செய்திகள்

இணைப்புக்கள்

உங்கள் அபிப்பிராயங்கள்

News Articles

ஈழத்தமிழர்களது இரத்தமும், கண்ணீரும் ஊடகங்களுக்கு சந்தை வாய்ப்பை கூட்டித்தரும் வணிகப் பொருட்களா?

 

ஊடக விபச்சாரத்தினை நிறுத்துங்கள் -

ஈழத்தமிழர்களது இரத்தமும், கண்ணீரும் ஊடகங்களுக்கு சந்தை வாய்ப்பை கூட்டித்தரும் வணிகப் பொருட்களா?

 அந்த அறையினுள் வெறும் நிசப்தமே எஞ்சியிருந்தது. அவள் அழுதுமுடியட்டுமெனக் காத்திருந்தோம். தற்கொலை முயற்சியொன்றிலிருந்து காப்பாற்றப்பட்ட அவள் மீண்டும் அவ்வாறான முயற்சியொன்றினில் ஈடுபடலாமென்ற அச்சம் வைத்திய நிபுணரிடமிருந்தது. முன்னாள் போராளியான அவளது எதிர்காலம் பற்றிப்பேச ஊடகவியலாளனான என்னையும் அவர்  அழைத்திருந்தார். முன்னாள் போராளியான அவள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுவிட்டாள். ஆனாலும் மீண்டும் மீண்டும் விசாரணைகளுக்கென அழைக்கப்பட்ட அவள் சாதாரண கடைநிலை சிப்பாய் முதல் அதிகாரிகள் ஈறாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தாள். அத்தகைய சித்திரவதை கூடமொன்றினில் தற்கொலை செய்யும் நோக்கினில், பிளேடுகளை அவள் நொருக்கி விழுங்கியிருந்தாள். தம்மீதான பழிகளிலிருந்து தப்பிக்க வைத்திய சாலையினில் அவள் அதே படையினராலேயே அனுமதிக்கப்பட்டிருந்தாள்.

 

மூடப்பட்ட அறையினுள் அவள் கூறிய அவலங்கள் எந்தவொரு பெண்ணும் உலகில்; எங்குமே சந்தித்திராதவை. யுத்தத்தின் வடுக்களைத் தாங்கி நிற்கும் நூற்றுக்கணக்கான பெண்களுள் அவளுமொருத்தி. மீண்டுமொருமுறை தற்கொலைக்கு முற்படலாமென்ற அச்சத்தில் அவளை ஆறுதல் படுத்த முற்பட்டோம். இத்தகைய துன்பங்களை பொருட்படுத்த வேண்டாம். வீதியால் பயணிக்கும் போது காலில் பட்டுவிடும் மாட்டுச் சாணமாக இதனைக் கருதி கால்களைக் கழுவிவிட்டு பயணிப்போமென்றேன் நான்;. அவள் சிரித்தவாறு சொன்னாள், 'இல்லை அண்ணா, இப்போதைக்கு நான் சாகமாட்டேன். அங்கிருந்து தப்பிக்கவே பிளேடை உடைத்து விழுங்கினேன். அதை விட வேறு வழியிருக்கவில்லை. எனக்கு செய்வதற்கு நிரம்பவுமே கடமைகள் இப்போதைக்கு எஞ்சியிருக்கின்றதென கூறுகையில் அவளது முகம் விகாரமடைந்திருந்தது.

 

