தமிழர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அசராங்கம் பிரசாரம் செய்கிறது. தமிழர்கள் 2009 மே மாதத்திற்கு முன்பாகவே பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தவர்கள் என்றும் இப்பொழுது அவர்களுக்கு வசந்தமும் உதயமும் பூத்துவிட்டன என்று குறிப்பிடுகின்றது. இன்று ஈழத் தமிழ் மக்களின் துயர நிலைதான் இலங்கை அரசின் சாதனை என்பதற்கு சாட்சிகளாக வலிகாமம் மக்களும் உள்ளனர். நிலமிழந்து அகதிகளாக வாழும் மயிலிட்டி தையிட்டி போன்ற வலிகாமம் வடக்கு கிராமங்களைச் சேர்ந்த மக்களின் அகதி அடையாளப் பறிப்பு முயற்சிகள் உண்மையில் ஈழத்தில் என்ன திரும்பியிருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன.
ஈழத்து மக்கள் உலகில் மனசாட்சியுள்ளவர்களை கண்ணீர்விட வைக்கும் அகதிகளாகிவிட்டார்கள். உலகெங்கும் உலகக் கடல் எங்கும் அலைந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை சாபமாக கடந்து கொண்டிருக்கிறார்கள். நிலம் இழக்கும் மக்களுக்கு இயல்பாகவே அகதி என்கிற அடையாளம் ஏற்படுகிறது. உலகின் எந்தவொரு அகதியும் அகதி என்கிற அடையாளத்தை விரும்புவதில்லை. ஏனெனில் நிலமிழந்த நாடிழந்த வாழ்விழந்த நிலையை அகதிகளின் வாழ்க்கை ஏற்படுத்துகிறது. ஆனால் ஈழத்து மக்களிடம் இலங்கை அரசு அகதி என்கிற அடையாளத்தையும் பறிக்க நினைக்கிறது. நிலமிழந்த நிலையில் அகதிமுகாங்களையும் பறிக்க நினைக்கிறது.
இருபத்தைந்து ஆண்டுகள் நிலத்தை இழந்து வாழ்வதென்பது எவ்வவு கொடுமையானது? ஒரு நாள் வீடு திரும்ப முடியாமல் இருப்பதே பெரும் கொடுமையாக உணரப்படும் நிலையில் இருபத்தைந்து ஆண்டுகள் நிலத்தையே காணாத, நிலத்திற்குத் திரும்பாத வாழ்;க்கையை எங்கள் மக்கள் அனுபவிக்கிறார்கள். நாட்டை ஆள்பவர்களும் நிலத்தை அபகரிப்பவர்களும் இதைக் குறித்து இரங்குவதில்லை. இன்று நிலம் பறிக்கப்படும் பொழுது சொல்லப்படும் காரணங்கள் மிகவும் சதாரணமாக இருக்கின்றன. மிகவும் சுலபமாக சொல்லப்படுகின்றன. மக்களுக்கும் அவர்களின் மண்ணுக்குமிடையிலான வாழ்க்கை குறித்து சிந்திக்க மறுப்பதுபோல காட்டும் இத்தகைய நடவடிக்கையை நில அபகரிப்பு திட்டம் என்றே நாம் தெளிவாக அடையாளப்படுத்தி அதற்கெதிராக கடுமையாக போராட வேண்டியிருக்கிறது.

வலிகாமம் வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாகி இருபத்தைந்து ஆண்டுகளாகின்றன. இந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பாத நிலையில் போருக்குப் பிந்தைய நடவடிக்கையில் இந்த மக்களின் பிரச்சினையை மிகவும் சாதாரணமான தட்டிக் கழித்துச் செல்கிறது இலங்கை அரசு. அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி சிவஞானம் சிறிதரனுடன் மயிலிட்டி, தையிட்டி முதலிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த சில அகதிமுகாங்களுக்குச் சென்றிருந்தேன். நிலமிழந்ததினால் ஏற்பட்ட அகதி அடையாமும் வாழ நிர்பந்திக்கப்பட்ட அகதிமுகாங்களும் பறிக்கப்படும் அவல நிலையில் இந்த மக்கள் வாழ்ந்து கொண்டு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக கொதிப்போடு பேசுகிறார்கள்.
