று மதியம் 2.00 மணியளவில் நல்லூர் கோவிலிலிருந்து கந்தர்மடம் சந்தி நோக்கிச் சென்று கொண்டிருந்த 'வடி' ரக வாகனம் ஒன்றை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவற்துறையினரில் ஒருவர் மறித்துள்ளார். வாகனத்தை சாரதி நிறுத்த முற்பட்டபோதும், அங்கு காணப்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக சாரதி ஒதுக்குப் புறமாக நிறுத்தியுள்ளார்.
தான் மறித்தவுடன் வாகனத்தை நிறுத்தவில்லை என்ற காரணத்தால் கோபமடைந்த காவற்துறை சிப்பாய் விரைந்து சென்று சாரதியை தாக்கியுள்ளார். இதனால் சாரதியின் தலையில் காயமடைந்து இரத்தம் வழிந்துள்ளது. அத்துடன் சாரதியின் சங்கிலியையும் அறுத்துள்ளார்.
அதன்பின்னர் குறித்த காவற்துறைச் சிப்பாய், வாகனத்தையும் சாரதியையும் அழைத்துக் கொண்டு பாரதியார் சிலைக்கு அருகிலுள்ள காவற்துறையினரிடம் வந்துள்ளார். அங்கு நின்ற பொதுமக்கள் காவற்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு நின்ற காவற்துறையினர் சம்பவத்துடன் தொடர்புடைய சிப்பாயை வேறிடத்திற்கு அனுப்பியுள்ளனர்.
அவரை கொண்டுவருமாறு அங்கு நின்ற மக்கள் காவற்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் காவற்துறையினர் அவரை அவ்விடத்திற்கு அழைத்து வரவில்லை. இதனால் மக்கள் மேலும் கொதிப்படைந்தனர். சுமார் ஒரு மணிநேரம் வரை மக்கள் குழுமி நின்று காவற்துறையினரிடம் தொடர்ந்தும் வாதிட்டுள்ளனர்.