அந்தப் பெண்மணிக்கு முப்பத்தைந்து முதல் நாற்பது வயதினுள் இருக்கும். வெறிச்சோடிய கண்கள் பல கதைகளைச் சொல்லின. போராளியான கணவன் உயிருடன் இருக்கின்றானா? இல்லையாவென்பது கூட தெரியாது. தற்போது அவள் ஆறு மாத கர்ப்பிணி. வருடம் முழுவதும் ஊரிலுள்ள பாடசாலை மூடப்பட்டிருக்காதா என கடவுளிடம் கேட்பேன். பாடசாலை திறக்கும் நேரம் எனது பிள்ளைகள் வீட்டை விட்டு அங்கு போய்விடுவார்கள். அதுதான் சாக்கென வீட்டின் முன்னாலுள்ள காவலரணிலுள்ள சிங்கள சிப்பாய்கள் உள்ளே வந்து விடுகின்றார்கள். பிறக்கப் போகும் குழந்தைக்கு எவன் அப்பனென எனக்குத் தெரியாது. அந்த இராணுவ உடையில் எல்லோரும் ஒரே மாதிரியாகவே இருப்பதாகக் கூறும் அத்தாயும் தற்கொலை முயற்சியிலிருந்து மீட்கப்பட்டவரே. தனது பிள்ளைகளை என்ன முகத்துடன் சந்திக்கப் போகின்றேனென அழும் அத்தாய் தற்போது காப்பகமொன்றிற்கு அனுப்பப்பட்டுவிட்டார். இப்போது தாயுமற்றுப்போயுள்ள அந்த பிள்ளைகள் விடுதியொன்றினில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

போரின் பின்னரான, தமிழ்பெண்களது அவலங்கள் பற்றிப் பேசவும், எழுதவும் எங்களிடம் ஆயிரக் கணக்கான கதைகள் இருக்கின்றன. இவர்களுக்கு முறைதவறிப் பிறக்கப்போகும் குழந்தைகளை முன்னிறுத்தி அவர்களை விபச்சாரிகளாக்க உங்களால் முடியும். ஏனெனில் எங்களை முடக்கி விட உங்களில் பலர் பணம் வாங்கிக் கொண்டு வரிசை கட்டி நிற்கின்றீர்கள். எழ எழ முதுகினில் குத்திக் கொண்டேயிருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்குப் பின்னாலுள்ள இயக்குபவர்கள் பற்றியும் நாம் புரிந்தேயுள்ளோம். எனினும் நாம் இப்போதும் மௌனமாகவே இருப்போம். ஏனெனில் நாம் இப்போது பலவீனமானவர்களாகி இருக்கின்றோம்.

 

வன்னியில் இறுதிக்கணம் வரை எழுதிக் கொண்டிருந்த, குரல் கொடுத்துக் கொண்டிருந்த ஊடகவியலாளன் அவன். இப்போது உயிருடன் இருக்கின்றானா? இல்லையாவென்பது கூட எவருக்கும் தெரியாது. அவனது குடும்பத்திற்கும் அதே கதைதான். மாதாந்தம் கிடைக்கும் பத்தாயிரம் ரூபா (இந்திய ரூபா வெறும் 3,500) வருமானத்தில் தோளுக்கு மேல் வளர்ந்துவிட் மூன்று பிள்ளைகள், கணவனது வயோதிபத் தாய், யுத்தத்தின் போது விமானக் குண்டு வீச்சில் உயிரிழந்த கணவரது தம்பியின் குடும்பம் அனைத்தையும் அவளே பார்த்துக் கொள்கிறாள். அவள் எவரிடமும் கையேந்தத் தயாராக இல்லை. புலம்பெயர் ஊடக நண்பர் ஒருவரது உதவியின் கீழ், பிள்ளைகளது படிப்பிற்கென உதவி வழங்க தேடிச் சென்ற போது கூட தீர்க்கமாக ஆராய்ந்தே உதவியை ஏற்றுக்கொண்டாள். அண்ணா யாரிடமும் கை நீட்டுவது அவருக்கு பிடிக்காதென்றாள் எட்டிப்பார்க்கும் கண்ணீர் துளிகளினூடே. அவளது அந்த வீம்பிற்கு நான் தலை வணங்கினேன்.