சுன்னாகத்திலுள்ள சபாபதிப்பிள்ளை முகாமில் சில நலிந்த தாய்மார்கள் குழாய் கிணறுகளில் தண்ணி இழுத்துக் கொண்டிருந்தார்கள். நிலமழிந்த தாய்மார்களின் முகங்களின் துயரக் கோடுகள் நிரந்ரமாக படிந்து விட்டன. ஊரிழந்து போனதால் எங்கள் தாய்மார்கள் மனநோயாளியாகிவிட்டார் என்று கிராமத்தை விட்டு வரும் பொழுது சிறுமியாக இருந்து இப்பொழுது தாயாக இருக்கும் பெண் ஒருவர் குறிப்பிட்டார். வெறுமைகள் நிரம்பிய தாய்மார்களை மிகவும் சின்னதான அந்த வீடுகளின் முன்பக்க தாழ்வாரங்களில் காண முடிந்தது. சபாபதிப்பிள்ளை முகாமில் மாத்திரம் 395 குடும்பங்களைச் சேர்ந்த 600 பேர் தங்கியுள்ளனர். இந்த முகாம்தான் இன்று பெரும் அவலத்திற்கு முகம் கொடுத்து வருகிறது.
இப்ப திரும்பி வந்திருவம் என்று நினைத்தோம். எதிர்பாராமல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிய அந்த நாள் 1990, ஆனி 15 என்று நினைவுகூர்ந்தார் குணபாலசிங்கம் ரஜனி. இடம்பெயரும் பொழுது தனக்கு பதினாறு வயதென்றும் மயிலிட்டி கலைமகள் வித்தியலாயத்தில் கல்வி கற்றதாகவும் ரஜனி குறிப்பிட்டார். இப்பொழுது ரஜனியின் பிள்ளைகள் தங்கள் பூர்வீக நிலமறியாதவர்கள். அகதிமுகாங்களில் பிறந்து அதற்குள்ளேயே தங்கள் உலகத்தை கண்கிறார்கள். ஒரு அகதியாக்கப்பட்ட ஒருவரின் பிள்ளை அகதியாக பிறப்பது மிகவும் துயரம். அந்த முகாமின் அகதிக் குழந்தைகள் காலத்தின் துயரக் குழந்தைகளாக விiயாடிக் கொண்டிருந்தார்கள்.

நெருக்கடிகளும் துயரங்களும் நிரம்பியது அகதிமுகாம் வாழ்க்கை. அந்த வாழ்க்கையை வாழ நிர்பந்திகப்பட்ட இந்த மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்றைய பிரச்சினை மிகவும் அவலமும் அடக்குமுறையும் கொண்டது. 'எங்கையாவது போங்கோ!' என்று இந்த அகதிகளை அரசு துரத்துகிறது. அகதிகள் மௌனமாக இருப்தே அரசாங்களுக்கு பிரச்சினையான விசயம். இலங்கை அரசாங்கம் ஈழத் தமிழினத்தை இல்லாமல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதைப்போலவே அகதிகளையும் இல்லாமல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட தனது அதிகாரிகளுக்கு கட்டளையிட்டிருக்கிறது. நிலத்தை பறிக்கும் பொழுதும் நிலத்தை அபகரிக்கும் பொழுதும் நிலத்தை இழக்கும் பொழுதும் அந்த நிலத்தின் மக்கள் அகதிகளாகிறார்கள்.
நிலத்தை மீண்டும் இந்த மக்களுக்கு வழங்காமல் மீண்டும் தங்கள் சொந்த ஊர்களில் மீள்குடியேற அனுமதிக்காமல் அகதி அடையாளங்களை பறிப்பதும் அகதிமுகாங்களை விட்டு வெளியேறுங்கள்! என்று சொல்லுவதும் என்ன நியாயம்? உண்மையில் இது எவ்வளவு இரக்கமற்ற செயல்? உலகில் எங்கேனும் அகதிகளுக்கு இப்படியொரு அநீதி இழைக்கப்படுகிறதா? தெருவுக்குத் தெரு வடக்கின் வசந்தம் என்றும் ஒரே தேசம் ஒரே குரல் என்றும் விம்பரப்பலகைகள் நடப்பட்டிருக்கின்றன. அதன் மெய்யமான அர்த்தம் இதுதானா? அந்த ஒரே குரல் அகதிமுகாங்களை மூடும்படி உத்தரவிடுகிறதா?
