கொழும்பு வெள்ளவத்தை ராமகிருஷ்ண வீதியில் உள்ள வாடகை வீடொன்றில், தந்தை, தாய் மற்றும் தங்கையை மர்மமான முறையில் கொலை செய்து விட்டு, தப்பிச் சென்ற மகனை கைதுசெய்வதற்காக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேக நபரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தமை மற்றும் சொத்து தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சந்தேக நபர் இந்த கொலையை செய்திருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அத்துடன் சந்தேக நபர் பலரிடம் கடனாக பணத்தை பெற்று அதனை மீண்டும் செலுத்தாமல் இருந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சந்தேக நபர் விஷம் ஒன்றை உடலில் பரவச் செய்து, தந்தை, தாய் மற்றும் தங்கையை கொலை செய்துள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. சடலங்களில் வெளிகாயங்கள் எதுவும் காணப்படவில்லை.
சாரதியாக தொழில் புரிந்து வந்த 60 வயதான குமாரசுவாமி (தந்தை), 58 வயதான பூபதி (தாய்) , 23 வயதான குமாரசுவாமி அனதிபிரியா (தங்கை) ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் கொழும்பில் உள்ள முன்னணி மருந்து இறக்குமதி செய்து விநியோகித்து வரும் நிறுவனம் ஒன்றில் விநியோக முகாமையாளராக சில வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார். 29 வயதான சந்தேக நபர் கொட்டகலை பிரதேசத்தை சொந்த இடமாக கொண்டவர்.
அவர் கொழும்புக்கு தொழில் புரிய சென்ற பின்னர், ராமகிருஷ்ண வீதியில் இலக்கம் 6 என்ற விலாசத்தில் உள்ள வீடொன்றில் ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளார். அந்த வீட்டில் இரண்டு படுகை அறைகளும், ஒரு விராந்தாவும், சிறிய சமையலறையும் உள்ளன.
அவசர தேவை எனக் கூறி சந்தேக நபர் தனது பெற்றோர் மற்றும் தங்கையை கடந்த 12 ஆம் திகதி தனது காரில், கொட்டகலையில் இருந்து கொழும்புக்கு அழைத்து சென்றுள்ளார். இவர்கள் குறித்த வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். கடந்த 15 ஆம் திகதி இவர்களுக்கு ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்களிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. சம்பவம் இடம்பெற்று மறுதினம் 16 ஆம் திகதி காலையில், சந்தேக நபர் வீட்டின் கதவை பூட்டி விட்டு வெளியில் சென்றதை பிரதேசத்தில் உள்ளவர்கள் பார்த்துள்ளனர்.
கடந்த 18 ஆம் திகதி வீட்டில் இருந்து துர்நற்றம் வீசுவதை அவதானித்த வீட்டு உரிமையாளரான பெண், அது குறித்து வெள்ளவத்தை காவற்துறையினருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு சென்ற காவற்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் அறையொன்றின் கட்டிலில், மூன்று சடலம் காணப்பட்டுள்ளது. சடலங்கள் அதிகளவில் பழுதடைந்து காணப்பட்டுள்ளது. சடலங்கள் வெள்ளை துணியினால் மூடப்பட்டிருந்ததுடன் அவற்றின் மீது கற்பூர வில்லை போடப்பட்டிருந்ததுடன், அறை முழுவதும் வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டிருந்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனை தவிர ஒருவகையான மருந்தின் துண்டுகளும், அறையில் விழுந்து கிடந்த நிலையில் காவற்துறையினரால் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது.
சடலங்கள் அழுகிய பின்னர், துர்நாற்றம் வீசுவதை தவிர்ப்பதற்காக வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டிருக்கலாம் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் கடந்த 16 ஆம் திகதி வெள்ளவத்தையில் உள்ள கடையொன்றில், இந்த கற்பூரவில்லைகளையும், வாசனை திரவியங்களை வாங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னர்,
சந்தேக நபர் கொட்டகலையில் உள்ள தனது வீட்டுக்கு சென்று, அவருடைய துணிமணிகள் மற்றும் ஏனைய பொருட்களை எடுத்து கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவற்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.