 

வன்னியில் செல்வச் செழிப்போடும், வசதிகளோடும் வாழ்ந்த அவர்களது தேவைகளை முழுமையாக தீர்த்து வைப்பதென்பது கடினமானதொன்றே. தசாப்பதங்களாக உழைத்து சேமித்து வைத்தவற்றை பிடிங்கியெறிந்து விட்டு, நடுத் தெருவில் விடப்பட்ட அவர்களை மீட்பது கடினமானதே. ஆனாலும் புலம்பெயர் தேசத்திலும், தாயகத்திலும், சிலவேளை தமிழகத்திலிருந்தும் கூட சாதாரணமான வர்களிடமிருந்தும், உணர்வாளர்களிட மிருந்தும் உதவி கிடைக்கின்றன. கிடைக்கின்ற உதவிகள் மேடை போட்டு சொல்லப்பட வேண்டியதில்லை. மேடை போட்டு சொல்லுபவர்கள் எங்குமே உதவ முன்வரவில்லை. முப்பது வருட ஆயுதப் போராட்டத்தின் போதும் விழ விழ மீண்டெழுந்ததே எம்வரலாறு. அதுவே ஈழத்தமிழர்களுக்கான குணவியல்பும் கூட. முகத்திற்கு நேரே பிரச்சினைகள்  வரும்போதும் பதகளிக்கும் அவர்கள், சிறிது காலத்தினுள்ளாகவே அதனை எதிர்கொள்ளத் தயாராகி விடுவது அவர்களது சிறப்பியல்பு. முள்ளிவாய்க்காலின் பின்னரும் வன்னியின் எழுச்சி ஒன்றும் இலங்கை அரசோ, சர்வதேசமோ கொண்டுவந்ததல்ல. சாதாரண புலம்பெயர் தமிழ் குடும்பங்களது உதவியும், தமது காலில் நிற்க முனைப்பு காட்டி நிற்கும் மக்களதும் கூட்டிணைவே அது.

 

முன்னாள் பெண் போராளிகள் மற்றும் தளபதிகளது மனைவியரது பாலியல் தொழில் என்னும் கட்டுக்கதை திட்டமிட்டு, ஒரு தரப்பினரால் ஏற்கனவே அரங்கேற்றப்பட்ட ஒன்றே. அவர்களது நிழலாக செயற்படும் செய்தி முகவர் மையமூடாக இக்கதைகள் முதலில் அவிழ்த்து விடப்பட்டன. அதை இலங்கை அரசும் அதனது எடுபிடிகளும் பரவலாக உலகமெங்கும் எடுத்துச் சென்றனர். திட்டமிட்ட வகையில் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும், புலம்பெயர் தேசத்து உறவுகளையும், ஆதரவு செயற்பாட்டாளர்களையும் இலக்கு வைத்து அவர்களது உளவரணை சிதைக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சியே அது.

 

இத்தகைய பாரம்பரியத்தில் இப்போது இந்திய இதழ் ஒன்றும் தனது பங்கிற்கு கதையொன்றை அரங்கேற்றியுள்ளது. தமிழ் இணையங்கள் சிலவற்றில் யாழ் புகையிரத கட்டடப் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக வெளிவந்த கதைகளை நம்பியும் ஈழ ஆதரவாளர்கள் மற்றும் கூட்டமைப்பினரையும் இலக்கு வைத்து திட்டமிட்ட வகையில் தானே கேள்வி பதிலெனும் கட்டுக் கதையை அரங்கேற்றியிருக்கின்றார் ஒரு நபர். ஒரு மூத்த பெண் போராளி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரபாகரனை பேர் சொல்லி அழைக்கமாட்டாரென்பது அனைவருக்கும் தெரியும். பலவேளைகளில் அண்ணையாகவோ, அப்பாவாகவோ தான் அவர் இருந்து வந்துள்ளார்.

எவ்வளவோ துன்பங்களைச் சந்தித்து, உடைந்தழுகின்ற போதும் மீண்டும் மீண்டும் எழுந்து நடக்கவே அவர்கள் பாடுபடுகின்றார்கள். அவர்களை உங்கள் எழுத்துக்களால் விபச்சாரிகள் ஆக்காதீர்களென கெஞ்சிக் கேட்கின்றோம். தடுப்பு முகாம்களிலும், முள்ளிவாய்க்காளிலும் நடந்து முடிந்தவற்றை மறந்து புது வாழ்வொன்றை வாழ அவர்கள் முற்பட்டுள்ளார்கள். அதேவேளை காணாமல் போன தமது கணவரை, பிள்ளைகளை தேடியலையும் அவலமும் அவர்கள் வசமிருக்கின்றது..