எங்கட மண்ணைச் சாப்பிட்டே நாங்கள் உயிர் வாழ்வோம். எகட வீடு, எங்கட கிணறு எல்லாத்தையும் இழந்து இந்த அகதிமுகாமில வாழ்வது ஒரு வாழக்கையா? என்று கேட்கிறார் ரத்தினசிங்கம் ரஞ்சிதமணி. எங்கட ஊர்க்கதைகளை கதைக்கும் பொழுது எங்கட கண்ணால கண்ணீர் ஓடும் என்று அவர் சொல்லி முடித்த பொழுது கண்கள் நனைந்து போனது. காங்சேன்துறையிலிருந்து பலாலிவரை வாழ்ந்த சனங்களின் கதைகள் இப்படித்தானிருக்கின்றன. உயர்பாதுகாப்பு வலயம் என்று நிலம் அபகரிக்கப்பட்ட மக்களின் நிலைகள் இப்படித்தானிருக்கின்றன. இன்று இலங்கை அரச படைகளின் இராணுவச் செயற்பாட்டிடங்களாகவும் வாழிடங்களாகவும் மாறியுள்ள இந்த மக்களின் பூர்வீக நிலங்களில் இந்த மக்கள் வாழ்வதற்கு ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இருபத்திரண்டு வருசம், இருபத்தைந்து வருசம் என்று பெருமூச்சு பொங்க நெடுங்காலத்தை கைகளை விரித்து எண்ணி ஏங்கியபடி இந்த மக்கள் பேசுகிறார்கள்.

முகாமைவிட்டு வெளியே போ! என்று உதவி அரசாங்க அதிபர் உத்தரவிட்டதாக கிராம அலுவலர் கடுமையாக தம்மிடம் தெரிவித்ததாக இந்த மக்கள் குறிப்பிடுகின்றனர். அகதி முகாங்களை இல்லாமல் செய்வதன் மூலம் வலிகாமம் வடக்கு போன்ற பாதுகாப்பு வலய மக்களின் பிரச்சினைகளை இல்லாமல் காட்ட அரசாங்கம் முயற்சிக்கிறது. அதன் மூலம் அந்த மக்களின் நிலத்தை நிரந்தரமாக அபகரிக்க முயற்சிக்கிறது. அதற்காக இந்த மக்களை முகாங்களைவிட்டு வெளியே போங்கள் என்று குறிப்பிடுவது மிகவும் கேவலமான நடவடிக்கை என்பதற்கப்பால் எத்தகைய மனித உரிமை மீறல் என்பதே முக்கியமானது. இந்த மக்களை வெளியேற்ற நிபர்பந்திப்பற்காக இந்த அகதிமுகாமில் மேற்கொள்ளப்பட்ட குப்பை அள்ளுதல், நீர் வநியேஙாகம் முதலிய நடவடிக்கைககள் நிறுத்தப்பட்டுள்ன. இதற்குக் காரணமாக இது அகதி முகாமில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் கண்களுக்கு இது அகதிமுகாமில்லை. அரசாங்கத்தின் கண்களுக்கு இதுதான் தமிழர்களுக்கு பரிசளிக்கப்பட்ட வசந்தம். ஈழ மக்களின் பிரச்சினைகளும் நெருக்கடிகளும் போராட்டமும் இலங்கை அரசாங்கத்தின் கண்களுக்கு எப்படித் தெரிகின்றன என்பதற்கு இந்த மக்கள்மீதான பார்வையும் ஓர் உதாரணமாகும்.
குப்பைகளை அகற்றாமல் விடுவதனாலும் மலசல கூடங்களை அகற்றாமல் விடுவதனாலும் நீரையும் உணவையும் வழங்காமல் விடுவதனாலும் இந்த மக்கள் அகதிமுகாங்களை விட்டு வெயேறப்போவதில்லை. இந்த மக்கள் நோயாலும் பட்டடினியாலும் கொல்லப்படுவார்கள். இந்த மக்களை அழிக்கவா அரசு இப்படி திட்மிடுகிறது?
