அடுத்த மாதம் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையை அதிகாரத்தை கைப்பற்ற போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 13 ஆசனங்ளும், ஐக்கிய தேசியக்கட்சிக்கு 7 ஆசனங்களும் கிடைக்கும் எனவும் இரண்டு கட்சிகளும் இணைந்து கொள்வதன் மூலம் மாகாணத்தின் அதிகாரத்தை கைப்பற்ற முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
35 ஆசனங்களை கொண்ட கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற 17 ஆசனங்கள் கிடைக்க வேண்டும். சம்பந்தன் கணக்குபடி அவர்களின் கூட்டணிக்கு 20 ஆசனங்கள் கிடைக்கும் எனவும் சம்பந்தன் கூறியுள்ளார்.
திருகோணமலை தமிழ் நலன்புரி சங்கத்தின் கூட்டத்தில் உரையாற்றும் போதே சம்பந்தன இதனை கூறியுள்ளார். அதேவேளை அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த சம்பந்தன், அரசாங்கத்தின் தேவைகளை நிறைவேற்றும் முதலமைச்சர் ஒருவர் கிழக்கு மாகாணத்திற்கு தேவையில்லை எனவும் தமிழ் முதலமைச்சர் ஒருவரை கிழக்கு மாகாணத்திற்கு தெரிவுசெய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இவ்வாறு சிங்கள ஊடகங்கள் கூறினாலும் முஸ்லீம் காங்கிரசுடன் நல்லுறவு நீடிப்பதாகவும் அவர்களுடன் இணைந்து ஆட்சியைக் கைப்பற்ற முடியும் எனவும் சம்பந்தன் தெரிவித்து வருகின்றமை சுட்டிக் காட்டத்தக்கது.
இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களை கைப்பற்றும் எனவும் இதன் பின்னர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து மாகாண சபையின் அதிகாரத்தை கைப்பற்ற போவதாக கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தை ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து நடத்தியிருந்தமை குறிப்பிடதக்கது.