கட்டுரையாளனான எனது தனிப்பட்ட கருத்து இதுவென உங்களில் சிலர் சாயம் பூச முன்னுக்கு வருவீர்களென தெரிந்தேயுள்ளேன். அதானாலேயே யாழ்ப்பாணத்தின் முன்னணி கள செய்தியாளர்கள் சிலரது கட்டுரை தொடர்பான விமர்சனங்களையும் இணைத்தேயிருக்கின்றேன்.

 

ந.பரமேஸ்வரன் - சிரேஷ்ட ஊடகவியலாளர்

ஈழத்தவர்களது இரத்தத்தையும், கண்ணீரையும் வர்த்தகம் செய்வது இவர்களுக்கு வழக்கமாகப் போய்விட்டது. அவர்கள் பிழைப்பு அவர்களுக்கு. இவர்கள் திருந்துவார்களென நான் நம்பவில்லை.

 

இ.தயாபரன் - சிரேஷ்ட ஊடகவியலாளர்

தலைவர் - நிமலராஐன் ஞாபகார்த்த அமைப்பு

 

'நாங்;கள் தொப்புள் கொடி உறவென அடிக்கடி கூறிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் ஒட்டு மொத்தப் பெண் போராளிகளையும் கேவலப்படுத்தும் வகையில் எழுதிக் கிழிக்கிறார்கள். விகடன் இதுவரை அர்ப்பணிப்புடன் செய்த சிலது கூட இக்கட்டுரையால் நாறடிக்கப்பட்டுவிட்டது. பாவம் அவர்களை சமூகம் உங்கள் கட்டுரைகளைப்; பார்த்து தவறாக எடை போட்டுவிட போகிறது. எமது அமைப்பு கூட சத்தமின்றி சத்திர சிகிச்சை தொழில் முயற்சியென பல உதவிகளை வழங்கிக்கொண்டே இருக்கின்றது.

 

ஆ.சபேஸ்வரன் - ஊடகத்துறை விரிவுரையாளர் - உதவி ஆசிரியர், யாழ் தினக்குரல்

 

'எங்களுக்காகக் கதைப்பதாகக் கூறிக் கொண்டே நாறடிக்கும் முயற்சி. தமிழக செயற்பாட்டாளர்களை எல்லாம் வம்புக்கு இழுத்து, சோர்ந்து போகச் செய்யும் நன்கு திட்டமிடப்பட்ட சதி முயற்சி. பின்னால்; இருப்பவர்கள் யார் என்று புரிகின்றது.

 

ந.பொன்ராசா - ஊடகவியலாளர் செயலாளர், வட இலங்கை பத்திரிகையாளர் சங்கம்

 

நாம் பகிரங்கமாகச் சவால் விடுகின்றோம். அவ்வளவு பகிரங்கமாக அரசியல் கருத்துக்களை முன்வைக்கும், பெண் போராளி விபச்சாரத்துக்குப் போவதாகச் சொல்கிறீர்களே விபரத்தைத் தாருங்கள். உதவுகின்றோம். அவ்வாறில்லாமல் இது பொய்யாகப் புனையப்பட்டதென்றால், அனைத்து பெண் போராளிகளிடமும் விகடன் மன்னிப்பு கோர வேண்டும்.

எம்.நியூட்டன் - ஊடகவியலாளர், வீரகேசரி

'தடுப்பு முகாம்களிலும், பின்னரும் பெண் போராளிகள் மீதான துன்புறுத்தல்கள் எமக்கும் தெரியும். ஆனால் விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் வீம்புடன் வாழ முற்பட்டுள்ளதை நாம் ஊக்குவிக்கின்றோம்;. அவர்களைச் சமூகம் நிராகரித்துவிட்டதாக கூறுவது பச்சைப் பொய். அவர்களுக்கு உதவினால் பழிவாங்கப்படுவார்களென்ற அச்சம் உண்டு. அவ்வாறு உதவினால் காணாமல் போக கூட வேண்டியிருக்கும்.அதையும் மீறி அவர்களைத் தூக்கிவிட கை கொடுத்தவாறு தான் இருக்கின்றார்கள்.