தங்களை ஆடு மாடுகளைப் போல நடத்துவதாக இந்த மக்கள் குறிப்பிடுகின்றனர். உங்களுக்கு மீள்குடியேற்றம் இல்லை எங்காவது போங்கள் என்று குறிப்பிடுகின்றனர் அரசாங்க அதிகாரிகள். அரசும் இராணுவமும் இந்த மக்களின் நிலத்தை அபகரிக்க முனையும் பொழுது அதற்கு மிகவும் ஒத்தாசையாக செயற்படும் இத்தகைய அதிகாரிகள் இந்த மக்களின் அவலத்தை தின்று தமது நலனைப் பெற முயல்கின்றனர். கூடாரங்களை பிடுங்கக் கொண்டு போங்கோ என்றும் சொந்தச் செலவில் மலம் அள்ளுங்கள் என்றும் இரக்கமற்ற அரச அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
ஒரு அகதிமுகாம் ஒன்றின் தோற்றம் இப்படியும் இருக்குமா? என்று கேட்கத் தோன்றுகிறது. மலங்கள் நிரம்ப மலக்கூடுகள் பாவிக்கப்படாமல் மூடப்பட்டுள்ன. ஒரு இரு மலசல அறைகளைத் தவிர எல்லாமே மூடப்பட்டிருக்கின்றன. மல சல அறைகளுக்கு மேலால் குப்பைகள் பல மாதங்களாக அள்ளப்படாமல் குவிந்து கிடக்கின்றன. இவைகளின் துர்நாற்றங்கள் அகதிமுகாங்கள் முழுவதற்குமாக வீசிக் கொண்டிருக்கிறது. இது தான் அபிவிருத்தியின் வாசனையா? வடக்கின் வசந்தத்தின் வாசனையா? சித்திரவதைக் கூடுகளைப் போல இருக்கின்றன மக்கள் வசிக்கும் உக்கிய தகரக் கூடாரங்கள். எந்தவொரு நோயும் சுலபமாக தாக்கும் சூழலில் இந்த மக்கள் வசிக்கின்றனர்.

பள்ளமும் புட்டியுமான நிலம். மழைகாலத்தில் வெள்ளம் தேங்கக் கூடிய அபாயத்தில் உள்ளது. கழிவு வாய்கால்களோ வீடுகளையும் முற்றங்களையும் ஊடறுத்துச் செல்கிறது. மிகவும் நெருக்கமாக மக்கள் வசிக்கிறார்கள். பல வீடுகளில் குப்பைகளை கொட்ட முடியாமல் அவற்றை கிண்ணங்களில் நிரப்பி வைத்திருந்தார்கள். இந்த நாட்டில் நாயிற்குள்ள மரியாதைகூட எங்களுக்கு இல்லை என்று மிகுந்த ஆதங்கத்துடன் மக்கள் குறிப்பிட்டனர். நாயை அடித்தால் கேட்க சட்டம் உள்ள நாட்டில் எங்களை இப்படி வதைப்பதைக் கேட்க ஏதுவுமில்லை என்று அவர்கள் சொல்லுகின்றனர். எங்கட ஊருக்கு விட்டால் நாங்கள் பேசாமல் போயிருவம் அதுக்குத்தானே இப்படி கிடக்கிறம் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
எங்கட வாழ்க்கையைத்தான் அகதி வாழ்க்கையாக கழிச்சிட்டம் எங்கட பிள்iளையளின்ட வாழ்க்கையாவது நல்ல இருக்க வேணும் என்று குறப்பிடுகிறார் மல்லாகத்திலுள்ள வியாகர் முகாமில் வசிக்கும் தாயெருவர். பிள்ளையளுக்கு அகதி என்ற அடையாளமும் அகதிமுகாம் பிள்ளையள் என்ற அடையாளமும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பட்டார். பாடசாலைகளில் முகாம் பிள்ளைகளை புறக்கணிப்பதாகவும் அந்தத் தாய் குற்றம் சாட்டினார். ஒரு சின்ன மழையில் சேரும் கதியுமாக மாறிவிடும் எங்கள் முகாம் என்று குறிபிடுகிறார்கள் விநாயகர் அகதிமுகாம் வாசிகள்.