 

ஈழத்தமிழர்களது இரத்தமும், கண்ணீரும் பெரும்பாலும் தமிழக ஊடகங்களுக்கு சந்தை வாய்ப்பை கூட்டித்தரும் வணிகப் பொருட்களே. இப்போது அவர்களுக்கு விபச்சாரம் விற்பனைப் பொருளாகிறது. எந்தவொரு முன்னாள் போராளியும் விபச்சாரியாக இந்த தேசமும், உறவுகளும் விடப்போவதில்லை. அவ்வாறு அவர்கள் விபச்சாரியானாலும் நீங்கள் செய்யும் ஊடக விபச்சாரத்தினை விட அது ஒன்றும் மோசமானதல்ல. 

 
அனுப்புக Home, Srilankan News, Articles
அபிப்பிராயங்கள்
(2) அபிப்பிராயங்கள்
02-11-2012, 15:19
 - Posted by Anonymous User
இக்கட்டுரையை நான் இரண்டு இணையத்தளங்களிற் படித்துவிட்டு உடனடியாக குளொபற் செய்திகளைத் திறந்தேன். உண்மையில் இதுபற்றி யாராவது குறிப்பு எழுதியிருக்கிறார்களா- என்று அறிய. இத்தகைய ஒரு குறிப்பை உடனடியாக வெளியிட்டமை மாவீரர் மாதங்களில்1மாவீரரைச் சொல்லி 2 மாவீரரை சொல்லாமல் நிகழும் 'களியாட்டங்களினாலும் கூத்துகளினாலும் மனம் நலிந்துபோயிருக்கும் மாவீரர் குடும்ப அங்கத்தவர்களுக்கு ஆறதல் தரும் குறிப்பாகும்!
நீயா நானா மாவீரர் தினம் நடத்துவது ..நடத்தும் மாவீரர் தின விளம்பரத்தில் செய்மதித் தொலைக்காட்சிகளின் 'மெகா; சீரியல்களிற்கு விளம்பர அனுசரணை வழங்கியோர் விபரம் போல பல அமைப்புகளின் சின்னங்கள் போட்டு விளம்பரம் (நோட்டீஸ்) அடிப்பது..
அந்த மாவீரர்களின் பெயரால் நாள் நடத்துவதை விடவும் அவர்களின் பெற்றோர் அனுமதி யின்றி- அவர்கள் பெயரில் விளம்பரங்கள் அச்சிடுவது
மாவீரர் நாளுக்குக் கொடியேற்றுவதற்கு இன்னாரைப் போட்டால்- எந்தப்பிரச்சினையையும் சமாளிக்கலாம்- (இதுதான் இவர்களுடைய பிரச்சினையாம்) என்று மாவீரர் சமாதான நல்லிணக்க்குழு (மாசநகு) ஆலோசனை சொல்வது..
தங்கள் பிள்ளைகள் சகோதரங்கள் இந்தக் கூத்துகளுக்காகவா தம்மைத் தியாகம் செய்தனர் என்று இந்தக் கூத்தகளைக்காணும் பெற்றோரும் சகோதரங்களும் துடிப்பது..-