முகாமில் அமைக்கப்பட்ட தேவாலயத்தில் மக்கள் படுத்துக் கிடந்தார்கள். எங்க புலியள் நிக்கினம் என்று தெரியாமல் எங்களை அடிச்சுக் கொன்றுவிட்டு இன்று சோறு தாருகிறார்கள் அதை நாங்கள் மறப்பமே? என்று அந்த முகாமின் முதியவர் ஒருவர் கேட்டார். எங்கட பிரச்சினையை நாங்களே சொல்ல முடியாத வாழ்க்கை என்று அவர் மனம் நொந்து பேசினார். மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று உழைப்பதைப்போல இப்பொழுது சிங்களவர்கள் வலிகாமம் வடககிற்கிற்கு படையெடுப்பதாக சொல்லிய அந்த முதியவர் பாதுகாப்பாகவும் வசதிவாய்பபோடும் சிங்களவர்கள் காங்சேன்துறையில் கல்லுடைத்து ஏற்றச் செல்லுகின்றனர் என்று சொல்லுகிறார்கள்.
ஆமியைக் காணமல் குண்டு விழும் பொழுதும் செல் அடிக்கும் பொழுதும் நாங்கள் நிம்மதியாய் எங்கட மண்ணில இருந்தோம். உடுத்த உடுப்போட கலைக்கப்பட்டு இப்ப ஒண்டுமில்லாமல் கிடக்கிறம் என்று மயிலிட்டியை சேர்ந்த நாகலிங்கம் குறிப்பிட்டார். எங்கட கோயிலில புத்தர், எங்கட வீட்டில ஆமி, எங்கட மண்ணில சிங்களவன்? நாங்கள் எங்க இருக்கிறம்? எப்பிடி இருக்கிறம்? இதிலையும் இருக்க வடமாட்டம் எண்டு சொல்லுறினம். அகதியாயும் இருக்க விடமாட்டம் எண்டு துரத்தினம் என்று நாகலிங்கம் ஆதங்கத்துடன் பேசினார். ஊரை இழந்ததினால் மனம் நொந்து செத்தவர்களும் ஊரில் சென்று சாகவேணும் என்று காத்திருக்கிறார்கள் பல முதிவயவர்கள்.
ஊரை பிரிந்த ஏக்கமே எனது அம்மாவையும் அப்பாவையும் பெரும் தாக்கத்திற்கு உள்ளாக்கியது என்று குறிப்பிடுகிறார் யாழ்ப்பாணப் பல்கைலக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன். தெல்லிப்பழை கட்டுவனை சேர்ந்த முன்னாள் துணைவேந்தர் தனது தந்தை ஊருக்குத் திரும்ப வேண்டும் என்றும் அங்குதான் உயிர்விட வேண்டும் என்றும் மரணத்தின் இறுதிநிமிடம் வரை ஏங்கிக் கொண்டிருந்தாகக் குறிப்பிடுகின்றார். எங்களுடைய வாழ்க்கையும் எங்களுடைய கலை முதலிய ஒவ்வொரு அசைவுகளும் எங்கள் மண்ணில் நிகழ்த்தும் பொழுதுதான் உயிர்போடு இருக்கும். மீண்டும் எங்கள் ஊரில் எனது பிள்ளை காலடி வைக்க வேண்டும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் பேசுகிறார்.
ஊருக்குத் திரும்புவதைத் தவிர எங்கிடம் வேறு எந்த இலட்சயமும் கனவும் கிடையாது என்று இந்த மக்கள் தெரிவிக்கும் பொழுது இந்த மக்களின் அகதிஅடையாளத்தை பறித்து அகதிமுகாங்களை விட்டு மக்களை வெளியேற்றும் நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் வடிவமைத்திருக்கிறது. இந்த மக்களின் நிலங்களை பறித்து இராணுவவலயத்தை விரிவுபடுத்தி ஈழ மக்களின் வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படுத்தவே அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த மக்கள் ஈழத்தின் வளமான பகுதியைப் பூர்வீகமாக் கொண்டவர்கள். ஏற்றம் நிறைந்த அழகிய வாழ்வினை அனுபவித்தவர்கள். தமது சொந்த நிலத்திற்கு nவியில் யாழ்ப்பாணம் முதல் உலகின் பல்வேறு பாகங்கள் வரை அகதிகளாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
மக்களின் நிலத்தை இராணுவத்திற்கான நிலமாக்கப்படாமல், சிங்களவருக்கான நிலமாக்கப்படாமல், இருபத்தைந்து ஆண்டுகால அவலமாய் தீராப் போராட்டத்தில் வாழும் மயிலிட்டி, தையிட்டி போன்ற வலிகாமம் வடக்கு மக்கள் தங்கள் சொந்த நிலத்திற்குத் திரும்ப வேண்டும்.