இவையெல்லாம்--முன்பு ஒருகாலத்தில் யாழ்ப்பாணத்தில் "சில இடங்களில்" நடைபெறும் சாமத்தியச் சடங்குகளையும் புனிதநீராட்டு விழாக்களையுமே நினைவுறுத்துகினறன. அப்படியான விழாக்களில் நெல்லியடிப் பொலிசாரும் குருநகர் இராணுவத்தினரும் தலையிட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பது நாம் கண்ணாற் கண்ட விடயங்கள்!
அத்தகைய நிலைமைகளையே நாம் புலம்பெயர் நாடுகளில் காண்கிறோம்.ஆனமாவுடன் விடுதலைத் தியாகத்தைத் தரிசிப்பவர்கள் தங்கள் மனக்கிளரச்சிகளையும் துடிப்பகளையும் அடக்கிக்கொண்டே இந்தக் கூத்துக்களைச் சகிக்க வேண்டிய நிலையிலுள்ளனர்!
என் தம்பி அல்லது தங்கை துடிதுடித்து மாய்ந்தது- இந்தக் கோமாளிகளின் கும்மாளத்துக்காகவா என்று நினைக்கும்போது- இங்குள்ள படித்தவர்களும் பெரியவர்களும்- இந்த உள்நாட்டுப் போராளிகள் (அப்படி இவர்கள் சொல்லகிறார்கள்- ) அப்படி யொரு 'கட்டவுட்டை' மக்கள் மத்தியில் நிறுத்திவிட்டார்கள்.. சொல்வதை எல்லாம் 'தயா மாஸ்டரின் (அன்றைய) அறிக்கையாக நம்புகிறார்கள்!.இப்படியான மன வேதனைகளின் மத்தியிலேயே -இந்தச் சினிமாப் பிரதி' ஒன்றும் வெளிவந்திருக்கிறது.
குறித்த அணியின் முக்கிய தளபதியாக இருந்த இவர் பற்றி - குறித்த 'இனவாதம் க்ககும் அமைச்சரும்- அந்த இராணுவ அதிகாரியும்- புலனாய்வுக்கு ஒரு சொல்லுச்சொல்லி-விசாரிக்க முடியாதா? அல்லது- குண்டு விழுந்த இடத்தில் மரித்த தாயும் மகவும் பற்றிய 'திரட்டின்' மூலம் யாரென அறிய முடியாதா? இதெல்லாம் அறியாமலா இப் பெண் பேட்டி கொடுப்பார்?..இந்தத' திரைப்படப் பிரதியின் கிளைமாக்ஸ் காட்சிகள் தான்- தமிழ் அரசியற் கட்சிகள் தமிழகத் தலைவர்கள்- போராட்டம் பற்றிக் கதைக்கும் (புலம்பெயரந்தவர்கள்) பற்றிய விடயமாகும்..! ஒரு விவரணத் திரைப்படப் பிரதிக்கு பட்ஜட் தயாரிக்கும்போது- முதலில் நோக்கம் குறிப்பிடப்படும்- அடுத்தது- நோக்கத்தை காட்சியமைப்பில் காட்ட எடுக்கும்'செக்மண்ட்ஸிற்கான' சுருக்கம் தமது மேலாளருக்கு அல்லது நிறைவேற்று இயக்குனருக்கக் காட்டப்படும். ஒரு திரைப்படத்திற்குரிய மொழியில்எளிதாகச் சொல்வதானால்- 1. நோக்கம் வெறுப்பினை உருவாக்கல். படிமுறைகள்:- 1தனது மீதான வெறுப்பை நேயர்களுக்குச் சொல்லுதல். 2. நேயர்களை தன் மீது வெறுக்கச் செயதல். 3. நேயர்களை தன்னையும் தன்னைச் சாரந்தவர்களையும் வெறுக்கச் செய்தல். 4. இதற்கு நேயர்களின் வெறுப்பான காரணிகளை பயன்படுத்தல்(அமைச்சர்- அதிகாரி..ஆயதங்கள் உட்செலுத்தல)..5. அடுத்த கட்டம் இதே வெறுப்பை - தமிழத் தலைவர்கள் கட்சிகள் - தமிழகத் தலைவர்கள் மீது இணைத்தல்- நிறைவு!!!!!வரதன் .
05-11-2012, 15:02
 - Posted by Soman
பற்பல இன்னல்கள் மத்தியிலிருந்து மீண்டுவந்த பல சகோதரிகளுக்கு எம்போன்றவர்கள் உதவிகள் செய்யாவிட்டாலும் ஆறுதல் வார்த்தைகள் கூறியாவது அவர்கள் நிம்மதியாக வாழ விடவேண்டுமே தவிர அவர்களைப் பற்றி தூற்றி ஊடகங்களில் எழுதி மீண்டுமொரு இன்னல்களை அவர்களுக்கு உருவாக்கக் கூடாது.
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 

 

 

 

 
.